"இந்த ஆவணி விசாகத்தன்று, நான் முடிசூடிப் பத்து ஆண்டுகள் நிறைவானதற்காக, என்னை வாழ்த்தப் பல நாடுகளிலிருந்தும், தங்களைப் போன்ற முனிவர்களும், அறிஞர்களும் இங்கே வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளித்தாலும், எனக்குச் சிறிது சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.
"என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நாளாக இருக்கலாம். ஆனால், உங்களைப் போன்ற சான்றோர்களும், அறிஞர்களும், முனிவர்களும், ஏன் பல்வேறு நாடுகளின் ராஜகுருக்களும் கூட இங்கே வந்திருப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. என்னிடம் கூறாமல், என் அமைச்சர் ஆமருவியார் இந்த ஏற்பாட்டைச் செய்து விட்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், அநேகமாக அவரைப் பதவி நீக்கம் செய்து விடுவேன்!" என்றான் அரசன் திரிலோகசந்திரன், அமைச்சரைப் பார்த்துச் சிரித்தபடியே.
"மன்னா! இது உங்கள் அமைச்சரின் ஏற்பாடு அல்ல. உன் குடிமக்களை அரவணைத்துச் சென்று, ஒரு தாயைப் போல் அவர்களிடம் அன்பு காட்டி, ஒரு தந்தையைப் போல் அவர்களைக் காக்கும் உன் மாண்பை, இந்த உலகமே போற்றுகிறது. ஏன், பிற நாட்டு மன்னர்களே உன்னை வியந்து, உன்னைப் பாராட்டி வாழ்த்தத் தங்கள் குருமார்களை அனுப்பி இருக்கிறார்கள். எங்கள் விருப்பத்தின் பேரில்தான், உங்கள் அமைச்சர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்" என்றார் அங்கே வந்திருந்த முனிவர்களில் மூத்தவரான புங்கவர்.
"என்னைப் பெருமைப்படுத்த வந்திருக்கும் பெருமக்களாகிய உங்கள் திருவடிகளில் விழுந்து வணங்க விரும்புகிறேன். அன்பு கூர்ந்து, அனைவரும் சேர்ந்து நின்று, தங்கள் திருவடிகளில் நான் பணிந்து வணங்குவதை ஏற்று, என்னை வாழ்த்த வேண்டுமென்று வேண்டுகிறேன்" என்று அவர்களை வணங்க முன்வந்தான் அரசன்.
"இருக்கட்டும் மன்னா! அதற்கு முன், நாங்கள் செய்ய வேண்டிய பணி ஒன்று இருக்கிறது. எங்கள் அனைவரின் சார்பாக, இங்கே வந்திருக்கும் முனிவர்களில் வயதில் மூத்த பன்னிருவர் உனக்கு அளிக்கப் போகும் ஒரு காணிக்கையை, நீ ஏற்க வேண்டும். அதற்குப் பிறகு, நீ எங்களை வணங்கலாம்" என்றார் புங்கவர்.
புங்கவர் உட்படப் பன்னிரண்டு முனிவர்கள் அரசன் முன் வந்து நின்றனர். சட்டென்று, அனைவரும் ஒரு சேர அரசனின் காலில் விழுந்து வணங்கினர்.
"இதென்ன அபசாரம்!" என்று கூவியபடியே பின்வாங்கினான் அரசன். "அறிவிலும், வயதிலும் மூத்தவர்களான, அனைவராலும் வணங்கப்பட வேண்டிய முனிவர்கள் என் காலில் விழுகிறீர்களே!"
"அரசே! உன்னைப் போல் செங்கோல் வழுவாத மன்னனை உலகமே வணங்க வேண்டும். இந்த உலகத்தின் சார்பாக, நாங்கள் பன்னிருவர் உங்களை வணங்கினோம். அவ்வளவுதான்!" என்றார் புங்கவர்.
"அரசே! 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்பது தொல்காப்பிய வாக்கியம். இந்த உயர்ந்த முனிவர்கள் தங்களை வணங்கியது இந்த உலகமே தங்கள் செங்கோலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உங்களை வணங்கியதாகத்தான் ஆகும்!" என்றார் அமைச்சர் ஆமருவியார்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை
குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
No comments:
Post a Comment