"என்னை மாதிரி வறுமையான குடும்பத்தில பிறந்து, படிப்பு இல்லாம இருக்கிறவங்க, பொழைக்கறதுக்காகத் திருட்டுத் தொழில்ல ஈடுபடறது சகஜம்தான். மாட்டிக்காம இருக்கணும். ஆனா, நான் மாட்டிக்கிட்டேன். ரெண்டு வருஷம் உள்ளே போட்டுட்டாங்க. ஆமாம், நீ என்ன தப்பு பண்ணிட்டு உள்ளே வந்தே?" என்றான் சத்யா, மாணிக்கத்தைப் பார்த்து.
மாணிக்கம் மௌனமாக இருந்தான்.
"அவரு எல்லாம் வேற விதம்ப்பா! நம்மை மாதிரி பிக் பாக்கெட் அடிக்கிறது, வீடு புகுந்து திருடறது எல்லாம் இல்ல. ஜென்டில்மேன்னு சொல்வாங்களே, அது மாதிரி ஆளு அவரு!" என்றான் சேகர் என்ற மற்றொரு கைதி.
மற்ற கைதிகள் இதைக் கேட்டுச் சிரித்தனர்.
"ஓ, ஒயிட் காலர் கிரைம்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரிக் குற்றம் செஞ்ச ஆளா நீ" என்றான் ஓரளவு படித்திருந்த ஒரு கைதி.
மாணிக்கம் தலை குனிந்தபடி, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்.
மாணிக்கத்தைப் பார்க்க சிறைக்கு வந்திருந்த அவன் அம்மா மங்களம், "உனக்கு ஏண்டா இந்த கதி!" என்று அழுதாள்.
சற்று நேரம் மகனுடன் பொதுவாகப் பேசிய பிறகு, "அடுத்த வாரம் உன் அப்பாவோட சடங்கு வருது. அவரு போனதிலேந்து, அஞ்சு வருஷமா, ஐயரை வச்சு முறையா அவருக்கு சடங்கு செஞ்சுக்கிட்டிருந்தே. இந்த வருஷம் அது நடக்காது!" என்றாள் வருத்தத்துடன்.
மாணிக்கம் தன் தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தான். எவ்வளவு பெரிய மனிதர் அவர்! ஊரில் அவருக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது!
தன் அப்பாவின் நற்பெயரே தனக்கு ஒரு பெரிய சொத்தாக இருந்தும், அப்பா மறைந்த பிறகு, சோம்பலினால் நீண்ட காலம் வேலைக்கு முயற்சி செய்யாமல் இருந்து விட்டு, பிறகு குடும்ப நிலை மோசமானதும், வேறு வழி இல்லாமல் ஒரு சிறிய வேலையில் சேர்ந்து, வருமானம் போதாததால், முதலாளியின் கையெழுத்தைப் போட்டுக் காசோலையையை மாற்ற முயன்று மாட்டிக் கொண்டு, இப்போது சிறையில் இருக்கும் நிலைமைக்கு வந்திருப்பதை நினைத்தான்.
'அப்பாவோட பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி, நான் அவருக்கு செஞ்சிருக்கிற துரோகத்தோட ஒப்பிடறப்ப, அவருக்கு சடங்கு செய்ய முடியாம போறது பெரிய விஷயம் இல்லை!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் மாணிக்கம்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)
குறள் 604:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
பொருள்:
சோம்பலில் அகப்பட்டு, சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு, குடியின் பெருமை அழிந்து, குற்றம் பெருகும்.
No comments:
Post a Comment