Thursday, June 30, 2022

605. விஸ்வநாதா, வேலை தேடு!

"ஏண்டா படிப்பை முடிச்சுட்டே. வேலைக்கு முயற்சி பண்ண வேண்டாமா?" என்றார் அருணாசலம்.

"பண்ணிக்கிட்டுத்தானேப்பா இருக்கேன்?" என்றான் விஸ்வநாதன்.

"என்னத்தை பண்ற? பரீட்சை எழுதினவுடனேயே பேப்பரைப் பாத்து அப்ளிகேஷன் போடுன்னு சொன்னேன். நீ கேக்கல?"

"ரிசல்ட் வந்தப்பறம்தானே அப்பா அப்ளை பண்ண முடியும்?"

"ரிசல்ட்டை எதிர்பார்க்கறவங்க கூட விண்ணப்பிக்கலாம்னு எத்தனையோ விளம்பரங்கள்ள வந்திருக்கு. நான் அதைப் பாத்துட்டு உங்கிட்ட எடுத்துக் கொடுத்திருக்கேன். ஆனா நீ எல்லாத்துக்கும் விண்ணப்பிக்கல. ஒண்ணு ரெண்டுக்குத்தான் விண்ணப்பம் போட்ட!"

"பரீட்சை முடிஞ்சப்பறம் கொஞ்ச நாள் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு நினைச்சேன்!"

"வேலை தேடிக்கிறது வாழ்க்கையில முக்கியம் இல்லையா? வேலை கிடைச்சப்பறம் ரிலாக்ஸ்டா இருக்கலாமே! உன் ஃபிரண்ட் ரகுவைப் பாரு. பரீட்சை முடிஞ்ச அடுத்த நாள்ளேந்து பேப்பர்ல விளம்பரங்களைப் பாத்து தனக்குப் பொருத்தமான வேலை அத்தனைக்கும் விண்ணப்பம் போட்டான். இப்ப அவனுக்கு ஒரு நல்ல கம்பெனியிலேந்து இன்டர்வியூ வந்திருக்கு!"

"அவன் ஒரு புத்தகப் புழுப்பா, காலேஜில படிக்கறப்ப புத்தகங்களைப் படிச்சுக்கிட்டிருந்தான். இப்ப பேப்பர்ல விளம்பரங்களைப் படிச்சுக்கிட்டிருக்கான். வேலை  கிடைச்சாலும் இன்னும் நல்ல வேலை கிடைக்குமான்னு பேப்பர் விளம்பரங்கள்ள தேடிக்கிட்டிருப்பான். ரிடயர் ஆனப்பறம் கூட அப்படித்தான் பண்ணுவான். அவனை மாதிரி என்னால இருக்க முடியாது!"

"அவனை மாதிரி இருக்க வேண்டாம். பரீட்சை முடிஞ்சு ரெண்டு மாசம் ஜாலியா இருந்துட்ட. பத்து மணி வரையிலும் தூங்கின, ஊரைச் சுத்தின. இப்ப ரிசல்ட் வந்து புரொவிஷனல் சர்ட்டிஃபிகேட் கூட வாங்கியாச்சு. தினம் ஒரு அரை மணி நேரம் பேப்பர்ல வேலை விளம்பரங்களைப் பாக்கலாம் இல்ல? 

"நான் பாக்கறப்பல்லாம் பேசும் படம், பொம்மைன்னு சினிமாப் பத்திரிகைகளைப் படிச்சுக்கிட்டிருக்க. பொது அறிவை வளர்த்துக்க எதையாவது படிச்சா உபயோகமா இருக்கும்! நான் பேப்பர்ல தேடிப் பார்த்து விளம்பரங்களைத் தேடி எடுத்து உங்கிட்ட காட்டினா அதுக்கும் அப்ளிகேஷன் போட மாட்டேங்கற!"

"நீங்க காட்டினதுக்கெல்லாம் விண்ணப்பம் போட்டேனே அப்பா!"

"எங்க போட்ட? நான் பத்து காட்டினா, அதில ரெண்டு, மூணுக்குத்தான் போடற. அதுவும் நான் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தனதால. சில சமயம் மறந்துட்டேன்னு சொல்லுவ. அதுக்குள்ள கடைசித் தேதி முடிஞ்சிருக்கும். 

"நீ படிப்பை முடிச்சு அஞ்சு மாசம் ஆச்சு. உன்னோட படிச்சவங்கள்ள ஏழெட்டு பேரு வேலைக்குப் போயிட்டாங்க. எனக்குத் தெரியாதவங்க இன்னும் சில பேரு கூடப் போயிருக்கலாம். 

"காலையில பத்து மணிக்குத்தான் எழுந்திருக்கற. அப்புறமும் உருப்படியா ஒண்ணும் செய்யாம சோம்பேறித்தனமா இருக்க. செய்ய வேண்டிய விஷயங்களை நேரத்தில செய்யாம, மறந்து போயிட்டேன்னு சாதாரணாமா சொல்ற! 

"இப்படியே போனா உன் எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு எனக்குக் கவலையா இருக்கு!" என்றார் அருணாசலம் கவலையுடனும், வருத்தத்துடனும்.

"இனிமே சுறுசுறுப்பா இருக்கேம்ப்பா. என்னை மாத்திக்கறேன்!" என்றான் விஸ்வநாதன்.

ஆனால் விஸ்வநாதன்.தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யவில்லை.

விஸ்வநாதன் படிப்பை முடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை. இப்போதெல்லாம்  அருணாசலம் தன் மகனுக்காக வேலை விளம்பரங்களைப் பார்ப்பதில்லை. சலிப்படைந்து ஓய்ந்து விட்டார்.

"பப்ளிக் செக்டார்ல புதுசா ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கறாங்க. நிறைய பேரை வேலைக்கு எடுக்கப் போறாங்க. இன்னிக்கு பேப்பர்ல விளம்பரம் வந்திருக்கு. இதுக்கு அப்ளை பண்ணினா நமக்கு வேலை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கு. நல்ல கம்பெனி, நல்ல வேலை. நல்ல சம்பளம். வாழ்க்கையில செட்டில் ஆயிடலாம்! நான் இன்னிக்கே அப்ளை பண்ணப் போறேன். நீயும் பண்ணிடு" என்றான் விஸ்வநாதனின் நண்பன் குமார்.

"பண்ணிடறேன்!" என்றான் விஸ்வநாதன்.

வீட்டுக்குப் போனதும் பேப்பரை எடுத்து அந்த விளம்பரத்தைப் பார்க்க நினைத்த விஸ்வநாதன், வீட்டில் அப்பா இருந்ததால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான். அப்பாவுக்குத் தெரிந்தால் இன்றைக்கே விண்ணப்பம் போடச் சொல்லி அவசரப்படுத்துவார். 

அதுதான் நேரம் இருக்கிறதே என்று அடுத்த இரண்டு மூன்று நாட்கள் பேசாமல் இருந்து விட்டான். 

அதன் பிறகு வீட்டுக்கு யாரோ உறவினர்கள் வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டுப் போனதில் விஸ்வநாதனின் கவனம் சிதறியது. உறவினர்கள் சென்ற பிறகு, விஸ்வநாதனுக்கு அந்த விஷயம் மறந்தே போய் விட்டது.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த விஷயம் நினைவுக்கு வந்ததும் விளம்பரம் வந்த பேப்பரைத் தேடினான் விஸ்வநாதன். அது எந்தத் தேதி என்று நினவுக்கு வரவில்லை. பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு பேப்பராக எடுத்துத் தேடினான்.

விளம்பரம் கிடைக்கவில்லை.

குமார் விளம்பரத்தை வெட்டி வைத்திருப்பான். ஆனால் அவன் ஊரில் இல்லை.

சரியாகப் பார்த்திருக்க மாட்டோம் என்று நினைத்து மீண்டும் தேட நினைத்தான். சோம்பலாக இருந்ததால் அடுத்த நாள் தேடலாம் என்று நினைத்து அன்றைய தேடலை முடித்துக் கொண்டான்.

அடுத்த நாள் மீண்டும் பொறுமையாகத் தேடியபோது விளம்பரம் கிடைத்தது.

'அப்பாடா!' என்று நிம்மதியடைந்து விளம்பரத்தைப் பார்த்தபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது.

வேலைக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற, தபால் தலை ஒட்டிய உறையைடன் டில்லியில் இருக்கும் அந்தப் பொதுத்துறை நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களிடமிருந்து விண்ணப்பப் படிவம் வந்ததும், அதைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களின் நகல்களையும், பத்து ரூபாய் போஸ்டல்  ஆர்டரையும் இணைத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்றடைவதற்கான கடைசித்தேதிக்கு ஐந்து நாட்கள்தான் இருந்தன. டெல்லி அலுவலகத்துக்கு தபால்தலை ஒட்டிய உறையை அனுப்பி அவர்களிடமிருந்து விண்ணப்பம் வர குறைந்தது நான்கு நாட்கள் ஆகும். 

அதற்குப் பிறகு அன்றே விண்ணப்பத்தை அனுப்பினாலும் அது டில்லி அலுவலகத்தை அடையக் குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். இடையில் ஒரு ஞாயிற்றுக் கிழமை வேறு வருகிறது. அதனால் விண்ணப்பம் போய்ச் சேரும்போது கடைசித்தேதி தாண்டி இருக்கும்!

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது இயலாத செயல் என்று நினைத்து பேப்பரை மூடி வைத்தான் விஸ்வநாதன். 

கொஞ்சம் சோம்பல் படாமல் இருந்திருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கலாமே என்ற இலேசான வருதம் அவன் மனதில் எழுந்தது.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த அருணசலம், மகன் பழைய பேப்பர்களை எடுத்து வைத்து விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, 'பரவாயில்லை. இப்பவாவது இவனுக்குப் பொறுப்பு வந்திருக்கே!' என்று நினைத்துக் கொண்டார்.

மூன்று மாதங்கள் கழித்து குமாருக்கு அந்தப் பொதுத்துறை நிறுவனத்திலிருந்து வேலை நியமன உத்தரவு வந்தது.

"எனக்கே இந்த வேலை கிடைச்சிருக்கறப்ப உனக்கு இது நிச்சயமாக் கிடைச்சிருக்கும். என்னை விட நீ எல்லா விதத்திலேயும் பிரைட்டாச்சே! நீ ஏண்டா அப்ளை பண்ணாம விட்டே?" என்றான் குமார்.

தன் சோம்பேறித்தனத்தால் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற எண்ணம் முதல் முறையாகத் தோன்றி விஸ்வநாதனின் மனதை அழுத்தியது.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

பொருள்:
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாகும்.

குறள் 606 (விரைவில்)
      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...