Sunday, January 2, 2022

539. கதையும் காரணமும்

"சார்! முராட் நாட்டைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!" என்றார் தேர்தல் ஆலோசகர் பூஷன்.

"தெரியும். சிறிய நாடு என்றாலும் ஜனநாயக முறையைப் பின்பற்றும் நாடு. இங்கே நாடாளுமன்ற முறை என்றால் அங்கே அதிபர் முறை. ஏன் கேட்கிறீர்கள்?" என்றார் பிரதமர் காளிசரண்.

"சில வருடங்களுக்கு முன்பு அங்கே காட்ஸே என்று ஒருவர் அதிபராக இருந்தார்,"

"பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது சர்வதேச அரசியலில் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. சொல்லுங்கள்!"

"காட்ஸே மிகப் பெரும் மக்கள் ஆதரவுடன் தேர்தலில் வென்று அதிபர் ஆனார். அவருக்குக் கிடைத்த பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வெளிக் கொணர்ந்து அதை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவேன், எல்லா நிலைகளிலும் ஊழலை ஒழிப்பேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன், வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பேன் என்றெல்லாம் அவர் அளித்த வாக்குறுதிகள் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால் பதவிக்கு வந்ததும் அவர் பதவி சுகத்தை அனுபவிப்பதில்தான் அதிகம் ஆர்வம் காட்டினார். உலகம் முழுக்கச் சுற்றி வந்தார்."

"நம் நாட்டுக்கு அவர் வந்தது எனக்கு நினைவுக்கு இருக்கிறது."

"ஆமாம். பதவியில் இருக்கும்போதே உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் என்பது போல் இருந்தன அவருடைய பயணங்கள். ஏராளமான செலவில் தனக்கென்று ஒரு தனி விமானம் வாங்கினார். விலை உயர்ந்த உடைகளை வாங்கி உடுத்திக் கொண்டார்..."

"அது சரி. அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா இல்லையா?" என்றார் காளிசரண் குறுக்கிட்டு.

"அதற்குத்தான் வருகிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதுடன் தன் வாக்குறுதிகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார்."

"எப்படி?"

"பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக அவர் எடுத்த சில நடவடிக்கைகளால் பொருளாதரம் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர்.  அவருக்கு நெருக்கமான சில தொழிலதிபர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்து வந்தனர்.  வெளிப்படையான நிர்வாகம் என்று அவர் அறிவித்ததற்கு மாறாக, கேள்வி கேட்டவர்கள் அனைவரையும் தேசநலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்கள் மீது கடுமையான சட்டங்களைப் பயன்படுத்திச் சிறையில் அடைத்தார். இதனால் பெரும்பாலானோர் பணிந்தனர். பணியாத சிலர் சிறைகளில் வாடினர்."

"இப்படியெல்லாம் செய்தால் மக்களிடையே அதிருப்தி ஏற்படாதா?" என்றார் பிரதமர் காளிசரண்.

"காட்ஸே அடிக்கடி ஒன்று சொல்லுவார். என் கண்ணுக்கு எட்டியவரை எனக்கு எதிரிகளே இல்லை. மக்கள் என் பின்னால் இருக்கிறார்கள்' என்று! எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருந்ததால் அவர் கூறியது உண்மை என்பதுபோல்தான் தோன்றியது. அடுத்த தேர்தலில் முன்பு பெற்ற வெற்றியை விடப் பெரிய வெற்றியைப் பெறுவார் என்று அவருக்கு அடிபணிந்து நடந்த ஊடகங்கள் கூறி வந்தன. அவரை எதிர்த்தவர்கள் கூட அவர் மீண்டும் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்து மனச்சோர்வுடன் இருந்தனர். ஆனால் யாரும் எதிரிபாராத விதமாக அடுத்த தேர்தலில் அவர் தோற்று விட்டார்."

"எப்படி?" என்றார் காளிசரண் வியப்புடன்.

"அவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடிய வலிமை பெற்ற தலைவர் யாருமே இல்லை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, அரசியலுக்குப் புதிதாக வந்த ஒரு இளைஞர் அவரை எதிர்த்துப் போட்டி இட்டார். பலம் இல்லாமல் இருந்த எல்லா எதிர்க்கட்சிகளும் வேறு வழி இல்லாமல் அந்த இளைஞரை ஆதரிப்பதாஈக அறிவித்தன. ஆனால் அந்த இளைஞர் வெற்றி பெறுவார் என்று யாரும் நினைக்கவில்லை. ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டதும் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி. அந்த இளைஞர் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காட்ஸேயை வீழ்த்தி இருந்தார்!"

"ஓ, இப்போது ஞாபகம் வருகிறது. அவர் பெயர் காருண்தானே? அவர் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று படித்திருக்கிறேன். ஆனால் இது எப்படி நடந்தது?"

"வெற்றியின் மமதையால் தன் கடமையைச் செய்யாமல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக இருந்த காட்ஸே மீது மக்களுக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடுதான் இது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட மக்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளாமல் காட்ஸே உருவாக்கிய மாயையில் மயங்கி இருந்தார்கள். ஆனால் காட்ஸேக்கு எதிராக யார் நின்றாலும் அவருக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருந்தார்கள் என்பதுதான் உண்மை" என்று முடித்தார் பூஷன்.

சில விநாடிகள் மௌனமாக இருந்த காளிசரண், "நீங்கள் இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது!" என்றார் இலேசாகச் சிரித்தபடி.

"நான் உங்கள் அரசியல் ஆலோசகன். உங்களுக்குச் சரியான விதத்தில் வழி காட்டி உங்களைத் தொடர்ந்து வெற்றி அடையச் செய்ய வேண்டியது என் பணி. ஆனால் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் புகழ்ந்து கொண்டு, உங்கள் எதிரிகள் பலம் இழந்து விட்டதாகச் சொல்லி உங்களை மயக்கத்தில் ஆழ்த்தும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. உங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை நீங்கள் இன்னும் எடுக்கவில்லை. நீங்கள் விரைந்து செயல்பட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியை உடனே துவங்க வேண்டும். மக்களுக்கான உங்கள் கடமைகளைச் செய்தால்தான் அரசியலில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற முடியும்" என்றபடியே பிரதமரின் முகத்தைப் பார்த்தார் பூஷன்.

காளிசரண் மௌனமாகத் தலையை ஆட்டினார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 539:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

பொருள்:
மமதையால் பூரித்துப் போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்து போய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்..
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...