பத்திரிகையாளர்கள் கதிர், சுந்தர் இருவரும் தாங்கள் வழக்கமாகச் சந்தித்து உரையாடும் அந்தச் சிறிய ஓட்டலில், அவர்கள் எப்போதும் அமர்ந்து உரையாடும் அந்த ஓரமான இடத்தில் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர்.
பொது இடத்தில், தனிமையில், மற்றவர்கள் காதில் விழாமலும், யாரும் ஒட்டுக் கேட்க முடியாமலும் பேசுவதற்கு அதை விடச் சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது.
இருவரும் காரசாரமாக அரசியலை விவாதிக்கும்போதும், அவர்கள் சிரித்துக் கொண்டே பேசுவதை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும் எவருக்கும், இரண்டு நண்பர்கள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்பது போல்தான் தோன்றும்!
"தேவராஜ் அதிபராத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாலு வருஷம் ஆச்சு. இந்த நாலு வருஷத்தில, நாடு நாசமாப் போனதுதான் மிச்சம். பொருளாதாரச் சீரழிவு, பல லட்சம் பேர் வேலை இழப்பு, ரெண்டு மூணு பெரிய தொழில் அதிபர்களோட ஆதிக்கம், ஆயிரக் கணக்கான சிறிய, நடுத்தரத் தொழில்கள் முடக்கம், அதிகரிக்கும் ஏழ்மை, அதனால் அதிகரிக்கும் தற்கொலைகள், எல்லையில் நம் அண்டை நாடுகள் தைரியமா ஊடுருவல் செய்யறது இதெல்லாம்தான் நாம் கண்ட லாபம்!" என்றான் கதிர்.
"உன்னை மாதிரி சில பேர் இப்படிச் சொல்லிக்கிட்டுத் திரியறீங்களே தவிர, தேவராஜுக்கு மக்கள் ஆதரவு இருக்கே! அடுத்த வருஷம் நடக்கப் போற தேர்தல்ல, அவரை எதிர்த்து நிற்க ஆளே இல்லையே!" என்றான் சுந்தர்.
"அது என்னவோ உண்மைதான்! போன தேர்தல்ல, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரகுவீர் இப்ப சோர்ந்து போய் உக்காந்திருக்காரு. அப்பப்ப காட்டமா ஏதாவது பேசறாரு. அப்புறம் காணாம போயிடறாரு. ஆனா, தேவராஜுக்கு மக்கள் ஆதரவு இருக்கறதா சொல்றதை நான் ஏத்துக்க மாட்டேன். போன தடவையே, மக்களைப் பிளவு படுத்தித்தான் அவர் வெற்றி பெற்றார்ங்கறது எல்லாருக்கும் தெரியும். அவர் ஆட்சி சாதாரண மக்களுக்கு எதிரானதுங்கறதும் எல்லாருக்கும் தெரியும்!"
"அவர் நல்லது செஞ்சா கூட உன்னை மாதிரி ஆளுங்க தப்பு சொல்றீங்க. இப்ப கூடப் பாரு! குறைஞ்ச பட்ச ஊதிய சட்டத்தை ரத்து செஞ்சிருக்காரு! குறைஞ்ச பட்ச ஊதியம்னு ஒண்ணு இருக்கறதால, தொழிலாளர்களுக்கு யாரும் அதுக்கு மேல ஊதியம் கொடுக்க மாட்டேங்கறாங்க. இப்ப அதை எடுத்துட்டதால, தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகமாக் கிடைக்கும். இதைப் புரிஞ்சுக்காம, சில தொழிலாளர்கள் தேசவிரோத சக்திகளோடயும், அந்நிய நாட்டு சக்திகளோடயும் சேர்ந்து இந்தச் சட்டத்துக்கு எதிரா போராட்டம் பண்றாங்க!"
கதிர் பெரிதாகச் சிரித்தான்.
"ஏண்டா, முட்டாளா நீ? குறைந்தபட்ச ஊதியச் சட்டம்னு ஒண்ணு இருக்கறதாலதான், தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாவது கிடைக்குது. அதையும் எடுத்துட்டா என்ன ஆகும்? ஊதியம் அதிகமாக் கிடைக்கும்னு உன்னை மாதிரி அதிபரோட ஆதரவாளர்கள் எப்படிச் சொல்றீங்க? தொழிலாளர்களோட ஊதியம் அதிகரிக்கணும்னா, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கணும்! அதை எடுக்கறது எப்படி நன்மை பயக்கும்?
"அதிபர் தொழிலாளர்களை சந்திச்சுப் பேச மாட்டேங்கறாரு. தினமும் போராடற தொழிலாளர்களை, தேச விரோதிகள், அந்நிய நாட்டிலேந்து பணம் வாங்கிக்கிட்டுப் போறாடறவங்கன்னெல்லாம் அதிகாரிகளை விட்டு தினமும் அவதூறாப் பேச வைக்கறாரு.
"அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்காரு. தன் குடும்பத்தோட உலகம் முழுக்க சுத்திக்கிட்டு வராரு. தனக்குன்னு அரசாங்க செலவில விமானம் வாங்கி இருக்காரு. காரைப் பயன்படுத்தற மாதிரி, அவர் குடும்ப உறுப்பினர்கள் அதை தினமும் பயன்படுத்தறாங்க. ஒரு சொகுசுக் கப்பல் வேற வாங்கப் போறாராம்! இப்ப இருக்கற அதிபர் மாளிகை சின்னதா இருக்குன்னு, ஏகப்பட்ட செலவில, புதுசா ஒரு மாளிகை கட்டறாரு. இப்படியே போனா, என்ன ஆறது?"
"எப்படி இருந்தா என்ன? மறுபடி அவர்தான் ஜெயிக்கப் போறாரு. உன்னை மாதிரி ஆளுங்க இப்படியே பொருமிக்கிட்டிருக்க வேண்டியதுதான்!" என்றான் சுந்தர், பெருமிதத்துடன்.
"பார்க்கலாம். எனக்கென்னவோ நம்பிக்கை இருக்கு. இது மாதிரி ஆடம்பரமா, மக்களுக்கு எதிரா கொடுங்கோல் ஆட்சி நடத்தின அரசர்களே இருந்த இடம் தெரியாம போயிருக்காங்க. ஜனநாயக அமைப்பில இது நடக்காதா என்ன?" என்றான் கதிர்.
"நடக்கும், நடக்கும்! முதல்ல, தேவராஜை எதிர்க்க ஆளே இல்ல. ரகுவீர் தூங்கிக் கிட்டிருக்காரு. இப்பதான் கொஞ்ச நாளா, ஏதோ ஒரு மூலையிலேந்து டார்வின்னு ஒரு சின்னப்பையன் அதிபருக்கு எதிராப் பேசிக்கிட்டிருக்கான். அவன்தான் வந்து தேவராஜைத் தோக்கடிக்கப் போறான்!" என்றான் சுந்தர், கேலியாக.
"அப்படிக் கூட நடக்கலாம்! கோலியாத்னு ஒரு கொடுங்கோலனை டேவிட்னு ஒரு சின்னப்பையன் வீழ்த்தினதா ஒரு கதை இருக்கே! அது இங்கேயும் நடக்கலாம். டார்வின் என்கிற பேரே எனக்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாத் தெரியுது. பரிணாம வளர்ச்சி, மாறுதல் இதையெல்லாம் குறிக்கிற பெயராச்சே இது!" என்றான் கதிர்.
அடுத்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், யாரும் எதிர்பாராத விதத்தில், தேவராஜ் டார்வினிடம் தோல்வி அடைந்தார்!
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை
குறள் 548:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
No comments:
Post a Comment