Monday, February 28, 2022

550. ராஜகுருவின் கோபம்!

"அரசே! கொலைக் குற்றம் என்பது தண்டனைக்குரிய குற்றம் எனும்போது, அரசரே அந்தக் குற்றத்தைச் செய்யலாமா?" என்றார் ராஜகுரு பரிமள அரங்கர்.

"தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், குருவே?" என்றார் அரசர் சிம்மேந்திரர்.

"கொலைக் குற்றம் புரிந்த ஒருவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறாயே, அதைச் சொல்கிறேன்!"

"குருவே! தாங்கள் அறியாததல்ல. சமுதாயத்துக்கே கேடாக இருக்கும் ஒரு கொடிய கொலைகாரனுக்கு மரண தண்டனை விதிப்பது தவறா? மரண தண்டனை அளிப்பது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதானே?"

"மனிதன் நாகரிகத்தில் முன்னேறும்போது, காலம் காலமாகச் செய்யப்பட்டு வந்த கொடிய செயல்களைக் கைவிடுவதுதானே பரிணாம வளர்ச்சியின் அடையாளம்?" 

"குருவே! குற்றத்துக்கு ஏற்ற தண்டனை என்பதுதானே தண்டனை முறையின் அடிப்படை?"

"குற்றத்துக்கு ஏற்ற தண்டனை! கொலை செய்தவனுக்குக் கொலை தண்டனை! அப்படியானால், ஒருவன் திருட்டுக் குற்றம் செய்தால், அரண்மனை ஊழியர்கள் அந்தத் திருடன் வீட்டில் போய்த் திருடி விட்டு வர வேண்டும் என்று தண்டனை விதிப்பாயா?" 

அரசருக்கு சுருக்கென்று கோபம் வந்தது. ஆயினும் குருவைக் கடிந்து பேசக் கூடாது என்பதால், கோபத்தை அடக்கிக் கொண்டு, "அப்படி இல்லை, குருவே! எல்லாக் கொலைகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் கொலைகளுக்கு சிறை தண்டனைதானே வழங்குகிறோம்? கொடுமையான கொலைகளைச் செய்தவர்களுக்குத்தானே மரண தண்டனை வழங்குகிறோம்?" என்றார், பொறுமையுடன்.

"மரண தண்டனை விதிக்கும் அரசனுக்கு குருவாக இருக்க நான் விரும்பவில்லை. நான் இனி இந்த அரண்மனைக்குள் வர மாட்டேன். என்றாவது ஒருநாள் நீ மரண தண்டனையை அறவே ஒழித்து விடுவதாக முடிவு செய்தால், எனக்குச் சொல்லி அனுப்பு. அப்போது வந்து உன்னை வாழ்த்தி விட்டுப் போகிறேன்!" என்றபடியே அவையை விட்டு வெளியேறினார் பரிமள அரங்கர்.

சில வாரங்களுக்குப் பிறகு, பரிமள அரங்கரின் வீட்டுக்குச் சென்றார் அரசர்.

அரசரை வரவேற்று உபசரித்த பரிமள அரங்கர், சற்று நேரம் பொதுவாக உரையாடியபின், "மன்னா! என்னை அவைக்கு வரச் சொல்லி அழைப்பதற்காக நீ வந்திருந்தால், என்னை மன்னித்து விடு. என் முடிவை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை!" என்றார், உறுதியுடன்.

"இல்லை, குருவே! தங்கள் மனதை மாற்ற நான் முயலப் போவதில்லை. மரியாதை நிமித்தமே தங்களைச் சந்திக்க வந்தேன். விடைபெறுகிறேன்!" என்று சொல்லி விடை பெற்றார் அரசர் சிம்மேந்திரர்.

 வீட்டுக்கு வெளியில் வரும்போது, வீட்டின் முன்பக்கத்திலிருந்த தோட்டத்தைப் பார்த்தபடியே வந்த அரசர், சட்டென்று நின்று, "குருவே! இதென்ன, உங்கள் தோட்டக்காரர் செடிகளை வெட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்?" என்றார்.

"அவர் வெட்டிப் போடுவது செடிகளை அல்ல, மன்னா, களைகளை!" என்றார் குரு.

"களைகளை அவர் ஏன் வெட்டுகிறார்?  நமக்கு வேண்டிய செடிகளை மட்டும் பராமரித்துக் கொண்டு, களைகளை அப்படியே விட்டு விடலாமே!"

"களைகளை வெட்டாமல் அப்படியே விட்டு வைத்தால், அவை செடிகளையே அழித்து விடாதா?" என்று பரிமள அரங்கர், தான் ஏதோ தவறாகச் சொல்லி விட்டது போல் சட்டென்று பேச்சை நிறுத்தினார்.

சிம்மேந்திரர் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் பரிமள அரங்கரின் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

பொருள்:
கொடியவர் சிலரைக் கொலை தண்டனையால் அரசன் ஒறுத்தல், பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.

Read 'The Garden at the Mentor's House' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...