Sunday, June 12, 2022

601. நூலக உதவியாளர்!

"அவங்க பரம்பரைப் பணக்காரங்களாம். அதோட, ஊர்ல அவங்க குடும்பத்து மேல ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க. யாரைக் கேட்டாலும், 'அவங்களா? அவங்க மாதிரி நல்ல மனுஷங்களைப் பாக்கவே முடியாதே!'ன்னு சொல்றாங்க. இந்த மாதிரி ஒரு சம்பந்தம் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்!" என்றார் அய்யாசாமி.

"அது சரி. மாப்பிள்ளை என்ன செய்யறாரு?" என்றாள் அவர் மனைவி லட்சுமி.

"மாப்பிள்ளை படிச்சிருக்காரு. ஆனா, வேலைக்குப் போகல. அவரோட அப்பா அம்மா இறந்துட்டாங்க. நிறைய சொத்து இருக்கு. மாப்பிள்ளை சொத்துக்களைப் பாத்துக்கிட்டு, ஊரிலேயே இருக்காரு" என்ற அய்யாசாமி, "நீ என்னம்மா சொல்றே?" என்றார், மகள் தங்கத்தைப் பார்த்து.

"நீங்களாப் பார்த்து என்ன செஞ்சாலும் சரி அப்பா!" என்றாள் தங்கம்.

திருமணம் ஆகித் தங்கம் கணவன் வீட்டுக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. தன் கணவன் தண்டபாணி பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதை அவள் கவனித்தாள்.

ஒருநாள் அவனிடம், "ஏங்க,  நீங்க வயலுக்குப் போய்ப் பார்க்க வேண்டாமா?" என்றாள்.

"நான் எதுக்குப் போகணும்? நிலத்தையெல்லாம் குத்தகைக்குத்தானே விட்டிருக்கோம்? அறுவடை ஆனதும் நெல்லை வாங்கிப் போட்டுக்கறதுதான் நம்ம வேலை. அது கூட நமக்கு சாப்பாட்டுக்கு வேணுங்கற நெல்லை மட்டும் கொடுத்துட்டு, மீதி நெல்லை வித்து எங்கிட்ட பணமாக் கொடுத்துடுவாரு குத்தகைக்காரரு!" என்றான் தண்டபாணி, பெருமையுடன்.

'உரிச்ச வாழைப்பழம்!' என்று தனக்குள் முணுமுணுத்த தங்கம், "ஆமாம், நமக்கு ரைஸ்மில் இருக்கே, அங்கே கூட நீங்க போறதில்லையே?" என்றாள்.

"ரைஸ் மில்லுக்கு மானேஜர்னு ஒத்தரை எதுக்குப் போட்டிருக்கோம்? அவர் தினம் சாயந்திரம் வந்து எங்கிட்ட கணக்கு கொடுத்துட்டு, அன்னிக்குக் கிடைச்ச வருமானத்தைக் கொடுத்துட்டுப் போறாரே, பாக்கலியா?"

"உங்க அப்பா, தாத்தா காலத்திலேந்தே இப்படித்தானா?"

"எங்க தாத்தா நிலங்களை அவரேதான் பாத்துக்கிட்டிருந்தாரு. என் அப்பா நிலங்களைக் குத்தகைக்கு வித்துட்டு, ரைஸ் மில் ஆரம்பிச்சு அதைப் பாத்துக்கிட்டிருந்தாரு. இப்ப அது நல்லா ஓட ஆரம்பிச்சுட்டதால, நான் அதுக்கு ஒரு மானேஜரைப் போட்டு நடத்திக்கிட்டிருக்கேன்!" என்றான் தண்டபாணி பெருமையுடன்.

"நீங்க புதுசா ஏதாவது தொழில் ஆரம்பிக்கப் போறீங்களா என்ன?" என்றாள் தங்கம்.

"இல்லையே! எதுக்குக் கேக்கற?"

"உங்க தாத்தா நிலங்களைப் பாத்துக்கிட்டிருந்தாரு. உங்க அப்பா ரைஸ் மில் ஆரம்பச்சு நடத்தினாரு. நீங்க ரெண்டையுமே பாத்துக்கறதில்லையே, அதான் கேட்டேன்!"

"அதுதான் உன்னைப் பாத்துக்கறேனே, அது போதாதா?" என்றான் தண்டபாணி.

சில நாட்கள் கழித்து, "என்னங்க, இந்த ஊர்ல ஒரு இலவச நூலகம் இருக்கு இல்ல?" என்றாள் தங்கம்.

"ஆமாம். ஒரு வயசான அம்மா நடத்திக்கிட்டிருக்காங்க. நான் கூடப் போய்ப் பார்த்தேன். ஆனா, எனக்குப் புத்தகங்கள் படிக்கிறதில ஆர்வம் இல்ல. அதனால சும்மா பாத்துட்டு வந்துட்டேன். நல்லா நடத்தறாங்க. இவ்வளவு புத்தகங்களை எப்படி வாங்கினாங்கன்னு தெரியல. எதுக்கு ஒரு லைப்ரரி வச்சு, அதை எல்லாரும் படிக்கறதுக்கு இலவசமாக் கொடுக்கறாங்கன்னும் தெரியல! ஆனா, வயசான காலத்தில ரொம்ப கஷ்டப்பட்டு இதைச் செய்யறாங்க."

"ஆமாம். அவங்களுக்குக் கஷ்டமாத்தான் இருக்காம். உதவிக்கு யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. நான் அங்கே போய் அவங்களுக்கு உதவி செய்யலாம்னு பாக்கறேன்!" என்றாள் தங்கம்.

"உனக்கு எதுக்கு இந்த வேலை? நமக்குப் பணம் தேவையில்ல. அவங்களால அதிகமா சம்பளம் கொடுக்கவும் முடியாது!" என்றான் தண்டபாணி.

"சம்பளத்துக்கு இல்லேங்க. சும்மாதான் அவங்களுக்கு உதவியா இருக்கலாம்னு பாக்கறேன்."

"ஏன், வீட்டில உனக்குப் பொழுது போகலியா? பொழுது போகலேன்னா அந்த லைப்ரரியிலேந்து புத்தகம் வாங்கிப் படி!"

தங்கம் சற்றுத் தயங்கி விட்டு, "அதுக்கில்லீங்க. நம்ம குடும்பத்துக்கு ஊர்ல நல்ல மதிப்பு இருக்கு. உங்க அப்பா, தாத்தா எல்லாரும் தொழிலையோ, விவசாயத்தையோ பாத்துக்கிட்டிருந்தாங்க. ஆனா, நீங்க ரெண்டையுமே பாக்கல. எதுவும் செய்யாம நாம சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா, நம்ம குடும்பத்துக்கு இருக்கிற நல்ல பேரும், மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாத் தேஞ்சுடும். நாம ஏதாவது ஒரு செயல்ல ஈடுபட்டுக்கிட்டிருந்தாதான், நம்ம குடும்பத்துக்கு இருக்கிற மதிப்பு தொடர்ந்து இருக்கும். அதனால நீங்க உங்களை ஏதாவது ஒரு வேலையில ஈடுபடுத்திக்கற வரையில, நான் இது மாதிரி சின்னதா ஏதாவது வேலை பார்க்கலாம்னு நினைக்கிறேன்" என்றாள். 

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 601:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

பொருள்:
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால், அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...