Sunday, January 23, 2022

546. வேலை வென்ற கோல்!

"படைபலம் இல்லாத ஒரு சிறிய நாட்டை நம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை. மூன்று மாதம் முற்றுகைக்குப் பிறகும் கோட்டைக்குள் நுழையாமல் திரும்பி வந்திருக்கிறோம். இப்படி ஒரு அவமானத்தை நாம் இதுவரை சந்தித்ததில்லை!"

மன்னன் விரகேசரியின் கோபமான பேச்சைக் கேட்டு அரசவையில் அனைவரும் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தனர்.

"சொல்லுங்கள் அமைச்சரே! எப்படி ஒரு சிறிய நாடான கமுதி நாட்டிடம் நாம் தோற்றோம்? நாம் சரியாகத் திட்டமிடவில்லையா?"

"மன்னிக்க வேண்டும் அரசே! இந்தப் படையெடுப்பு வேண்டாம், கமுதி நாட்டுடன் நமக்குள்ள பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று நான் துவக்கத்திலேயே சொன்னது தங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"எந்தப் போரைத்தான் நீங்கள் ஆதரித்திருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு அஹிம்சைவாதி என்பதால் அப்படிச் சொன்னீர்களே தவிர, கமுதி நாட்டின் மீது நாம் போர் தொடுத்தால் நாம் தோற்று விடுவோம் என்ற கருத்திலா அப்படிச் சொன்னீர்கள்?" என்றான் அரசன் கோபம் குறையாமல்.

"அதுவும் ஒரு காரணம்தான்!" என்று அமைச்சர் மெல்லிய குரலில் கூறியது அரசன் காதில் விழவில்லை.

வீரகேசரி இப்போது ஒற்றர்படைத் தலைவரிடம் திரும்பினான். "கமுதி நாட்டின் படைபலம் மிகக் குறைவு. அவர்களிடம் ஆயுதங்கள் கூட அதிகம் இல்லை என்று ஒற்றர்கள் கூறியதாகச் சொன்னீர்களே?"

"அது உண்மைதான் அரசே! போர் நடந்திருந்தால் அவர்கள் தோற்றிருப்பார்கள். ஆனால் நம்மால் கோட்டைக்குள்ளேயே நுழைய முடியவில்லையே!"  என்றார் ஒற்றர்படைத் தலைவர் தயக்கத்துடன்.

"அது உண்மைதான். மூன்று மாத முற்றுகைக்குப் பிறகும் அவர்கள் கோட்டைக் கதவைத் திறக்கவில்லை. கோட்டைக்குள் இருந்த தலைநகரத்தில் வசித்த மக்களுக்குப் போதுமான உணவு கூட இருந்திருக்காது. அது போல் கோட்டைக்கு வெளியில் இருந்த நாட்டு மக்களும் நம் படைகளுக்கு அஞ்சாமல் நமக்கு எந்த உதவியும் செய்ய மறுத்தார்கள். அவர்களுடைய ராஜ விசுவாசம் என்னை வியக்க வைக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அமைச்சரே!" என்றான் வீரகேசரி அமைச்சரைப் பார்த்து.

அரசனின் குரலில் கடுமை குறைந்திருந்ததைக் கண்ட அமைச்சர், "ஒரு உண்மையை நாம் உணர வேண்டும் அரசே! கமுதி நாட்டு மன்னர் செங்கோல் வழுவாமல் தன் நாட்டு மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார். இது எல்லோரும் அறிந்த உண்மை. தாங்களே பலமுறை இது பற்றி வியந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட அரசரிடம் குடிமக்களுக்கு அளவில்லாத விசுவாசம் இருப்பது இயல்புதான். அதனால்தான் படைபலமோ, ஆயுதபலமோ இல்லாத அவரை வலிமை மிகுந்த நம் படைகளால் வெல்ல முடியவில்லை. படைகளிடம் இருக்கும் வேலை விட அரசனின் செங்கோல் வலியது என்று நம் ஆன்றோர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால்தான் இந்தப் படையெடுப்பைத் தவிர்க்க வேண்டும் என்று நான் தங்களிடம் கேட்டுக் கொண்டேன்" என்று சொல்லி விட்டு அரசனின் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தார். 

வீரகேசரியின் மௌனம் அமைச்சரின் பேச்சில் இருந்த உண்மையை அவன் உணர்ந்து கொண்டதைக் காட்டியது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...