Tuesday, December 14, 2021

536. முதல்வரின் டயரி

"முதல்வரோட காலை நிகழ்ச்சி முடிஞ்சு போச்சு. பிற்பகல்ல அரசு விருந்தினர் விடுதியில ஓய்வு. மாலையில ஒரு பொதுக்கூட்டம். அங்கேயிருந்து நேரே விமான நிலையம் வந்துடுவாரு. இதுதான் அவரோட நிகழ்ச்சி நிரல்" என்றார் முதல்வரின் தனி உதவியாளர் சண்முகம். 

பாதுகாப்பு அதிகாரி தலையாட்டி விட்டு, "பிற்பகல்ல ரெண்டு மூணு மணி நேரம் நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு சொல்லுங்க!" என்றார் மெதுவாகச் சிரித்துக் கொண்டே.

"ஓய்வில்லாம வேலை செய்யற முதல்வர்கிட்ட வேலை செய்யற நமக்கு ஓய்வு கிடைக்கிறதும் அபூர்வமாத்தான் இருக்கு! என்ன செய்யறது?" என்றார் சண்முகம்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த ஓய்வு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மதிய உணவுக்குப் பிறகு ஒரு பழைய நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பி விட்டார் முதல்வர். 

அவர் போகப் போகும் இடம் எப்படிப்பட்டது என்று தெரியாததால் ஓய்வை எதிர்பார்த்த பாதுகாப்பு அதிகாரிக்குக் கூடுதல் பணிச்சுமை வந்து சேர்ந்தது. முதல்வர் செல்லப் போகும் பகுதிக்கு ஆட்களை முன்பே அனுப்பி அங்கே பாதுகாப்பான நிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார் அவர்.

முதல்வர் தன் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்காத முதல்வரின் பழைய நண்பர் சற்றுத் தடுமாறிப் போனார். அவரிடம் சற்று நேரம் தங்கள் பழைய நாட்களைப் பற்றிப் பேசி விட்டு விடைபெற்றார் முதல்வர்.

முதல்வர் விருந்தினர் விடுதிக்குத் திரும்பி வந்ததும் அவருடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, சண்முகம் அவரிடம் கேட்டார்: "ஐயா இப்ப பாத்துட்டு வந்தீங்களே இந்த நண்பர் யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"முதல்ல இந்த  ஊர்லதான் ஒரு சின்ன நிறுவனத்தில நான் வேலைக்குச் சேர்ந்தேன். அவரு அந்த நிறுவனத்தில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாரு. அப்ப இங்கே எனக்குத் தங்க இடம் கிடைக்கறது கஷ்டமா இருந்தது. எனக்கு வீடு கிடைக்கிறவரை எனக்கு அவர் வீட்டில தங்க இடம் கொடுத்தார். என்னை அவருக்கு முன்னே பின்னே தெரியாது. நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் அவருக்கு ஏதாவது உதவி செய்யணும்னு அப்பவே நினைச்சுக்கிட்டேன். அதுக்கு இப்பதான் சந்தர்ப்பம் கிடைச்சது. அவருக்கு என்ன உதவி வேணும்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். சட்டப்படி என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யணும்!" என்றார் முதல்வர்.

"முன்னால கூட வேற ஊர்கள்ள சில பேரை இப்படிப் பாத்துட்டு வந்தீங்களே அவங்க கூட..."

"அவங்களும் எனக்கு உதவி செஞ்சவங்கதான். எல்லாரையும் சந்திச்சுக்கிட்டு என்னால முடிஞ்ச பதில் உதவிகளை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன்!"

"எப்பவோ உதவி செஞ்சவங்களையெல்லாம் இவ்வளவு வருஷம் கழிச்சு ஞாபகம் வச்சுக்கிட்டு பதில் உதவி செய்யறீங்களே, ஆச்சரியமா இருக்கு!"

"ஞாபகத்தை மட்டும் நம்பி இருந்தா சில பேர் விட்டுப் போகலாம். அதனால எனக்கு யாராவது உதவி செஞ்சா அதையெல்லாம் உடனே இந்த நோட்டில குறிச்சு வச்சிப்பேன். இதை அடிக்கடி பாப்பேன். அவங்களுக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம், நேரம் வரும்போது உதவி செய்வேன். பல ஊர்களுக்குப் போகும்போது அங்கே இருக்கறவங்களை சந்திச்சு அவங்க தேவை என்னன்னு கேட்டு நிறைவேற்றுவேன்" என்றபடியே தன் கைப்பையிலிருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து சண்முகத்திடம் காட்டினார் முதல்வர்.

"ஐயா! உங்க கையில இந்த நோட்டு இருக்கறதை அடிக்கடி பாத்திருக்கேன். ஆனா அது உங்களோட டயரின்னு நினைச்சேன்" என்றார் உதவியாளர்.

பெரிதாகச் சிரித்த முதல்வர், "நீங்க அப்படி நினைச்சதில ஆச்சரியம் இல்ல. சில வருஷங்களுக்கு முன்னால என் வீட்டில வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினாங்க. நீங்க அப்ப இல்ல. அதனால உங்களுக்கு அது தெரிஞ்சிருக்காது. அவங்களுக்கு எதுவும் கிடைக்கல. இந்த நோட்டு மட்டும்தான் கிடைச்சது. ஒரு ரகசிய டயரின்னு நினைச்சு அதை எடுத்துக்கிட்டுப் போனாங்க. அதைப் படிச்சுப் பாத்துட்டு அதில அவங்க எதிர்பார்த்த விஷயம் எதுவும் இல்லேன்னு தெரிஞ்சதும் ஒரு வாரம் கழிச்சு திருப்பிக் கொடுத்திட்டாங்க!" என்றார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 536:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

பொருள்:
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...