கிரேக்க நாட்டிலிருந்து வந்திருந்த அந்த யாத்திரிகர், சமர நாட்டின் பல இடங்களுக்கும் பயணம் செய்தபோது, அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தங்கள் மன்னரைப் பற்றிச் சொன்ன ஒரே செய்தி, "இப்படி ஒரு அரசரைப் பார்க்கவே முடியாது!" என்பதுதான்.
சமர நாட்டு அரசர் மகரபூபதி, தன் நாட்டு மக்களை, ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொள்கிறார் என்பதுதான் அந்த யாத்திரிகருக்குக் கிடைத்த செய்திகளின் சுருக்கம்.
தலைநகருக்குச் சென்றபோது, அரசரைப் பார்க்க விரும்பினார் யாத்திரிகர். ஆனால், அரசர் அரண்மனையில் இல்லை. நாட்டின் எல்லையில் தொல்லை கொடுத்து வரும் கொள்ளையர்களை அடக்க, ஒரு சிறிய படையுடன் அந்தப் பகுதிக்குச் சென்றிருக்கிறார் என்று கூறினார்கள்!
"கொள்ளையர்களைப் பிடிக்க மன்னரே நேரில் செல்ல வேண்டுமா?" என்றார் யாத்திரிகர், வியப்புடன்.
"தன் குடிமக்களின் பாதுகாப்பு மன்னருக்கு மிகவும் முக்கியம். கடந்த சில மாதங்களாகவே, கொள்ளையர்கள் எல்லைப்புறத்தில் தொல்லை கொடுத்து வருகிறார்கள். நம் வீரர்கள் அவர்களை எல்லை தாண்டி விரட்டி அடித்தாலும், மீண்டும் எப்படியோ நம் நாட்டுக்குள் ஊடுருவி விடுகிறார்கள். நம் அண்டை நாட்டு அரசர்தான் கொள்ளையர்களைத் தூண்டி விடுகிறார். அதனால், அவருக்கு ஒரு பாடம் புகட்டத்தான், மன்னரே நேரில் படையுடன் சென்றிருக்கிறார். மன்னரே படையுடன் வருகிறார் என்று தெரிந்ததும், கொள்ளையர்கள் ஓடி விட்டார்கள். அண்டை நாட்டு அரசர் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுட்டால், நம் அரசர் படையுடன் அவர்கள் நாட்டுக்குள்ளேயே நுழைந்து தாக்கத் தயங்க மாட்டார் என்பதை அவர் உணர்ந்திருப்பார். இனி, இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட மாட்டார் என்று நினைக்கிறோம். ஆயினும், எல்லைப்புறத்தில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக, மன்னர் சிறிது காலம் எல்லைப்புறத்திலேயே தங்கி விட்டுப் பிறகுதான் தலைநகருக்குத் திரும்புவார்" என்றார் ஒரு அரண்மனை அதிகாரி.
மன்னரைப் பார்க்க முடியாததால், தலைநகரைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார் யாத்திரிகர். அப்படி அவர் சென்ற ஒரு இடம்தான் முதுமக்கள் விடுதி.
கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத முதியவர்கள் அதில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கு வசதியாகத் தங்கவும், அவர்களுக்கு நல்ல உணவு வழங்கவும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
"இது போல் நாடு முழுவதும் பல விடுதிகள் இருக்கின்றன" என்றார் யாத்திரிகருக்கு வழிகாட்டியாக அனுப்பி வைக்கப்பட்ட அரண்மனை ஊழியர்.
"ஆமாம், இந்த விடுதி இரண்டு கட்டிடங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டிடத்துக்குள்தான் நீங்கள் என்னை அழைத்துச் சென்றீர்கள். இன்னொரு கட்டிடம் என்ன?" என்றார் யாத்திரிகர்.
அரண்மனை ஊழியர் சற்றுத் தயங்கி விட்டு, "அதுவும் ஒரு விடுதிதான். குற்றங்களுக்காக தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பத்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்றார்.
"ஏன் அவர்களுக்குத் தனி விடுதி? அது வசதிக்குறைவாக இருக்குமா, அல்லது சிறை போல் இருக்குமா?" என்றார் யாத்திரிகர், சற்றே ஏளனத்துடன்.
"அப்படி நினைக்காதீர்கள். ஒரு குடும்பத் தலைவர் குற்றம் செய்து விட்டுச் சிறைக்குச் செல்வதால், அவரை நம்பி இருந்த, எந்தக் குற்றமும் செய்யாத அவர் குடும்பத்தினர் துன்பப்படக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தின் காரணமாகத்தான், அவர்களை விடுதிகளில் தங்க வைத்துக் காப்பாற்றுகிறார் எங்கள் அரசர். அவர்கள் தங்கி இருக்கும் விடுதியும், மற்ற முதியவர்கள் தங்கி இருக்கும் விடுதியைப் போல்ர எல்லா வசதிகளும் கொண்டதுதான்" என்றார் அந்த ஊழியர், சற்றுக் கோபத்துடன்.
"அப்படியானால், அவர்களுக்கு ஏன் தனி விடுதி? மற்ற முதியோர் தங்கும் விடுதியிலேயே, அவர்களையும் தங்க வைத்திருக்கலாமே!"
"இரண்டு காரணங்கள். குற்றம் செய்த நபரின் குடும்பத்தினர் என்பதால், தங்களைப் பற்றி மற்றவர்கள் குறைவாக நினைப்பார்களோ என்ற அவமான உணர்ச்சி அவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பது ஒன்று. இரண்டாவது காரணம், சிறைக்குச் சென்றவர்களின் குடும்பங்களில், முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் இருப்பார்களே! அதனால், அவர்கள் குடும்பம் குடும்பமாகத் தனியே தங்க வைக்கப்படுவதுதானே சரியாக இருக்கும்? அத்துடன், சிறைக்குச் சென்றாவர்களின் குழந்தைகளுக்கான கல்வி வசதிகளும் அங்கே இருக்கின்றன!"
"குற்றம் செய்தவரின் குடும்பத்தினரிடம் கூட அக்கறை காட்டிச் செயல்படும் உங்கள் மன்னரின் கருணை என்னை வியக்க வைக்கிறது. இவ்வளவு கருணை உள்ள உங்கள் அரசர், குற்றம் செய்தவர்களைச் சிறையில் அடைக்காமல், அவர்களை மன்னித்து விட்டு விடலாமே!" என்றார் யாத்திரிகர்.
"அது எப்படி ஐயா? குற்றம் செய்தவர்களை மன்னித்து விட்டு விட்டால், அது மற்றவர்களுக்கும் குற்றம் செய்வதற்கான துணிவை அளிக்கும் அல்லவா? குற்றம் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் எங்கள் அரசர். குற்றம் செய்பவர்களை தண்டிப்பதில் அவர் காட்டும் இந்த உறுதியையும் அவருடைய இன்னொரு சிறப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள்!" என்றார் அரண்மனை ஊழியர், பெருமிதத்துடன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
No comments:
Post a Comment