Tuesday, February 15, 2022

547. காப்பாற்றியது யார்?

"வாருங்கள் வல்லபராயரே!" என்றார் அரசர் சம்புதேவர்.

அரசர் தன்னை அழைத்த காரணத்தை அரசன் சொல்வதை எதிர்பார்த்து, மௌனமாக இருந்தார் வேளைக்காரப் படைத் தலைவர் வல்லபராயர்.

"நான் மாறுவேடத்தில் நகர்வலம் போகும்போது, உங்கள் படைவீரர்கள் சிலரும் மாறுவேடமிட்டு, மற்றவர்கள் அறியாதவாறு என்னைப் பின்தொடரும் வழக்கத்தை இன்று முதல் நிறுத்த விரும்புகிறேன்" என்றார் சம்புதேவர்.

"மன்னிக்க வேண்டும், அரசே! தங்கள் பாதுகாப்புக்காக, சில வீரர்கள் தங்கள் பின்னால் வருவது கட்டாயம்!"

"இன்று முதல் யாரும் வரக் கூடாது என்பது கட்டாயம்!" 

தயக்கத்துடன் கிளம்பிய வல்லபராயரை அழைத்த அரசர், "ஒரு விஷயம் வல்லபரே! எனக்குத் தெரியாமல் வீரர் எவரையும் ரகசியமாக என்னைப் பின்தொடரச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், அதை ஒரு குற்றமாகக் கருதுவேன்!" என்றார்.

ம்புதேவர் பாதுகாப்பு இல்லாமல் நகர்வலம் செல்லத் தொடங்கிச் சில நாட்கள் ஆகி விட்டன. விஷயம் அறிந்து, அமைச்சர் அரசரை வற்புறுத்தியபோதும், அரசர் அமைச்சர் பேச்சைக் கேட்கவில்லை. 

தான் சொன்னதையும் மீறித் தனக்குப் பாதுகாப்பு அளிக்க அமைச்சரோ, வேளைக்காரப் படைத்தலைவரோ முயற்சி செய்யக் கூடாது என்பதற்காக, அரசர் தான் அரண்மனையை விட்டு வெளியேறுவது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

ன்று, சம்புவராயர் நகர்வலம் சென்று கொண்டிருந்தபோது, அவர் பின்னால் ஏதோ சலசலப்பு ஏற்பட்டது. சம்புவராயர் திரும்பிப் பார்த்தபோது, கையில் கத்தியுடன் இருந்த ஒருவனை, அவனுக்குப் பின்னிருந்து ஒருவர் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

சம்புதேவரைப் பார்த்ததும். அந்த நபர், "இவன் உன்னைக் கொல்லப் பார்த்தான். நான் பிடிச்சுட்டேன். போய், ரெண்டு மூணு பேரைக் கூட்டி வா. இவனைக் காவலர்கள் கிட்ட ஒப்படைக்கணும். சீக்கிரம்!" என்றார்.

என்ன செய்வதென்று தெரியாமல் சம்புதேவர் குழப்பத்துடன் நின்றபோது, அந்த நபர், "யாராவது வாங்களேன்! இங்கே ஒரு கொலைகாரன் சிக்கி இருக்கான்" என்று கூவ, உடனே, அக்கம்பக்கத்திலிருந்து சிலர் ஓடி வந்தனர். அனைவருமாகச் சேர்ந்து, கத்தியுடன் இருந்தவனை, அருகில் இருந்த ஒரு வீட்டு வாசலில் இருந்த தூணில் கட்டினர். ஒருவர் காவலர்களை அழைத்து வருவதாகச் சொல்லி விட்டுப் போனார்.

"எப்படி நீங்க இவனைப் பிடிச்சீங்க?" என்றார் சம்புதேவர், அந்த நபரைப் பார்த்து.

"இந்த ஆளு ரெண்டு மூணு நாளாவே இங்கே சுத்திக்கிட்டிருக்கான். ஆளைப் பாத்தா, வேற நாட்டைச் சேர்ந்தவன் மாதிரி தெரிஞ்சுது. நான் என் வீட்டுத் திண்ணையில படுத்துத் தூங்கிக்கிட்டிருந்தேன். தெருவில யாரோ நடக்கற சத்தம் கேட்டு, முழிச்சுக்கிட்டுப் பார்த்தேன். அது நீதான். சரி, தெருவில யாரோ நடந்து போறங்கன்னு நினைச்சு, மறுபடி தூங்கலாம்னு கண்ணை மூடினேன்.

"மறுபடி ஏதோ சத்தம் கேட்டது. பார்த்தா, இந்த ஆளு திருட்டுத்தனமா உனக்குப் பின்னால வந்துக்கிட்டிருந்தான்! சந்தேகப்பட்டு நான் தெருவில இறங்கி, அவன் பின்னால சத்தம் இல்லாம போனேன். அவன் கையில இருந்த கத்தியோட பளபளப்பு எனக்குத் தெரிஞ்சது. அப்புறம், வேகமா அவன்கிட்ட போனேன். அப்ப அவனும் உன்கிட்ட வந்துட்டான். உன்னைக் குத்தப் போறான்னு நினைச்சு, ஓடிப் போய் அவனைப்  புடிச்சுட்டேன். அப்புறம்தான், அவன் நான் ஏற்கெனவே சந்தேகப்பட்ட ஆள்னு தெரிஞ்சுது. அவன் ஏன் உன்னைக் குத்த வந்தான்? உனக்கும் அவனுக்கும் விரோதமா?" என்றார் அந்த நபர்.

"எனக்கு இந்த நாட்டில எதிரிகள் யாரும் இல்ல. ஆனா, நீங்க அவனை வெளிநாட்டு ஆசாமியா இருக்கலாம்னு சொல்றீங்களே! வெளிநாட்டில, எனக்கு எதிரிகள் இருக்கலாம்!" என்றார் சம்புதேவர், சிரித்தபடி.

"வெளிநாட்டில எதிரிகள் இருக்கற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா நீ? அது சரி, உன்னை ஒத்தன் கொல்லப் பாத்திருக்கான். நீ சிரிக்கற! நீ உயிர் பிழைச்சது பெரிய அதிசயம். உன்னைக் காப்பாத்தினது யார் தெரியுமா?"

"நீங்கதான்!"

"நான் இல்லப்பா! இந்த நாட்டை நம்ம அரசர் செங்கோல் வழுவாம ஆண்டுக்கிட்டிருக்காரே, அந்தச் செங்கோல்தான் உன்னைக் காப்பாற்றி இருக்கு!" என்றார், தான் காப்பாற்றியது அரசரை என்று அறியாத அந்த நபர். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின், அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...