Monday, May 23, 2022

587. ஆதாரத்தைத் தேடி...

"ராம்கோபால் இந்த கான்டிராக்டில நிச்சயமா ஒரு பெரிய தொகையை வாங்கி இருக்காரு. ஆனா நம்மால அதை நிரூபிக்க முடியாது. அவரே ஒத்துக்கிட்டாத்தான் உண்டு. நம் நிலைமை எவ்வளவு பரிதாபமா இருக்கு பாருங்க!" என்றார் நிர்வாக இயக்குனர் சாந்தாராம்.

விஜிலன்ஸ் அதிகாரி தயாளன் மௌனமாக இருந்தார்.

'நம் கண்ணுக்கு முன்னால் ஒரு ஊழல் நடந்திருக்கு. ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே உங்களால்!' என்று தன்னைப் பார்த்து நிர்வாக இயக்குனர் கேள்வி எழுப்புவதாக தயாளனுக்குத் தோன்றியது.

டுத்த சில நாட்களுக்கு ராம்கோபாலை நெருக்கபாகக் கண்காணித்தார் தயாளன். விஜிலன்ஸ் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் ராம்கோபாலுக்குத் தெரியும் என்பதால் தனக்குத் தெரிந்த ஒரு தனியார் துப்பறியும் நிறுவன உரிமையாளர் மூலம் இதைச் செய்தார்.

இதற்காகத் தனது நிறுவனத்திலிருந்து கட்டணம் எதுவும் செலுத்த முடியாது என்றும் தன் சொந்தச் செலவில்தான் இதைச் செய்வதாகவும் தன் நண்பரிடம் கூறி சற்று குறைந்த கட்டணத்துக்கு அவரை இதைச் செய்ய ஒப்புக் கொள்ள வைத்தார். 

மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு பயனுள்ள தகவல் கிடைத்தது. 

ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் தன் நண்பர் ஒருவருடன் ஒரு கிளப்புக்குப் போகும் வழக்கம் ராம்கோபாலுக்கு இருப்பதைத் துப்பறியும் நிறுவனம் கண்டுபிடித்துச் சொன்னதும் அவர்களுக்குச் சேர வேண்டிய கட்டணத்தைக் கொடுத்து அவர்கள் சேவையை முடித்துக் கொண்டார் தயாளன். 

மூன்று நாட்களுக்கான கட்டணம் அவ்வளவு அதிகமாக இல்லை என்பது தயாளனுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அந்தத் தகவல் பயனளிக்குமா என்று பார்க்க வேண்டும்!

'இந்த முயற்சி வெற்றி அடைந்தால் நிர்வாக இயக்குனரிடம் சொல்லி செலவான தொகையை நிறுவனத்திலிருந்து பெற முடியும். பார்க்கலாம்!'

"பிரில்லியன்ட்! எப்படி இதை ரிகார்ட் பண்ணினீங்க?" என்றார் சாந்தாரம் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும்.

"ராம்கோபால் ஒவ்வொரு சனிக்கிழமையும் தன் நண்பர் ஒத்தரோட ஒரு கிளப்புக்குப் போவார்னு தெரிஞ்சது. பொதுவா இந்த மாதிரி ஆட்கள் தங்களோட தவறான செயல்களைக் கூட பெரிய சாதனை மாதிரி தங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட பெருமையா பேசிப்பாங்க. அதனால அந்த நண்பரைப் பிடிச்சு அவர்கிட்ட ஒரு செல்ஃபோனைக் கொடுத்து கிளப்பில இருக்கும்போது அதிலேந்து எனக்கு கால் பண்ணி ஃபோனை அப்படியே வச்சிருக்கணும்னு சொன்னேன். ராம்கோபால்கிட்டேந்து தகவல் வரவழைக்க இயல்பா கேக்கற மாதிரி கேட்க வேண்டிய சில கேள்விகளைக் கேட்கவும் அவருக்கு சொல்லிக் கொடுத்தேன்.

""மூணு சனிக்கிழமையும் சாயந்திரம் மூணு மணி நேரம் அந்த ஃபோன்ல அவங்க பேசறதைக் கேட்டுக்கிட்டே இருந்தேன். மனுஷன் எவ்வளவோ விஷயங்களைப் பத்திப் பேசினாரு. ஆனா இதைப் பத்திப் பேசல!அவர் நண்பர்தான் பாவம் அவங்க பேசறதை நான் கேட்டுக்கிட்டிருப்பேன்னு தெரிஞ்சதால பயந்து பயந்து பேசினாரு. 

"நாலாவது சனிக்கிழமைதான் ஜாக்பாட் அடிச்சது. அந்த கான்டிராக்ட்ல லஞ்சம் வாங்கி உங்களை ஏமாத்தினதைப் பத்தி ரொம்ப பெருமையாப் பேசி இருக்காரு ராம்கோபால். சாரி!" என்றார் தயாளன்.

"அதைப் பத்தி எனக்கு ஒண்ணும் இல்ல. நான் ஒண்ணும் செய்ய முடியாதவனாத்தானே இருந்திருக்கேன்! ஆனா, ராம்கோபால் தன் நண்பர்கிட்ட பேசினதை உங்க ஃபோன்ல கேட்டு ரிகார்ட் பண்ணி இருக்கீங்களே, இது சட்டப்படி செல்லுமா?" என்றார் சாந்தாராம்.

"அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. நான் ராம்கோபாலைக் கூப்பிட்டு அவர்கிட்ட இந்த ரிகார்டிங்கைப் போட்டுக் காட்டினாலே அவரு எல்லாத்தையும் ஒத்துப்பாரு. வெளியில ரொம்ப தைரியமானவங்களாக் காட்டிக்கிட்டாலும் இந்த மாதிரி ஆசாமிகள்ளாம் கோழைங்க. தப்பு பண்ணிட்டு எப்ப மாட்டிப்பமோ பயந்துகிட்டதான் இருப்பாங்க. விஜிலன்ஸ் அதிகாரி கூப்பிடறார்னாலே பேன்ட்ல ஒண்ணுக்குப் போயிடுவாங்க! எத்தனை பேரைப் பாத்திருக்கேன்! அப்படியே அவர் ஒப்புக்கலேன்னாலும் அவர் நண்பர் வாக்குமூலம் கொடுப்பாரு. அது போதுமே!"

"அது சரி, அவர் நண்பர் எப்படி நீங்க சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாரு?"

"அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அவர் பின்னணியைக் கொஞ்சம் தோண்டி அவர் பண்ணின ஒரு தப்பைக் கண்டுபிடிச்சு அதை வச்சு மிரட்டித்தான் அவரை ஒத்துக்க வச்சேன்!" என்றார் தயாளன் சிரித்தபடி.

"நீங்க பயங்கரமான ஆள்! நான் கூட உங்ககிட்ட எச்சரிக்கையாத்தான் இருக்கணும்னு நினைக்கிறேன்!" என்றார் சாந்தாராம் சிரித்தபடி. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 59
ஒற்றாடல்

குறள் 587:
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று..

பொருள்: 
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...