"பின்னே, என்னை ஏன் உங்க வீட்டில தங்க வச்சிருக்கீங்க?" என்றார் துறவி அருட்செல்வம், சிரித்துக் கொண்டே!
"உண்மையைச் சொல்லணும்னா, என் நண்பர் மாணிக்கம்தான் இந்த ஏற்பாட்டைப் பண்ணினாரு. ஏன்னா, இந்த ஊர்லேயே பெரிய வீடு என்னோடதுதான். நீங்க தங்கறதுக்காக, என் வீட்டு மாடி முழுக்க ஒதுக்கி இருக்கேன். நீங்க தங்க வசதியான அறை. அறைக்கு வெளியில நீங்க இப்ப உட்கார்ந்து இருக்கிற பெரிய லவுஞ்ஜ். நிறைய பக்தர்கள் உக்காந்து உங்க பேச்சைக் கேக்கலாம். நீங்க இங்கே தங்கி இருக்கிற மூணு நாளும் வசதியாத் தங்கி இருக்கவும், உங்களைப் பாக்க வரவங்க சௌகரியமா வந்து உங்களைப் பார்க்கவும், உங்க பேச்சைக் கேக்கவும், இவ்வளவு வசதியான இடம் இந்த ஊர்லேயே என் வீட்டில மட்டும்தான் இருக்கு!" என்றார் பச்சையப்பன், பெருமையுடன்.
"உங்க வாழ்க்கையைப் பத்தி சுருக்கமா சொல்லுங்களேன்!"
"சொல்றேன்!" என்று உற்சாகமாக ஆரம்பித்த பச்சையப்பன், வீடு வீடாகப் போய்ப் பழைய பொருட்களை வாங்கி விற்கும் மிகச் சிறிய தொழிலைத் துவங்கிய தான், இன்று ஒரு இரும்பு உருக்காலை, பாத்திரங்கள் தயாரித்தல் என்று பல்வேறு தொழிற்சாலைகளை நடத்தி வரும் பெரிய தொழிலதிபராக வளர்ந்ததைப் பெருமை பொங்க விவரித்தார்.
"நல்லது!" என்ற அருட்செல்வம், "உங்க குடும்பத்தை நல்லாப் பாத்துக்கறீங்களா?" என்றார்.
"பாத்துக்காம? என் மனைவிக்கும், பையகளுக்கும் மாசா மாசம் சம்பளம் மாதிரி ஒரு பெரிய தொகையைக் கொடுத்துடறேன். அவங்க எங்கே வேணும்னாலும் போகலாம், எதை வேணும்னாலும் வாங்கலாம்!"
"அவங்களோட சுற்றுப்பயணம் எல்லாம் போறதுண்டா?"
"அதுக்கெல்லாம் எனக்கு ஏதுங்க நேரம்? அதான் காசு கொடுத்தடறேன் இல்ல? அவங்க எங்கே வேணும்னா போயிக்கலாம்."
"சினிமா, டிராமான்னு ஏதாவது?"
"அவங்க எங்கே வேணும்னாலும் போயிக்கலாம். என்னைக் கட்டி இழுக்காதீங்கன்னு சொல்லிட்டேன், ஏன், வீட்டில அவங்களோட உக்காந்து டிவி கூடப் பாக்கறது இல்ல."
"கோவிலுக்கெல்லாம் போவீங்களா?"
"அதான் சொன்னேனே சாமி! கடவுள், ஆன்மீகம் இதையெல்லாம் பத்தி நான் நினைச்சுப் பாக்கறதில்லேன்னு. கடவுள்னு ஒத்தர் இருக்காரா, இல்லையான்னு கூட நான் யோசிச்சதில்ல."
"உங்க பெற்றோர்கள் இருக்காங்களா?"
"இல்லை. ரெண்டு பேருமே போய்ச் சேந்துட்டாங்க."
"அவங்களுக்கு சடங்குகள் எதுவும் செய்யறதுண்டா?"
"அவங்களுக்கு ஈமச் சடங்குகள் செஞ்சதுக்கப்பறம், எந்தச் சடங்கையும் செய்யல. அவங்க இறந்த நாளைக் கூட நான் நினைச்சுப் பாக்கறதில்ல. எப்பவாவது தோணும், ஓ இன்னிக்கு ஆகஸ்டு 17 ஆச்சே, இன்னிக்குத்தானே அப்பா காலமானார்னு. ஆனா அந்த நினைப்பை அதோட விட்டுடுவேன்."
"ஏழைகளுக்கு உதவறது, அது மாதிரி எதுவும் செய்யறீங்களா?"
"சாமி! ஒவ்வொத்தரும் அவங்க வாழ்க்கையை அவங்களேதான் பாத்துக்கணும். மத்தவங்களுக்கு உதவறதுங்கற எண்ணமே தப்பானதுன்னுதான் நான் நினைக்கிறேன்."
ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்ட அருட்செல்வம், "சரி. மாணிக்கத்தை வரச் சொல்லுங்க!" என்றார்.
"எதுக்கு சாமி? ஏதாவது வேணும்னா கேளுங்க, நான் செஞ்சு தரேன்!" என்றார் பச்சையப்பன்.
"பெரியவங்க சொன்ன எந்த விஷயத்தையும் நீங்க செய்யல. உங்க குடும்பத்தினர்கிட்ட அன்பா இருக்கறதைக் கூடச் செய்யல. உங்க வீட்டில தங்கறது சரின்னு எனக்குத் தோணல. மாணிக்கத்துக்கிட்ட சொல்லி வேற எங்கேயாவது இடம் பார்க்கச் சொல்லணும். மரத்தடியா இருந்தாக் கூடப் பரவாயில்ல!" என்றார் அருட்செல்வம்.
குறள் 538:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.