"சார்! இந்த கம்பெனி ஷேரை நாம வாங்கி மூணு வருஷம் ஆச்சு. நாம 65 ரூபாய்க்கு வாங்கினோம். இப்ப விலை 52 ரூபாய்க்கு வந்துடுச்சு. விலை இன்னும் கீழே போகுமாம். இந்த ஷேரை இப்பவே வித்துடறதுதான் நல்லதுன்னு எல்லாரும் சொல்றாங்க" என்றான் தொழிலதிபர் ராமநாதனின் அந்தரங்க உதவியாளன் விவேக்.
"எல்லாரும்னா?" என்றார் ராமநாதன்.
"டிவி சானல்கள்ள வர ஆலோசகர்கள் அநேகமா எல்லாருமே!"
"சரி. நான் யோசிச்சுச் சொல்றேன்."
ஒரு வாரம் கழித்து, விவேக் ராமநாதனிடம், "சார்! அந்த ஷேர் விக்கறதைப் பத்திப் போன வாரமே சொன்னேன். இப்ப விலை இன்னும் கொஞ்சம் இறங்கிடுச்சு. இன்னிக்கு 48 ரூபாயில ஓபன் ஆகியிருக்கு" என்றான்.
"நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க! 45 ரூபாய்க்கு இன்னும் ஆயிரம் ஷேர் வாங்கிடுங்க" என்றார் ராமநாதன்.
"சார். அது ரிஸ்க் ஆயிடும். விலை இன்னும் கீழே போகும்னு சொல்றாங்க."
"யார் சொல்றாங்க? டிவி சானல்ல வர ஆலோசகர்களா?"
"நம்ம ஃபைனான்ஸ் மானேஜர் கூட சொல்றாரு."
ராமநாதன் சிரித்து விட்டு, "நம் கம்பெனி சம்பந்தமான விஷயங்களா இருந்தா, நம்ம ஃபைனான்ஸ் மானேஜரோட ஆலோசனையைக் கேட்டுப்பேன். ஆனா, என்னோட தனிப்பட்ட முதலீடுகளுக்காக, நான் வேற ஒரு ஆலோசகரை வச்சிருக்கேன். அவர் சொல்றபடிதான் என்னால செய்ய முடியும்."
"சொல்லி இருக்கீங்க சார்! ஆனா பல பேரோட கருத்தும் எதிர்மறையா இருக்கறப்ப, அவர் ஒத்தரோட கருத்துப்படி செயல்படறது சரியா இருக்குமா?"
"விவேக், உங்க கவலை எனக்குப் புரியுது. எல்லாரும் ஒரு மாதிரி கருத்து சொல்றப்ப, என்னோட ஆலோசகர் வேற விதமா சொன்னா, அது சரியா இருக்குமாங்கற உங்க சந்தேகம் இயல்பானதுதான். உங்களுக்கு என்னைப் பத்தித் தெரியும். நான் யாரையும் செலக்ட் பண்றதுக்கு முன்னால, அவங்களைப் பத்தி நல்லா ஸ்டடி பண்ணுவேன். உங்களைக் கூட அப்படித்தானே செலக்ட் பண்ணினேன்?
"முதலீடு ஆலோசனைங்கறது ஒரு பெரிய கலை. அது எல்லாருக்கும் கைவராது. நிறைய ஆலோசகர்கள் மார்க்கெட் நிலவரங்களுக்கு ஏத்தபடிதான் தங்களோட ஆலோசனைகளைச் சொல்வாங்க. அப்படிப்பட்டவங்களோட ஆலோசனை பல சமயங்கள்ள தப்பாப் போயிடும்.
"ஆனா, என்னோட ஆலோசகர் உணர்ச்சி வசப்படாம, மார்க்கெட் நிலவரங்களைப் பார்த்து பயந்து தன் கருத்தை மாத்திக்காம, கம்பெனியோட செயல்பாடுகள், பொருளாதரம், மார்க்கெட் இவற்றோட நீண்ட காலப்போக்குகள் இதையெல்லாம் நல்லா ஆராய்ஞ்சுதான் ஆலோசனை சொல்லுவாரு.
"அவரோட அணுகுமுறை, அவரோட டிராக் ரிகார்ட் எல்லாத்தையும் நல்லா ஆராய்ஞ்சு பாத்துட்டுத்தான், நான் அவரைத் தேர்ந்தெடுத்தேன். கடந்த காலத்தில கூட, சில சமயங்கள்ள, அவர் ஆலோசனை மற்றவங்க சொல்றதுக்கு முரணா இருந்திருக்கு. ஆனா, அப்பல்லாம் அவர் சொன்னதுதான் சரியா இருந்திருக்கு.
"ஒரு ஆலோசகரை நல்லா ஆராய்ஞ்சு பார்த்துத் தேர்ந்தெடுத்தப்பறம், அவர் ஆலோசனைப்படி செயல்படறதுதான் முறை. ஒருவேளை, இந்த முறை அவரோட ஆலோசனை தப்பாக் கூடப் போகலாம். அது எல்லாருக்கும் நடக்கறதுதான். அதனால, அவரோட ஆலோசனைப்படிதான் நான் செயல்படப் போறேன். நீங்க நான் சொன்னபடி, விலை 45 ரூபாய்க்கு வந்ததும், ஆயிரம் ஷேர் வாங்கிடுங்க" என்றார் ராமநாதன்.
No comments:
Post a Comment