Wednesday, May 25, 2022

589. மூன்று நாட்கள் அவகாசம்!

"எதுக்கு என்னை அவசரமாப் பாக்கணும்னு சொன்னீங்க?" என்றார் அமைச்சர்.

"ஒரு முக்கியமான தகவல் வந்திருக்கு" என்றார் உளவுத்துறைத் தலைவர் நிர்மல்.

"சொல்லுங்க!"

நிர்மல் கூறிய தகவலைக் கேட்டதும் அதிர்ந்து போன அமைச்சர், "இது ரொம்ப சீரியஸான விஷயமாச்சே! இப்பவே நான் இதை பிரதமர்கிட்ட  சொல்லி என்ன நடவடிக்கை எடுக்கறதுன்னு தீர்மானிக்கணும்" என்றார் பரபரப்புடன்.

"இல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க."

"எதுக்கு? இது எவ்வளவு சீரியசான விஷயம்னு உங்களுக்குப் புரியலியா?"

"நல்லாவே புரியுது. ஆனா எனக்கு இன்னொரு கான்டாக்ட்கிட்டேந்து வேற ஒரு தகவல் வந்திருக்கு!"

"இது என்ன குழப்பம்? ஏன் ரெண்டு கான்டாக்ட்களை ஒரே விஷயத்தில ஈடுபடுத்திறீங்க? இது வேஸ்ட் ஆஃப் மேன்பவர். அதோட இது மாதிரி குழப்பங்களுக்கும் வழி வகுக்குதே!"என்றார் அமைச்சர்.

"சார்! உளவு பாக்கறதில சில நுணுக்கங்கள் இருக்கு. நிறைய அனுபவம்உள்ள என்னோட  சீனியர்கள் எனக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்காங்க. ரொம்ப முக்கியமான தகவல்களை ரெண்டு சோர்ஸ் மூலமா சரிபாக்கணுங்கறது ஒரு எழுதப்படாத விதியாகவே இருக்கு" என்று விளக்க முற்பட்டார் நிர்மல்.

"இந்த விவரங்கள் எல்லாம் எனக்கு வேண்டாம். இப்ப என்ன சொல்றீங்க? எந்தத் தகவல் சரின்னு சொல்றீங்க?" என்றார் அமைச்சர் பொறுமையில்லாமல்.

"எனக்கு மூணு நாள் அவகாசம் கொடுங்க" என்றார் நிர்மல்.

"தாமதப்படுத்தினா நிலைமை மோசமாயிடாதா?"

""மூணு நாள் தாமதிக்கிறதால ஒண்ணும் ஆயிடாதுன்னு நினைக்கிறேன். அதுக்குள்ள அவசர நிலைமை ஏதாவது ஏற்பட்டா நான் உங்ககிட்ட வந்து சொல்றேன்!" என்று சொல்லி விட்டு அமைச்சரின் பதிலுக்குக் காத்திருக்காமல் தன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியேறினார் நிர்மல்.

"என்ன மிஸ்டர் நிர்மல்? ரெண்டு நாளா உங்களுக்கு ஃபோன் பண்ணிக்கிட்டிருக்கேன். ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கீங்க. உங்க ஆஃபீஸ்ல கேட்டா நீங்க எங்கே போனீங்கன்னே தெரியலைங்கறாங்க. அன்னிக்கு நீங்க சொன்ன விஷயத்தைக் கேட்டதிலேந்து எனக்கு ஒரே டென்ஸா இருக்கு!" என்றார் அமைச்சர், தன் அறைக்குள் நுழைந்த நிர்மலைப் பார்த்து.

"மன்னிச்சுக்கங்க சார்! உங்க டென்ஷனை அதிகப்படுத்தற செய்தியோடதான் நான் வந்திருக்கேன். அன்னிக்கு நான் சொன்ன தகவல் சரிதான். நாம உடனே நடவடிக்கை எடுக்கணும்!" என்றார் நிர்மல் இருக்கையில் அமர்ந்து கொண்டே.

" மை குட்னெஸ்! மூணு நாளை வீணாக்கிட்டமே! இதை நீங்க அன்னிக்கே உறுதியா சொல்லி இருந்தா நாம இத்தனை நேரம் நடவடிக்கை எடுத்திருக்கலாம்!" என்றார் அமைச்சர் குற்றம் சாட்டும் விதமாக.

"என்ன செய்யறது சார்? இது மாதிரி தகவல்களையெல்லாம் உறுதிப்படுத்தறது அவ்வளவு சுலபம் இல்லை. தகவல் தப்பா இருந்துடக் கூடாதுங்கறதுக்காகத்தான் ரெண்டு சோர்ஸைப் பயன்படுத்தறோம். அந்த ரெண்டு சோர்ஸும் வேற விதமா தகவல் சொல்றப்ப ஒரு வலுவான மூணாவது சோர்ஸைப் பயன்படுத்த வேண்டி இருக்கு!"

"கிரிக்கெட் மேட்ச்ல தேர்ட் அம்பயர் மாதிரியா?" என்றார் அமைச்சர். இப்போது அவருடைய இறுக்கம் சற்றுத் தளர்வடைந்து விட்டதாகத் தோன்றியது. "ஆனா இந்த ரெண்டு சோர்ஸுக்கு பதிலா முதலிலேயே அந்த வலுவான தேர்ட் சோர்ஸைப் பயன்படுத்தி இருக்கலாமே!" என்றார் தொடர்ந்து.

"கிரிக்கட் மேட்ச்சை தேர்ட் அம்பயரை மட்டுமே வச்சு நடத்தறதில்லையே சார்!" என்றார் நிர்மல் இலேசாகச் சிரித்து.

"சரி. எப்படி திடீர்னு ஒரு தேர்ட் சோர்ஸ் கிடைச்சது உங்களுக்கு? அவர் சொல்றது எந்த அளவுக்கு நம்மால நம்ப முடியும்?"

"தேர்ட் சோர்ஸ்ங்கறது எப்பவுமே இருக்கறதுதான். ஆனா தேர்ட் அம்பயர் மாதிரி அவரை எப்பவாவதுதான் பயன்படுத்தணும். அவரை நம்ப முடியுமான்னு கேட்டீங்க. முதல்ல அவரு நிறைய அனுபவம் உள்ளவர். ரெண்டாவது நான் அவரை நம்பித்தான் ஆகணும்! என்னையே நான் நம்பலேன்னா எப்படி?"

"என்ன சொல்றீங்க"

"நானே நேரில போய்த் தகவல்களைச் சரி பார்த்துட்டு வந்தேன். மூணு நாளா நான் நம்ப நாட்டிலேயே இல்லை. இது என்னைத் தவிர வேற யாருக்குமே தெரியாது. அதனாலதான் உங்களால என்னைப் பிடிக்க முடியல!" என்றார் நிர்மல்

அமைச்சர் நிர்மலை பிரமிப்புடனும், புதிய மரியாதையுடனும் பார்த்தார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 59
ஒற்றாடல்

குறள் 589:
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்ஒரு முக்கி
சொற்றொக்க தேறப் படும்.

பொருள்: 
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...