Sunday, September 19, 2021

517. நல்லெண்ணத் தூதர்

"அரசே! கங்கவர்மரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது" என்றார் அமைச்சர்.

"என்ன எழுதி இருக்கிறார்?"

"நம் படை வீரர்கள் அவ்வப்போது எல்லை தாண்டி அவர் நாட்டுக்குள் நுழைகிறார்களாம். நாம் அவர் நாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தமாவதாக அவர் நினைக்கிறாராம். அவர்கள் நாடு சிறிய நாடு என்று நினைத்து நாம் அவர்கள் மீது படையெடுத்தால், அவர்களுக்கு உதவ ஒரு வலிய நாடு தயாராக இருப்பதாக நம்மை எச்சரித்திருக்கிறார்." 

"வியப்பாக இருக்கிறதே! நாம் அவர்களுடன் நட்பாகத்தானே இருக்கிறோம்? ஆமாம், நம் படை விரர்கள் எல்லை தாண்டி அவர்கள் நாட்டுக்குள் நுழைவது உண்மைதானா?"

"ஓரிரு வீரர்கள் எல்லை எது என்று அறியாமல் எல்லையைத் தாண்டிச் சென்றிருக்கலாம். வேண்டுமென்று அத்துமீறல்கள் எதுவும் நடந்திருக்காது."

"கங்கவர்மர். சமீபமாக சல்வ நாட்டுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். சல்வ நாட்டு மன்னன்தான் கங்கவர்மன் மனதில் நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களை விதைத்து, நம்முடன் போரை ஏற்படுத்தி, அதில் அவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி நுழைந்து நம் நாட்டின் சில பகுதிகளைப் பிடிக்கத் திட்டமிடுகிறான் என்று நினைக்கிறேன். நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?" என்றார் அரசர்.

"கங்கவர்மரிடம் ஒரு தூதுவரை அனுப்பி நம் நல்லெண்ணத்தை அவருக்குத் தெரியப்படுத்துவோம். அப்போதும் அவர் நம் நட்பைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவருடன் போர் புரிய நாம் தயாராக வேண்டியதுதான்!" என்றார் அமைச்சர்.

"நல்ல யோசனை. தூதுவராக யாரை அனுப்பலாம்?"

"நம் படைத்தலைவரை அனுப்பலாம், மன்னா. அவர் தெளிவாகவும் உறுதியாகவும் பேசக் கூடியவர். அவர் மூலம் நம் நல்லெண்ணத்தைத் தெரிவிப்பதுடன், கங்கவர்மருக்கு நம் எச்சரிக்கையையும் தெரிவிக்கலாம்!"

அரசர் சற்று யோசித்து விட்டு, "நம் அரசவைப் புலவரை அனுப்பினால் என்ன?" என்றார்.

"அரசே! புலவருக்கு அரசாங்க விஷயங்கள் பற்றி அதிகம் தெரியாது. அவரால் நம் கருத்தைத் தெளிவாக கங்கவர்மனிடம் எடுத்துரைக்க முடியுமா என்பது சந்தேகம்தான்!" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"அவர் என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் அவருக்கு விளக்கிச் சொல்லுங்கள். கங்கவர்மர் ஏற்கெனவே நம் மீது தவறான எண்ணம் கொண்டிருக்கையில், படைத்தளபதியை அனுப்புவது நாம் போரை விரும்புகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். புலவரை அனுப்புவது ஒரு நட்புச் செய்தியாக இருக்கும். 

"கங்கவர்மனுக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. எனவே நம் புலவர் அவரிடம் பல விஷயங்கள் பற்றிப் பேசி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் நம் புலவர் அவர்கள் நாட்டுப் புலவர்களிடம் கலந்து உரையாடுவதும் இரு நாடுகளிடையே நட்பை வளர்க்கும்.

"நம் புலவர் இனிமையாகப் பேசும் இயல்புடையவர். அவரிடம் மிகுந்த நகைச்சுவை உணர்வு உண்டு. இந்த குணஙுகளே அவர் செல்லும் நோக்கத்துக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?"

அரசர் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் தலையசைத்தார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 52
 தெரிந்து வினையாடல்

குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

பொருள்:
இந்தச் செயலை இக்கருவியால் (இந்த வழியில்) இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்து அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...