Thursday, May 5, 2022

581. அமைச்சருக்கு நேர்ந்த அவமானம்!

"அரசே! தாங்கள் விரும்பியபடி தங்கள் புதல்வருக்கு முடிசூட்டி விட்டீர்கள். தங்களுக்குச் சேவை செய்தது போல் தங்கள் புதல்வருக்கும் தொடர்ந்து விஸ்வாசமாகச் சேவை செய்வேன்!" என்றார் அமைச்சர் விஸ்வருபர்.

"விஸ்வரூபரே! உங்கள் பேச்சில் ஒரு முரண்பாடு தெரிகிறதே!" என்றார் குணவர்மர்.

"என்ன முரண்பாடு அரசே?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"என் புதல்வருக்கு முடிசூட்டிய பிறகு அவன்தானே அரசன்? அப்புறம் என்னை எப்படி அரசரே என்று அழைக்கிறீர்கள்?" என்றார் குணவர்மர் சிரித்தபடி.

"பின் தங்களை எப்படி அழைப்பது? சரி, இனி தங்களைப் பேரரசே என்று அழைக்கிறேன்!" என்றார் அமைச்சர் சிரித்தபடி.

"அப்படியானால் நீங்கள் இனி பேரமைச்சர்!"

"என்ன சொல்கிறீர்கள் அரசே.. ம்.. பேரரசே!" என்றார் விஸ்வரூபர் தடுமாற்றத்துடன்.

"அரசராக இருந்து ஓய்வு பெற்ற நான் அரசன் என்றால், அமைச்சராக இருந்து ஓய்வு பெறப் போகும் நீங்கள் பேரமைச்சர்தானே?"

விஸ்வரூபர் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க, அரசவையே அதிர்ச்சியுடன் மௌனம் காத்தது.

புதிதாக அரசனாகி இருந்த குணவர்மரின் புதல்வன் இளமாறன் மட்டும் தந்தையைப் பார்த்து, "அப்பா!" என்று ஏதோ சொல்ல முயல, குணவர்மர் அவனைக் கையமர்த்தி விட்டு, விஸ்வரூபனைப் பார்த்து, "விஸ்வரூபரே! தங்களுக்கும் ஓய்வு தேவைதானே! இனி நீங்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். 'மனித அறம்" என்ற நீதிநூலை எழுதிய புலவர் நல்கீர்த்தியை அமைச்சராக நியமிப்பது என்று புதிய மன்னர் முடிவெடுத்திருக்கிறார்!" என்றார் குணவர்மர்.

அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தது போல் விஸ்வரூபர் தலையைக் குனிந்தபடி அவையை விட்டு வெளியேறினார். குணவர்மர் அவரைத் தடுக்க முயலவில்லை.

"அப்பா! விஸ்வரூபரை ஏன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினீர்கள்? " என்றான் இளமாறன் குணவர்மரிடம், இருவரும் தனிமையில் இருந்தபோது.

"நான் அரியணையிலிருந்து இறங்கி உனக்கு முடிசூட்டிய அதே காரணத்துக்காகத்தான். என்னைப் போல் அவருக்கும் வயதாகி விட்டது!" என்றார் குணவர்மர்.

"அவரிடம் நீங்கள் தனியே சொல்லி இருக்கலாமே! ஏன் அவையில் சொன்னீர்கள்? அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறாரே!"

"அவர் அப்படி உணர்ந்தால் அதற்கு நாம் என்ன செய்வது? நான் அவரை அவமானப்படுத்த வேண்டுமென்று நினைக்கவில்லை!"

"அது சரி. புலவர் நல்கீர்த்தியை நான் அமைச்சராக்கி இருப்பதாக அறிவித்தீர்களே, அது ஏன்? "

"ஒரு அரசன் நீதிநூல்களை அறிந்திருக்க வேண்டியது அவசியம். நீ வயதில் சிறியவன். நீதிநூல்களை நன்கறிந்த ஒரு அறிஞர் அமைச்சராக இருந்தால் அது உனக்கு நன்மை பயப்பதாக இருக்கும். அதனால்தான் உன் சார்பாக நானே அவரை நியமித்தேன்!" என்றார் குணவர்மர்.

இளமாறன் தந்தையின் பதிலால் திருப்தி அடையாமல் அங்கிருந்து அகன்றான்.

"அரசே!  உங்கள் தந்தை மறைந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் உங்களிடம்  ஒரு கவலையளிக்கும் செய்தியைச் சொல்ல வேண்டி இருக்கிறது" என்றார் ஒற்றைர்படைத் தலைவர் மணிகண்டர்.

"சொல்லுங்கள்! தந்தை இறந்த சமயம் என்றாலும் நாட்டை நிர்வகிக்க வேண்டிய கடமை எனக்கு எப்போதும் இருக்கிறதே!" என்றான் மன்னன் இளமாறன்.

"கண்வ நாட்டு அரசர் நம் மீது படையெடுக்கச் சித்தமாகிக் கொண்டிருக்கிறார்!" என்றார்

"உங்களுக்கு வந்த இந்தத் தகவல்கள் நம்பகமானவைதானா?" என்றான் இளமாறன்.

"நிச்சயமாக மன்னரே! கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நம் ஒற்றர்கள் கொடுக்கும் தகல்கள் எல்லாமே மிகச் சரியாகத்தான் இருந்து வருகின்றன."

"உங்கள் செயல்பாட்டைப் பாராட்டுகிறேன்! மந்திராலோசனைக் குழுவைக் கூட்டி என்ன செய்வது என்று முடிவெடுப்போம்." 

"அரசே! உங்களிடம் ஒன்று கூற வேண்டும்!" என்றார் மணிகண்டர் சற்றுத் தயக்கத்துடன்.

"கூறுங்கள்!"

"விஸ்வரூபர் எங்கே இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியுமா?"

"எனக்கு எப்படித் தெரியும்? ஒற்றர்படைத் தலைவரான நீங்கள்தானே எனக்குத் தகவல் சொல்ல வேண்டும்!" என்றான் இளமாறன் சிரித்துக் கொண்டே. தொடர்ந்து, " அன்று அவையிலிருந்து கோபத்துடனும் அவமானத்துடனும் வெளியேறியவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை. என் தந்தைக்குத் தெரியாமல் அவரைத் தேட  நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. நாட்டை விட்டே போய் விட்டதாகச் சொல்கிறார்கள். அது சரி, அவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?"

"இந்தத் தகவல்களையெல்லாம் எனக்கு அனுப்புபவர் விஸ்வரூபர்தான்!"

"அது எப்படி?"

"மன்னிக்க வேண்டும் அரசே! நீங்கள் பதவி ஏற்ற சமயம் கண்வ நாட்டிலிருந்து நமக்கு அதிக அச்சுறுத்தல் இருந்து வந்தது. அதனால் அங்கிருந்து தகவல்கள் பெற ஒரு நல்ல ஒற்றர் வேண்டும் என்று நினைத்து உங்கள் தந்தை ஒரு ஏற்பாடு செய்தார். விஸ்வரூபரை அவமானப்படுத்துவது போல் ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதன் காரணமாக விஸ்வரூபர் நம் நாட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு நாடுகளில் இருந்து கொண்டு கண்வ நாட்டிலும், பிற நாடுகளிலும் இருக்கும் நம் ஒற்றர்கள் மூலம் கண்வ நாட்டு மன்னின் செயல்பாடுகளைக் கண்காணித்து முக்கியமான செய்திகளை அனுப்புவது என்று ஒரு திட்டம் போட்டார் உங்கள் தந்தை. அன்று அவையில் நடந்த நாடகம் விஸ்வரூபரின் பங்களிப்புடன் நடந்ததுதான்!

"விஸ்வரூபர் அமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து வெளியேறி விட்டார் என்று தாங்கள் உட்பட அனைவரும் நினைக்க வேண்டும் என்பதுதான் உங்கள் தந்தையின் திட்டம். அப்போதுதானே விஸ்வரூபர் தன்னை நம் நாட்டின் எதிரி போல் காட்டிக் கொண்டு எளிதாக உளவு வேலையில் ஈடுபட முடியும்!  ஒற்றர்படைத் தலைவன் என்பதால் இந்த ஏற்பாடு பற்றி என்னிடம் மட்டும் கூறிய உங்கள் தந்தை அவர் உயிருடன் இருக்கும் வரை இந்த உண்மையை உங்களிடம் சொல்லக் கூடாது  என்று எனக்கு உத்தரவிட்டிருந்தார். இப்போது உங்கள் தந்தை இறந்து விட்டதால் இந்த உண்மையை உங்களிடம் சொல்கிறேன்!" என்றார் மணிகண்டர்.

"நாட்டில் நல்லாட்சி நடத்த அறநூல்களின்படி எனக்கு ஆலோசனை கூற அறநூல்கள் அறிந்த ஒரு அமைச்சர், எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க ஒரு சிறந்த உளவு அமைப்பு இரண்டையும் எனக்கு ஏற்படுத்தி விட்டுப் போயிருக்கிறார் என் தந்தை!" என்றான் இளமாறன் நெகிழ்ச்சியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 59
ஒற்றாடல்

குறள் 581:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

பொருள்: 
ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசனின் கண்களாகக் கருதப்பட வேண்டும்
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...