Sunday, September 26, 2021

519. கண்ணன் என் சேவகன்!

"ரெண்டு வருஷம் முன்னால நான் இங்கே வந்திருக்கேன். ஞாபகம் இருக்கா?" என்றார் தொழிற்சாலை ஆய்வாளர்.

"மன்னிக்கணும். எனக்கு நினைவில்லை" என்றார் நிர்வாக இயக்குனர் பரமசிவம்.

"அப்ப நீங்க என்னை கவனிச்சிருக்க மாட்டீங்க. உங்க மானேஜர் ஒத்தர் இருந்தாரு. அவருதான் எனக்கு எல்லா விவரங்களும் கொடுத்து ஃபேக்டரியை இன்ஸ்பெக்ட் பண்ணவும் உதவினாரு. எல்லாம் பர்ஃபெக்டா இருந்தது" என்றார் ஆய்வாளர்.

"அப்படித்தானே இருக்க முடியும்?"

பரமசிவம் என்ன சொல்கிறார் என்று புரியாமல் ஆய்வாளர் அவர் முகத்தைப் பார்த்தார்.

"எல்லாம் பர்ஃபெக்டா இருக்கணும்னுதானே நீங்க எதிர்பார்ப்பீங்க?" என்றார் பரமசிவம்.

"ஓ, நீங்க அப்படிச் சொன்னீங்களா? பர்ஃபெக்டா இருக்கறதை விடுங்க. ஒரு சில இடங்களைத் தவிர எங்கேயும் எதுவுமே சரியா இருக்கறதில்ல. அரசாங்கத்தோட விதிமுறைகளை யாருமே கடைப்பிடிக்கறதில்ல. ஓரளவுக்குக் கடைப்பிடிக்கறவங்க ரிகார்டுகளை சரியாப் பராமரிக்க மாட்டாங்க. ஒரு சில தொழிற்சாலைகள்ளதான் எல்லாம் சரியா இருக்கும். அதில உங்களோடதும் ஒண்ணு!" என்றார் ஆய்வாளர்.

"தாங்க்ஸ்!"

"நான் சொன்னது நான் போன தடவை வந்தப்ப இருந்த நிலைமை பத்தி! அதுக்கப்பறம் ரெண்டு மூணு தடவை வேற இன்ஸ்பெக்டர்கள் வந்திருக்காங்க.அவங்க சில குறைபாடுகளைக் குறிப்பிட்டிருக்காங்க. இப்ப  குறைபாடுகள் நிறையவே இருக்கு. குறிப்பா ரிகார்டுகள் எதுவுமே சரியா இல்ல."

பரமசிவம் மௌனமாக இருந்தார்.

"போன தடவை நான் வரச்சே ஒரு மானேஜர் இருந்தாரே, அவர் எல்லாத்தையும் சரியா வச்சிருந்தாரு. ரொம்ப நல்ல மனுஷன். அவர் பேரு என்ன, மறந்துட்டேன்!" என்றார் ஆய்வாளர்.

"கண்ணன்."

"ஆங்... கண்ணன். இப்ப ஞாபகர் வருது. அருமையான மனுஷன். இப்ப அவரு இல்லையா?"

'இல்லை. வேலையை விட்டுப் போயிட்டார்" என்றார் பரமசிவம். 'அவன் போனதும் எல்லாமே என்னை விட்டுப் போய் விட்டன' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

திகம் படிக்காத கண்ணன் அவர் தொழிற்சாலையில் ஒரு அலுவலக உதவியாளனாகச் சேர்ந்து, தன் ஆர்வத்தாலும், உழைப்பாலும், முன்னெடுப்பாலும், ஒரு சில வருடங்களில் பரமசிவத்தின் நம்பிக்கையை முழுவதுமாகப் பெற்று விட்டான். 

ஒரு கட்டத்தில் கண்ணனுக்கு மானேஜர் என்ற பதவியை அளித்து, தொழிற்சாலையை நிர்வகிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டு, தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் பரமசிவம்.. 

விரிவாக்கத் திட்டத்தை உருவாக்கிய பிறகு, அதைச் செயலாக்க வேலாயுதம் என்ற பொறியியல் பட்டதாரியை நியமித்து அவனுக்கு ஜெனரல் மானேஜர் என்ற பதவியைக் கொடுத்தார். 

வேலாயுதம் விரிவாக்கத்துக்காக நியமிக்கப்பட்டாலும், ஜெனரல் மானேஜர் என்ற தன் பதவியின் அதிகாரத்தில், மானேஜர் கண்ணன் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கினான். 

ஆயினும், கண்ணன் இதைப் பற்றிப் பரமசிவத்திடம் எதுவும் சொல்லவில்லை.

ஒருமுறை வேலாயுதம் பரமசிவத்திடம் கண்ணன் மீது சில புகார்களைக் கூறினான். தொழிற்சாலைக்காக மூலப் பொருட்கள் வாங்குவதில் கண்ணன் கமிஷன் அடிப்பதாகவும், செலவுகளை  அதிகமாகக் காட்டி மாதாமாதம் ஒரு கணிசமான தொகையைச் சுருட்டுவதாகவும் கூறினான்.

பரமசிவம் இது பற்றிக் கண்ணனிடம் எதுவும் கேட்கவில்லை. தன் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்பவர்கள் சிலரிடம் விசாரித்தார். 

அவர்களில் சிலர் கண்ணனிடம் இதைச் சொல்லி, "நீங்கள் எவ்வளவு நேர்மையானவர்! உங்களைப் போய் உங்கள் முதலாளி சந்தேகப்படுகிறாரே!" என்றனர்.

சில நாட்களில் கண்ணன் பரமசிவத்திடம் தன் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்தான். முதலில் பரமசிவம் அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். தன் முடிவில் கண்ணன் உறுதியாக இருந்ததும் அவனை வற்புறுத்தாமல் வேலையிலிருந்து விடுவித்தார். 

'எப்படியும் ஜெனரல் மானேஜராக இருக்கும் வேலாயுதத்துக்கும், கண்ணனுக்கும் ஒத்துப் போகவில்லை. விரிவாக்கம்தான் முக்கியம். எனவே வேலாயுதம் தொடர வேண்டியது முக்கியம். ஒரு விதத்தில் கண்ணன் வேலையை விட்டுப் போவது நல்லது' என்று அப்போது அவர் சிந்தனை ஓடியது.

எதிர்பாராதவிதமாக, சந்தையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் அவருடைய விரிவாக்கத் திட்டதைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதற்காகச் செலவிட்ட தொகை ஒரு பெரிய இழப்பாக ஆகி அவர் நிறுவனத்துக்கும் அவருக்கும் ஒரு பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தியது..

விரிவாக்கத் திட்டம் நிறைவற்றப்பட முடியாது என்ற நிலை வந்ததும், வேலாயுதம் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறொரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டான்.

பரமசிவம் ஏற்கெனவே செய்து கொண்டிருந்த தொழிலும் நலியத் தொடங்கியது.

கண்ணனைப் போன்ற ஒரு சிறந்த நிர்வாகியை, ஒரு நல்ல மனிதனை இழந்தது தன் தொழிலையே எப்படி பாதித்து விட்டது என்பதை அவர் உணர்ந்தார்.

கண்ணனைத் திரும்ப அழைத்துக் கொள்ள அவர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

"போன தடவை எல்லாம் பர்ஃபெக்டா இருந்ததால, உங்க விஷயத்தில நான் கடுமையா இருக்க விரும்பல. என்னென்ன குறைபாடுகள்னு விளக்கி உங்களுக்கு ஒரு நோட்டீஸ் வரும். அதையெல்லாம் சரி பண்ணிடுங்க. ரெண்டு மாசம் கழிச்சு மறுபடி இன்ஸ்பெக்‌ஷனுக்கு வருவோம். அப்பவும் குறைபாடுகள் தொடர்ந்தா, சட்டப்படி நடவடிக்கை எடுக்கறதைத் தவிர வேறு வழியில்லை" என்றார் ஆய்வாளர்.

'நீங்கள் அடுத்த முறை வரும்போது இந்தத் தொழிற்சாலை இருக்குமோ என்னவோ!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட பரமசிவம் மௌனமாகத் தலையாட்டினார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 52
 தெரிந்து வினையாடல்

குறள் 519:
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

பொருள்:
தான் மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...