"முத்துசாமி சாரைக் கூப்பிடு!" என்றான் ராகவ் என்ட்டர்பிரைசஸ் அதிபரான ராகவன்.
முத்துசாமி வந்ததும், "உக்காருங்க" என்ற ராகவன், அவர் இருக்கையில் அமர்ந்ததும், "பில்டர் மாரிமுத்துவைப் போன வாரம் பாத்தீங்களே, அப்ப உங்களை என்னிக்கு வரச் சொன்னாரு?" என்றான்.
"அடுத்த புதன்கிழமை வாங்கன்னு சொன்னாரு..." என்ற முத்துசாமி, அன்றுதான் புதன்கிழமை என்பதை உணர்ந்தவராக, "இன்னிக்குத்தான்!" என்றார் தாழ்ந்த குரலில்.
"இன்னிக்குப் போனீங்களா?"
"இல்ல. இப்பவே போய்ப் பாத்துட்டு வந்துடறேன்" என்று எழுந்தார் முத்துசாமி.
"உக்காருங்க!" என்று அவரை அமர்த்திய ராகவன், "காலை நேரத்திலதான் அவரைப் பார்க்க முடியும். இப்ப அவர் இருக்க மாட்டாரு. ஏன் காலையிலேயே போகல? மறந்துட்டீங்களா?" என்றான்.
முத்துசாமி சங்கடத்துடன் மௌனமாகத் தலையாட்டினார்.
சற்று நேரம் மௌனமாக இருந்த ராகவன், "நான் இந்தத் தொழிலை ஆரம்பிச்சு, ஓரளவுக்கு அதை நல்லா நடத்திக்கிட்டிருக்கறதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்றான்,
"உங்களோட கடினமான உழைப்புதான்" என்றார் முத்துசாமி, இதை ஏன் இவர் தன்னிடம் கேட்கிறார் என்று புரியாதவராக.
"இருக்கலாம். ஆனா, என்னோட வெற்றிக்குக் காரணமா நான் எப்பவுமே நினைக்கிறது ஒத்தரைத்தான்!"
"உங்க அப்பாவா?"
ராகவன் சிரித்து விட்டு, "சென்ட்டிமென்ட்டலா வேணும்னா அப்படிச் சொல்லலாம். ஏதாவது பேட்டியில இப்படிச் சொன்னா, இவன் பெற்றோர் மேல எவ்வளவு மதிப்பு வச்சுருக்கான் பாருன்னு பல பேர் என்னை உயர்வா நினைக்கலாம். பெற்றோர்ங்கறது பொதுவான ஒரு பதில். எல்லார் வாழ்க்கையிலுமே பெற்றோர்கள் முக்கியமானவர்கள்தான். அதைச் சொல்ல வேண்டியதே இல்லை. ஆனா குறிப்பா சில பேரோட தாக்கம் நம் வாழ்க்கையில இருக்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஒத்தரைத்தான் நான் சொன்னேன். அவர் பேரு தண்டபாணி. ஆரம்ப காலத்தில, நான் வேலை கிடைக்காம திண்டாடிக்கிட்டிருந்தபோது, எனக்குத் தெரிஞ்ச ஒத்தரோட சிபாரிசில, அவரைப் போய்ப் பார்த்தேன். "
"அவர்தான் உங்களுக்கு முதல்ல வேலை கொடுத்தாரா?"
"வேலை கொடுக்கல! அதனாலதான் அவரைக் குறிப்பிட வேண்டி இருக்கு! நான் அவரைப் போய்ப் பார்த்தப்ப, இப்ப பில்டர் மாரிமுத்து உங்களை புதன்கிழமை வரச் சொன்ன மாதிரி, அவர் என்னை செவ்வாய்க்கிழமை வரச் சொன்னாரு.
"ஆனா, செவ்வாய்க்கிழமை நான் போகல. அவர் வரச் சொன்னதையே நான் மறந்துட்டேன். அன்னிக்கு ராத்திரி தூங்கறதுக்கு முன்னாலதான் ஞாபகம் வந்தது. அடுத்த நாள் காலையிலே அவரைப் போய்ப் பார்த்தேன். 'உன்னை செவ்வாய்க்கிழமை இல்ல வரச் சொன்னேன்? இன்னிக்குத்தான் செவ்வாய்க்கிழமையா?' ன்னு கேட்டாரு. 'சாரி சார், மறந்துட்டேன்' னு சொன்னேன். 'சாரி! மறதியை நான் மன்னிக்கறதில்லே' ன்னு சொல்லி, என்னை அனுப்பிட்டாரு.
"செவ்வாய்க்கிழமை நான் போயிருந்தா, ஒருவேளை அவர் எனக்கு வேலை கொடுத்திருக்கலாம். என்னோட மறதியாலேயும், அலட்சியத்தாலேயும், அந்த வாய்ப்பை இழந்துட்டேனேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். அதுவும், அப்ப வேலை கிடைக்காம கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தப்ப, கைக்குக் கிடைச்ச ஒரு வாய்ப்பை கைநழுவப் போக விட்டுட்டோமேன்னு நான் பட்ட வேதனை எவ்வளவு ஆழமானதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.
"அப்புறம் என் வாழ்க்கை வேற விதமா மாறிட்டாலும், அந்த அனுபவத்தை நான் மறக்கல. அதிலிருந்து நான் கத்துக்கிட்ட பாடம் அலட்சியம், மறதி இவற்றால, நாம செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாம இருந்துடக் கூடாதுங்கறது. அதனால, தண்டபாணிங்கற அந்த மனிதரை ஒரு வழிகாட்டியா நான் எப்பவுமே நினைக்கிறேன்."
"சாரி சார்! இன்னிக்குப் போக மறந்தது என்னோட தப்புதான். இனிமே இப்படி நடக்காம பாத்துக்கறேன்" என்றார் முத்துசாமி.
"என்னோட அனுபவத்தை உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. நம்ம ஆஃபீஸ் சின்னது. இங்கே வேலை செய்யறவங்க பெரும்பாலும் இளைஞர்கள். வயசிலேயும் அனுபவத்திலேயும் மூத்தவரா இருக்கறவரு நீங்க ஒத்தர்தான்.
"நான் அவங்ககிட்ட ஏதாவது சொன்னா, ஏதோ முதலாளி சொல்றாருன்னு கேட்டுப்பாங்களே தவிர, அதை மனசில வாங்கிக்கிட்டு, தங்களை மாத்திக்க மாட்டாங்க. ஆனா, அவங்களோட நெருங்கிப் பழகற நீங்க சொன்னா, அவங்க கேட்டுப்பாங்க. செய்ய வேண்டிய எதையும் மறக்காம, செய்ய வேண்டிய நேரத்தில செய்யற பழக்கத்தை அவங்ககிட்ட உருவாக்குங்க. அவங்க அப்படிச் செய்ய ஆரம்பிச்சாங்கன்னா, அதனால நம்ம கம்பெனிக்கு நன்மைகள் ஏற்படும்கறதை விட, அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில அவங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். என் அனுபவத்திலேந்து இதை என்னால உறுதியாச் சொல்ல முடியும்" என்றான் ராகவன்.
குறள் 537:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
No comments:
Post a Comment