Friday, May 27, 2022

590. ஓய்வுக்குப் பின் ஒரு வேலை!

"ரிடயர் ஆகி ரெண்டு மாசம் ஆயிடுச்சு. பர்சேஸ் மானேஜர்னு நல்ல வேலை, நல்ல சம்பளம். குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சுட்டீங்க. ஆனா ஏன் ரிடயர்மென்ட்டுக்கு அப்புறம் ரொம்ப சோர்வா இருக்கீங்க?" என்றாள் வசந்தி.

"இவ்வளவு வருஷம் உழைச்சதுக்கு இவ்வளவுதான் பலனான்னு சில சமயம் தோணுது" என்றார் சிவகுமார்.

"இன்னும் என்ன எதிர்பாக்கறீங்க? உங்களுக்கு வர வேண்டிய பி எஃப் கிராசுவிடி எல்லாம்தான் வந்துடுச்சே!" என்றாள் வசந்தி புரியாதவளாக.

"ஒண்ணுமில்ல. இத்தனை நாளா சுறுசுறுப்பா வேலை பாத்துட்டு இப்ப சும்மா இருக்கறதால கூட இருக்கலாம்" என்று மனைவியிடம் கூறினாலும், தன் மன ஆழத்தில் இருந்த குறையை சிவகுமார் உணர்ந்தே இருந்தார். 

"வசந்தி! எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு!" என்றார் சிவகுமார் உற்சாகத்துடன்.

"வேலையா? என்ன வேலை? எவ்வளவு சம்பளம்? நீங்க மறுபடி வேலைக்குப் போகணுமா என்ன?" என்று பல கேள்விகளை அடுக்கினாள் வசந்தி.

"ஒரு கம்பெனியில கன்சல்டன்ட்.  சம்பளத்தைக் கேட்டா நீ மூர்ச்சை போட்டுடவே. நான் வேலையில இருந்தப்ப வாங்கின சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு. ஆஃபீசுக்குப் போக வேண்டாம். வீட்டிலேந்தே கம்ப்யூட்டர்ல வேலை செய்ய வேண்டியதுதான். அதோட நமக்குப் பெரிய வீடு, நம் சொந்த உபயோகத்துக்காக டிரைவரோட கார் எல்லாம் கொடுக்கறாங்க!"

"ஆச்சரியமா இருக்கே! ரிடயர் ஆனப்பறம் கிடைச்ச வேலைக்கு இவ்வளவு சம்பளமா! வீடு, கார் எல்லாம் வேற கொடுக்கறதா சொல்றீங்க. நாம சொந்த வீட்டிலதானே இருக்கோம்? நமக்கு எதுக்கு வீடு?"

"இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு அங்கே போயிடலாம். ஏன்னா, அது பெரிய வீடு. எங்கே இருக்கு தெரியுமா?" என்று இடத்தின் பெயரைச் சொன்னார் சிவகுமார்

"அங்கேயா? அங்கே கம்பெனி எம் டி, சேர்மன் மாதிரி  ரொம்பப் பெரிய ஆளுங்கதான் இருப்பாங்கன்னு கேள்விப்படிருக்கேன்!"

"ஆமாம். அதெல்லாம் கம்பெனி லீஸ்ல இருக்கற வீடுகள்தான். தனிநபர்கள் யாரும் அவ்வளவு வாடகை கொடுத்து அங்கே போக மாட்டாங்க!"

"நீங்க எப்ப இந்த வேலைக்கு அப்ளை பண்ணினீங்க? இன்டர்வியூவுக்குக் கூட எங்கேயும் போகலியே!" என்றாள் வசந்தி.

";நான் அப்ளை பண்ணல. பழைய கம்பெனியிலேந்து என்னைப் பத்திக் கேள்விப்பட்டு அவங்களே இந்த வேலையைக் கொடுத்திருக்காங்க. இன்டர்வியூ எல்லாம் எதுவும் இல்ல. ஃபோன் பண்ணி இந்த வேலையை ஏத்துக்கிறீங்களான்னு கேட்டாங்க."

"நீங்க என்ன சொன்னீங்க?"

"ஏத்துக்கலாம். சம்பளம் ரொம்பக் குறைச்சலா இருக்கேன்னு சொன்னேன்!" என்று சொல்லிச் சிரித்தார் சிவகுமார்.

ஓய்வு பெற்றதிலிருந்து சோர்வுடன் இருந்த கணவரை உற்சாகப்படுத்த இப்படி ஒரு வாய்ப்பு அதிர்ஷ்டகரமாக வந்ததை நினைத்து வியந்தாள் வசந்தி.

புதிய விட்டில் சிவகுமார் ஒரு அறையைத் தன் அலுவலக அறையாக வைத்துக் கொண்டார். அங்கே ஒரு கம்ப்யூட்டரில்தான் அவருடைய வேலை.

ஆனால் சிவகுமார் சற்று நேரமே அறையில் அமர்ந்திருப்பதையும், பெரும்பாலான நேரங்களில் ஹாலில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, தன்னிடம் பேசிக் கொண்டோ இருப்பதையும் பார்த்த வசந்தி அவருக்கு வேலை அதிகம் இல்லை என்று புரிந்து கொண்டாள்.

"கன்சல்டனட்னா சில சமயம்தான் வேலை இருக்கும். நான் செய்யற வேலையோட மதிப்புதான் கணக்கு, நான் எவ்வளவு நேரம் வேலை செய்யறேங்கறது கணக்கு இல்ல!" என்றார் சிவகுமார் அவள் கேட்காமலே.

காரில் தன் விருப்பப்படி வெளியே போய் வருவது வசந்திக்கு வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

"என்ன சிவகுமார், எப்படி இருக்கீங்க?" என்றார் ஃபோனில் பேசியவர்.

"ரொம்ப நல்லா இருக்கேன் சார். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி!" என்றார் சிவகுமார்.

"கல்யாணப் பரிசுன்னு ஒரு திரைப்படத்தில தங்கவேலு மன்னார் அண்ட் கம்பெனிங்கற இல்லாத ஒரு கம்பெனிக்கு மானேஜர்ன்னு தன்னை சொல்லிப்பாரு. அது மாதிரி இல்லாத ஒரு கம்பெனியில பர்சேஸ் மானேஜர்னு சொல்லிக்கிட்டு அரசாங்கத்துக்காக பல ரகசிய வேலைகளை நீங்க செஞ்சிருக்கீங்க. நாட்டுப் பாதுகாப்புக்கு உங்க பங்களிப்புக்கு  நிறைய மதிப்பு உண்டு. ரிஸ்க் எடுத்துக்கிட்டு நீங்க செஞ்ச வேலைகளுக்கு உங்களுக்கு எவ்வளவு வெகுமதி கொடுத்தாலும் தகும். உங்களுக்குத் தெரியும், நாங்க ரொம்ப டிஸ்கிரீட்டா இருக்கணும். அதனாலதான் ஏற்பாடு செய்ய கொஞ்சம் கால தாமதமாயிடுச்சு. நீங்க கூட, என்னடா இவங்க நம்மை கவனிக்காம ஒரு சாதாரண ரிடயர்மென்ட் பாக்கேஜ் கொடுத்து அனுப்பிட்டாங்களேன்னு நினைச்சிருக்கலாம்."

"நிச்சயமா அப்படி நினைக்கல சார்!" என்று பொய் சொன்னாஃ சிவகுமார். தொடர்ந்து, "இப்ப கூட அந்த மாதிரி வேலைகளைச் செய்ய நான் தயார்" என்றார்.

"வேண்டாம் சிவகுமார். நீங்க கஷ்டப்பட்டு செஞ்ச வேலைகளுக்குப் பரிசாத்தான் உங்களுக்கு இந்த வேலையில்லாத வேலையைக் கொடுத்திருக்கோம். உங்க ரிடயர்மென்ட்டை அனுபவியுங்க!" என்று சொல்லி ஃபோனை வைத்தார் மறுமுனையில் பேசியவர்.

கணினியில் தான் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படத்தைத் தொடர்ந்து பார்க்க முயன்ற சிவகுமார் அறைக்கதவைத் திறந்து கொண்டு மனைவி வருவதைப் பார்த்து சட்டென்று கணினியில் வேறொரு வலைப்பக்கத்தைத் திறந்து வைத்தார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 59
ஒற்றாடல்

குறள் 590:
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

பொருள்:
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்க வேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகி விடும்.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...