Monday, September 27, 2021

520. செங்கல்வராயனின் செல்லப்பிள்ளை

"முதல்வர் ஒவ்வொரு அமைச்சரா கூப்பிட்டு அவங்க செயல்பாடு பற்றி பரிசீலனை பண்ணிக்கிட்டிருக்காரே, உங்க செயல்பாடு பற்றிப் பரிசீலனை பண்ணிட்டாரா?" என்றார் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தன்.

"என் செயல்பாடு பற்றிப் பரிசீலிக்கறதா? நான் கட்சியில ஒரு மூத்த தலைவர். அமைச்சரவையில முதல்வருக்கு அடுத்த ஆளா இருக்கிறவன். இப்ப முதல்வரா இருக்கிற இளங்குமரனை கட்சியில முன்னுக்குக் கொண்டு வந்தவனே நான்தான். பாலகுமார்ங்கற அவரோட பேரை இளங்குமரன்னு மாத்தி வச்சுக்கச் சொன்னதிலேந்து மறைந்த நம் தலைவர்கிட்ட அவரை அறிமுகப்படுத்தி, அவருக்குத் தேர்தல்ல சீட் வாங்கிக் கொடுத்து அமைச்சரவையில இடம் வாங்கிக் கொடுத்து அவருக்கு எவ்வளவு செஞ்சிருக்கேன்! பல பேர் அவரை செங்கல்வராயனோட செல்லப்பிள்ளைன்னே சொல்லுவாங்க. என் செயல்பாடு பற்றி அவர் பரிசீலிப்பாரா?" என்றார் செங்கல்வராயன் சிரித்தபடியே.

"ஆனாலும் அவர் முதல்வர். நீங்க அவர் அமைச்சரவையில இருக்கிற ஒரு அமைச்சர்ங்கறதுதானே யதார்த்தம்? எதுக்குக் கேட்டேன்னா, பல மூத்த அமைச்சர்களிட செயல்பாடுகளை முதல்வர் பரிசீலனை பண்ணி, அவங்க கிட்ட ரொம்பக் கடுமையாப் பேசினாராம். சின்ன முறைகேடு இருந்தா கூட பதவியைப் பறிச்சுடுவேன்னு எச்சரிச்சிருக்காராம். அதனாலதான் கேட்டேன்."

செங்கல்வராயன் பெரிதாகச் சிரித்து, "பரவாயில்லையே! தலைவர் இறந்த பிறகு, பேச்சாற்றல் உள்ள ஒரு இளம் தலைவரை முதல்வராக்கினா மக்கள்கிட்ட நம்ம கட்சிக்கு நல்ல பேர் கிடைக்கும்னு நினைச்சுதான் நம்மை மாதிரி மூத்த தலைவர்கள்ளாம் சேர்ந்து இளங்குமரனை முதல்வராக்கினோம். அவரும் சீக்கிரமே தன் செயல்பாடுகளினால மக்கள்கிட்ட நல்ல பேரு வாங்கிட்டாரு. இப்ப முதல்வராத் தன் அதிகாரத்தைக் காட்டணும்னு நினைக்கிறார் போலருக்கு. ஆனா இதெல்லாம் மத்தவங்ககிட்டதான். எங்கிட்ட அதெல்லாம் வச்சுக்க மாட்டாரு!" என்றார்.

செங்கல்வராயனின் கைபேசி அடித்தது.

பேசும்போதே செங்கல்வராயன் முகம் மாறுவதை ஆனந்தன் கவனித்தார்.

பேசி முடித்ததும் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்ட செங்கல்வராயன், "என் பி ஏ தான் பேசினாரு. எனக்கும் ரிவியூ மீட்டிங் இருக்காம் - நாளைக்கு!" என்றார்.

முதல்வரின் அறைக்குள் செங்கல்வராயன் நுழைந்ததும், தன் இருக்கையிலிருந்து எழுந்து, "வாங்கண்ணே!" என்று அவரைக் கைகூப்பி வரவேற்றான் இளங்குமரன்.

முதல்வரின் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்த செங்கல்வராயன்,"என்ன தம்பி, இது மாதிரி ரிவியூ எல்லாம்? எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு?" என்றார் குறை கூறும் தொனியில்.

"சரியாப் போகணுங்கறதுக்காகத்தானே அண்ணே இந்த ரிவியூ! உங்களுக்குத் தெரியாதது இல்ல. நீங்க எவ்வளவு அனுபவம் உள்ளவரு! அமைச்சர்கள் செயல்பாடு சரியா இருந்தாதான் அதிகாரிகளை அவங்க சரியா வழி நடத்தி மக்களுக்கு நன்மை செய்ய முடியும். எந்த மட்டத்திலேயும் ஊழல்களோ, முறைகேடுகளோ நடக்காம அரசாங்கத்தின் திட்டங்களோட பலன்கள் மக்களுக்குப் போய்ச் சேர வகை செய்ய முடியும். நீங்க ஒரு மூத்த அமைச்சர், அதோட என்னோட வழிகாட்டிங்கறதாலதான் பக்கத்தில தலைமைச் செயலர் கூட இல்லாம உங்ககிட்ட தனியாப் பேசறேன்" என்ற இளங்குமரன் ஒரு கோப்பை செங்கல்வராயனிடம் கொடுத்தான்.

"உங்க துறையில நடக்கிற சில முறைகேடுகள் பற்றி உளவுத்துறை கொடுத்த அறிக்கை இது. இதெல்லாம் உங்க கவனத்துக்கு வந்திருக்குமான்னு தெரியல. தயவு செஞ்சு இதைப்பத்தியெல்லாம் விசாரிச்சு, எல்லாத்தையும் சரி செஞ்சுடுங்க.எதிர்காலத்தில இது மாதிரி நடக்காம பாத்துக்கங்க. சரி. ஒரு திறப்பு விழாவுக்காக நான் கிளம்பணும். அப்புறம் பாக்கலாம்" என்று இருக்கையிலிருந்து எழுந்தான் இளங்குமரன்.

செங்கல்வராயன் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தபோதே, "எல்லாத்தையும் ஒரு வாரத்தில சரி செஞ்சுடுங்க. ஏன்னா, இந்த மாசக்கடைசியில நான் அமைச்சரவையை மாத்தி அமைக்கப் போறேன்!" என்றான் இளங்குமரன் சிரித்தபடியே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 52
 தெரிந்து வினையாடல்

குறள் 520:
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

பொருள்:
ஒரு வேலையைச் செய்பவன் தவறானபாதையில் செல்லாமல் வேலையை முறையாகச் செய்து வரும் வரை உலகம் கெடாது. ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய (வேலை செய்பவனின்) நிலைமையை ஆராய வேண்டும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...