"நாம் ஆன்மீகப் பணிக்காக இன்னொரு நாட்டுக்கு வந்திருக்கிறோம். நம் பணியை மட்டும் செய்து கொண்டு, வேறு எந்த விவகாரங்களுக்கோ, சர்ச்சைகளுக்கோ இடம் கொடுக்காமல், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!" என்றார் சுவாமி சாந்தானந்தர்.
அவருடைய மூன்று சீடர்களும் தலையசைத்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு, சாந்தானந்தரும் அவருடைய மூன்று சீடர்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டு, காவல் தலைவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
"நீங்கள் இங்கே வந்திருக்கும் உண்மையான காரணத்தைச் சொல்லி விடுங்கள். அப்படிச் சொன்னால், உங்களுக்குக் குறைவான தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!" என்றார் காவல் தலைவர்.
"நாங்கள் இங்கே வந்திருப்பது எங்கள் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பத்தான். அது உங்களுக்குப் பிடிக்காவிட்டால், நாங்கள் எங்கள் நாட்டுக்கே திரும்பிப் போய் விடுகிறோம். எங்களை விட்டு விடுங்கள்!" என்றார் சாந்தானந்தர்.
"அது எப்படி விட முடியும்? இப்போதெல்லாம், ஒற்றர்கள் சாமியார்கள் வேடத்தில் எங்கள் நாட்டுக்குள் வந்த வேவு பார்ப்பது அதிகமாகி விட்டது. சமீபத்தில், அதுபோல் இரண்டு சாமியார்களை நாங்கள் பிடித்து விசாரித்ததில், அவர்கள் உண்மையைக் கக்கி விட்டார்கள்!" என்றார் காவல்துறைத் தலைவர், விஷமமாகச் சிரித்தபடியே.
கக்கி விட்டார்கள் என்று அவர் கூறிய தொனியிலிருந்தே, அவர்கள் எப்படிக் கக்க வைக்கப்படிருப்பார்கள் என்பது குருவுக்கும் அவருடைய மூன்று சீடர்களுக்கும் தெரிந்தது.
"ஒரு சிலர் சாமியார் வேடத்தில் வந்து ஒற்று வேலை செய்தார்கள் என்பதற்காக, எல்லா சாமியார்களையும் சந்தேகிப்பது என்ன நியாயம்?" என்றார் சாந்தானந்தர்
"நாங்கள் காரணமில்லாமல் உங்களைச் சந்தேகிக்கவில்லை. சந்தேகப்படும்படியான ஒரு நபர் உங்கள் மடத்துக்கு வந்து போயிருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது!"
"அப்படி யாரும் வரவில்லையே!"
"உங்கள் மடத்தின் பின்வாசல் வழியே ஒரு ஆள் திருட்டுத்தனமாக வெளியேறியதை ஒரு காவலர் பார்த்திருக்கிறார். அவர் அவனைக் கூப்பிட்டு விசாரித்தபோது, அவன் தப்பித்து ஓடி விட்டான்" என்றார் காவலர் தலைவர்.
"அவன் ஒரு திருடனாக இருக்கலாம். எங்கள் மடத்தில் திருடிச் செல்வதற்கான பொருள் எதுவும் இல்லை என்று தெரிந்து, பின்புறமாக ஓட முயன்றபோது உங்கள் காவலர் அவனைப் பார்த்திருக்கலாம்!" என்றார் சாந்தானந்தர்.
"இல்லை. உங்கள் மடத்திலிருந்து ஒருவர் அவனுடன் பின்வாசல் அருகே நின்று அவனிடம் பேசி இருக்கிறார். அவன் கையில் அவர் ஏதோ கொடுத்தது போல் இருந்ததாகவும் எங்கள் காவலர் சொல்கிறார். அவன் உங்களுக்கு ஏதோ தகவல் கொடுத்திருக்கலாம், அதற்காக, உங்கள் மடத்தைச் சேர்ந்த ஒருவர் அவனுக்குப் பொற்காசுகள் கொடுத்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்!"
"ஐயோ! இது அபாண்டம்!" என்றார் சாந்தானந்தர்.
"உங்கள் நால்வருக்கும் பத்து கசையடிகள் பரிசாகக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன், அதற்குப் பிறகும் நீங்கள் உண்மையைச் சொல்லாவிட்டால், நீங்கள் இன்னும் அதிகப் பரிசுகளை விரும்புகிறீர்கள் என்று புரிந்து கொண்டு, மேலும் கசையடிகள் கொடுப்போம். உங்களில் ஒருவராவது உண்மையைச் சொல்லும் வரையில், பரிசுமழை பொழிந்து கொண்டே இருக்கும்!" என்று சொல்லிக் காவல் தலைவர் கண்ணசைக்க, கசையை எடுத்து வர ஒரு வீரன் உள்ளே சென்றான்.
"அதற்கு அவசியம் இல்லை ஐயா! நான் இப்போதே உண்மையைச் சொல்லி விடுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான். நான்தான் அந்த ஆளுக்குப் பத்து பொற்காசுகள் கொடுத்து, அவனை வழியனுப்பி வைத்தேன்!" என்றான் குணசீலன் என்ற சீடன்.
குருவும் மற்ற இரு சீடர்களும் வியப்புடனும் அதிர்ச்சியுடனும் அவனைப் பார்த்தனர்.
"பத்து பொற்காசுகாளா? அவ்வளவு குறைந்த தொகைக்கு, உன்னிடம் என்ன ரகசியத்தை விற்றான் அந்த துரோகி?" என்றார் காவல் தலைவர், கோபத்துடன்.
"ஐயா! அவன் ஒரு துரோகிதான். ஆனால் அரசாங்க ரகசியத்தை விற்ற துரோகி அல்ல. என்னைப் போன்ற ஒரு ஏழையிடம் பொய் சொல்லிப் பத்து பொற்காசுகளைப் வஞ்சகமாகப் பெற்றுச் சென்ற ஒரு துரோகி!" என்றான் குணசீலன் ஆத்திரத்துடன்.
"விளக்கமாகச் சொல்!" என்றார் காவல் தலைவர், பொறுமையிழந்து.
"ஐயா! நான் உங்கள் நாட்டுக்கு வருவது இது இரண்டாவது முறை. சென்ற ஆண்டு முதல் முறையாக இங்கே வந்தபோது, பூவிழி என்ற ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவள் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண். அவள் மீது கொண்ட காதலால், அவளைத் திரும்பவும் காண வேண்டும் என்ற ஆவலில்தான், சுவாமிகளிடம் சீடனாகச் சேர்ந்து இங்கே வந்தேன். கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த ஒரு இடத்துக்குப் போய் அவளைப் பற்றி விசாரித்தேன். அப்போது அங்கே இருந்த ஒரு ஆள் பூவிழியைத் தனக்குத் தெரியும் என்றும் அவளை என்னிடம் அழைத்து வருவதாகவும் கூறி, செலவுக்காகப் பத்து பொற்காசுகள் கேட்டான். என்னிடம் காசு இல்லாததால், அவனை மடத்தின் பின்புறம் வரச் சொல்லி, மடத்திலிருந்து பத்து பொற்காசுகளைத் திருடி அவனிடம் கொடுத்தேன். பத்து பொற்காசுகளுக்காக அவன் என்னை ஏமாற்றி இருக்க வேண்டும் என்று அப்புறம்தான் எனக்குத் தோன்றியது!" என்று சொல்லி முடித்தான் குணசீலன்.
"அடப்பாவி! கேவலம் பெண்ணாசைக்காகத் துறவி வேடம் போட்டுத் துறவறத்தையே களங்கப்படுத்தி விட்டாயே!" என்றார் சாந்தானந்தர், கோபத்துடன்.
"நீ சொல்வது உண்மை என்று எப்படி நம்புவது? உங்கள் நான்கு பேரையுமே சிறையில் அடைக்கப் போகிறேன். உனக்கு மட்டும் தினமும் பரிசுகள் கிடைக்கும். பரிசுகள் வாங்கிய பிறகு, உன்னிடமிருந்து வேறு உண்மை வருகிறதா என்று பார்க்கலாம்! அதற்குள், அங்கிருந்து தப்பி ஓடியவன் காவலர் கையில் சிக்கினால், அவனிடமிருந்தும் உண்மையை வரவழைப்போம்" என்ற காவல் தலைவர், சாந்தானந்தரைப் பார்த்து, "இவன் சொல்வது உண்மையென்றால், உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, உங்களை கௌரவத்துடன் உங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். அதுவரை நீங்கள் ஒரு அரசாங்க விருந்தினராக கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். அதாவது, நீங்கள் பூட்டிய அறைக்குள் எல்லா வசதிகளுடனும் இருப்பீர்கள், உங்கள் சீடனுக்குக் கிடைக்கப் போகும் பரிசுகள் உங்களுக்கு இல்லை!" என்றார் காவல் தலைவர், சிரித்தபடியே.
தொடர்ந்து வாங்கிய கசையடிகாளால், குணசீலனின் உடல் முழுவதும் புண்ணாகி இருந்தது. ஆயினும், அவன் தான் கூறியதுதான் உண்மை என்றே திரும்பத் திரும்பக் கூறி வந்தான். அவனிடம் பத்து பொற்காசுகள் வாங்கிக் கொண்டு, பின்புறமாக ஓடிய மனிதனைக் காவலர்களால் பிடிக்க முடியவில்லை.
பத்து நாட்களுக்குப் பிறகு, நான்கு பேரும் விடுவிக்கப்பட்டு, அவர்கள் நாட்டின் எல்லையருகே கொண்டு விடப்பட்டனர்.
"வா! குணசீலா! புண்கள் எல்லாம் ஆறி விட்டனவா?" என்று வரவேற்றார் ஒற்றர்படைத் தலைவர் பூபதி
"அது என் பெயர் இல்லையே, தலைவரே!"
"சரி, கதிர்வேலா! குணசீலனின் பணிதான் முடிந்து விட்டதே! நீ சேகரித்து அளித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. பாராட்டுக்கள். எல்லாவற்றுக்கும் மேல், சாந்தானந்தர் மற்றும் அவருடையை மற்ற இரண்டு சீடர்கள் மீது ஒரு தூசி கூடப் படாமல் நீ காப்பாற்றியது பெரிய விஷயம்!" என்றார் பூபதி.
"நான் ஒரு போலிச் சீடனாக இருந்தாலும், என் குருவுக்கு நான் கொடுத்த சிறிய குருதட்சிணையாகவே அதைக் கருதுகிறேன்" என்றான் கதிர்வேலன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 59
ஒற்றாடல்
குறள் 586:
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
No comments:
Post a Comment