Thursday, January 20, 2022

545. நகர்வலம்

"மன்னர் சில நாட்களாக இரவில் எங்கோ சென்று வருகிறாராமே!"

"ஆமாம்! நானும் கேள்விப்பட்டேன். அவருடைய  பாதுகாப்புப் படையினருக்குக் கூடத் தெரியாமல் எங்கோ போய் விடுகிறாராம். அவர் திரும்பி வந்த பிறகுதான் அவர் வெளியே சென்ற விஷயமே அவருடைய பாதுகாப்புப் படையினருக்குத் தெரிகிறதாம். மன்னர் எப்போது போவார், எப்படிப் போவார் என்று கண்டறிய முடியாமல் பாதுகாப்புப் படை விரர்கள் திணறுகிறார்களாம்! மன்னரிடம் இது பற்றிக் கேட்கவும் முடியாமல் தவிக்கிறார்களாம்!"

"சரி, சரி. இது பற்றி நாம் அதிகம் பேசுவது ஆபத்து. யார் காதிலாவது விழுந்து விடப் போகிறது. நம் வேலையைப் பார்ப்போம்!"

வழியில் சந்தித்தபோது ஓரிரு நிமிடங்கள் உரையாடிய இரண்டு அரண்மனைக் காவலர்களும் பிரிந்து தங்கள் வழிகளில் சென்றனர்.

"ஒரு முக்கியமான காரணத்துக்காக இந்த ஆலோசனை அவையைக் கூட்டி இருக்கிறேன். நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் அனைவரும் உண்மையான பதிலைக் கூற வேண்டும். என்னைக் குறை கூறுவதாக இருந்தாலும்  சரி, உங்கள் உண்மையான பதில் வேண்டும்" என்றார் அரசர்.

"கேளுங்கள் அரசே!" என்ற அமைச்சர், "அதற்கு முன் நான் தங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?" என்றார்.

"நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும் அமைச்சரே! நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கும், நான் கேட்க நினக்கும் கேள்விகளுக்கும் தொடர்பு இருக்கிறது. என் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும்போதே உங்கள் கேள்விக்கான பதிலும் உங்களுக்குத் தானே கிடைத்து விடும்!" என்று சிரித்துக் கொண்டே கூறிய அரசர், தொடர்ந்து, "என் ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?" என்றார்.

"தங்கள் ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் இருக்கிறார்கள். இது அனைவரும் அறிந்ததுதானே?" என்றார் அமைச்சர்.

"இது என் கேள்விக்கான பதில் இல்லையே அமைச்சரே!" என்று சிரித்தபடியே கூறிய அரசர், "இந்தக் கேள்விக்கு ஒற்றர்படைத் தலைவர் பதிலளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்றார் ஒற்றர்படைத் தலைவரைப் பார்த்து.,

அரசர் குறிப்பாகத் தன்னைப் பார்த்துக் கேட்பார் என்பதை எதிர்பார்க்காத ஒற்றர்படைத் தலைவர் சற்றே திடுக்கிட்டவராகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து, "ஒரு சிலரைத் தவிர எல்லோரும் தங்கள் ஆட்சியைப் புகழ்ந்துதான் பேசுகிறார்கள்" என்றார்.

"அந்த ஒரு சிலர் என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்."

"அரசே! குறை கூறிக் கொண்டிருக்கும் பழக்கம் உள்ள சிலர் எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். ராமபிரானைக் கூடச் சிலர் குறை கூறிப் பேசவில்லையா?" என்றார் அமைச்சர்.

"ஆனால்  ராமபிரான் அதைப் புறக்கணிக்கவில்லையே! அந்தக் குறையைப் போக்கும் வகையில்தானே நடந்து கொண்டார்?" என்று அமைச்சருக்கு பதிலளித்த அரசர், ஒற்றர்படைத் தலைவரிடம் திரும்பி, "சொல்லுங்கள்! என்னென்ன குறைகளைக் கூறுகிறார்கள்?" என்றார்.

"குறிப்பாக ஏதுமில்லை அரசே! உங்கள் ஆட்சியில் அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் தவறு செய்பவர்கள் மீது சரியானபடி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, அதனால் தீயவர்கள் சிலர் அச்சமின்றிக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சிலர் பேசிக் கொள்வதாக ஒற்றர்கள் என்னிடம் கூறினர். ஆனால் அமைச்சர் சொன்னது போல், இது போல் சிலர் எப்போதும்..."

"இதைச் சொல்ல நீங்கள் தயங்க வேண்டியதில்லை. உங்கள் ஒற்றர்கள் உங்களிடம் தெரிவத்ததைப் போல் ஆங்காங்கே சிலர் பேசிக் கொள்வதை நானே கேட்டேன்" என்றார் அரசர் அவரை இடைமறித்து. 

"தாங்களே கேட்டீர்களா?" என்றார் அமைச்சர் அதிர்ச்சியுடன்.

"ஆமாம். அமைச்சரே. சில நாட்களாக நான் இரவு வேளைகளில் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றபோதுதான் கேட்டேன்" என்ற அரசர், அமைச்சரைப் பார்த்துப் புன்னகைத்து, "நான் இரவில் வெளியே சென்று வருவதைப் பற்றித்தானே நீங்கள் கேட்க விரும்பினீர்கள்? உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதல்லவா?" என்றார்.

"மன்னிக்க வேண்டும் அரசே! இது ஒரு சிலர் கூறும் குறைதான். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்றார் அமைச்சர்.

"இல்லை அமைச்சரே! நான் அப்படி நினைக்கவில்லை. அரசன் ஆட்சி சிறப்பாக இருந்தால் நாட்டில் மழை பெய்து, பயிர்கள் செழிக்கும் என்பதுதானே நம்பிக்கை? கடந்த ஆண்டில் நம் நாட்டில் மழை பொய்த்து விட்டது. அதன் காரணமாக விளைச்சல் குறைந்து விட்டது. அதனால் என் ஆட்சியில் குறை ஏதும் இருக்கலாம் என்று நினைத்து அதை அறிந்து கொள்ளத்தான் நகர்வலம் செல்லத் தீர்மானித்தேன்."

"அரசே! தாங்கள் அறியாததல்ல. அரசர் நல்லாட்சி செய்தால் நாட்டில் மழை பெய்யும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் சில சமயம் அப்படி நடப்பதில்லை. அதனால் ஆட்சியின் மீது குறை என்று பொருளல்ல, விஸ்வாமித்திரர் மன்னராக இருந்தபோது அவர் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால் அவர் ஒரு சிறந்த அரசராகத்தானே இருந்தார்?"

"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆயினும், சில குறைகள் இருப்பதாக நமக்குத் தெரிய வரும்போது அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது நமது கடமை இல்லையா? தவறுகள் எங்கே நடந்தாலும் தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எல்லா அதிகாரிகளுக்கும் கடுமையாக உத்தரவிடுங்கள். மக்கள் நம் ஆட்சியின் மீது சொல்லும் எல்லாக் குறைகளையும், அவை சிறு குறைகளாக இருந்தாலும் ஒற்றர்படைத் தலைவர் அவற்றை அமைச்சருக்குத் தெரிவிக்க வேண்டும். அமைச்சர் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது என் கண்டிப்பான உத்தரவு" என்றார் அரசர்.

அமைச்சரும், ஒற்றர்படைத் தலைவரும் மௌனமாகத் தலையாட்டினார்கள்.

அப்போது காற்று பெரிதாக வீச, அரண்மனையில் பல சாளரங்கள் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது.

"அரசே! பெருமழை பொழியப் போகிறது என்று நினைக்கிறேன்" என்றார் அமைச்சர் மகிழ்ச்சியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 545:
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்:
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1062. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்!

செல்வகுமார் தன் மனைவி கோமதியுடன் காரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது வழக்கம் போல் காரில் பழைய திரைப்படப் பாடல்களைப் போட்டுக் கேட்டுக்...