Monday, September 6, 2021

510. புதிய நிர்வாகி

அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து நீண்ட காலம் அந்த நிறுவனத்தின் வட மாநில அலுவலகங்களிலேயே பணியாற்றி வந்த தங்கப்பன் சென்னை மண்டலத்தின் பொது மேலாளராக இருந்த நம்பி ஓய்வு பெற்றதால், பதவி உயர்வு பெற்று சென்னை மண்டலத்தின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.

ஓய்வு பெறும் பொது மேலாளர் நம்பி, தங்கப்பனுக்கு அலுவலக ஊழியர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

"இவர் என் பர்சனல் செகரெட்டரி ரமேஷ். பத்து வருஷமா இந்த நிறுவனத்தில வேலை செய்யறாரு. எனக்கு வலது கையா இருந்தாரு. என் வேலையை அவரே முழுமையாப் பாக்கற அளவுக்குத் திறமையானவரு. அதை விட ரொம்ப முக்கியம். ரொம்ப நம்பிக்கையானவரு. இவரு உங்களுக்கும் உதவியா இருப்பாருன்னு நம்பறேன்" என்றார் நம்பி.

ரமேஷின் வணக்கத்தை ஏற்று அவருடன் கைகுலுக்கிய தங்கப்பன் 'ஒத்தரை அவர் முகத்துக்கு நேராகவே இந்த அளவுக்கா புகழறது? அவருக்குத் தலை கனம் வந்துடாதா?' என்று நினைத்துக் கொண்டார்.

"நீங்க நார்த்லேயே இருந்துட்டீங்க. அங்கே சூழ்நிலை வேற மாதிரி இருந்திருக்கும். மார்க்கெட், வாடிக்கையாளர்கள், அலுவலக சூழ்நிலை, ஒர்க் கல்சர் எல்லாத்திலேயுமே அங்கே இருக்கறதுக்கும் இங்கே இருக்கறதுக்கும் நிறைய மாறுபடும்" என்றார் நம்பி.

"நானும் தமிழ்நாட்டில பிறந்தவன்தான்!" என்றார் தங்கப்பன்.

"உங்களுக்குத் தமிழ்நாட்டைப் பத்தித் தெரியாதுங்கற அர்த்தத்தில நான் சொல்லல. இந்த மாறுபாடுகளுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க உங்களுக்குக் கொஞ்ச காலம் ஆகும். அதுவரையிலும் ரமேஷ் மாதிரியானவர்களோட உதவி உங்களுக்குப் பயனுள்ளதா இருக்கும்" என்றார் நம்பி. 

"புரியுது" என்றார் நம்பி. ஆயினும் அந்தக் கணத்திலேயே இந்த ரமேஷை அதிகம் நம்பியிருக்கக் கூடாது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றி விட்டது.

"வாங்க ரமேஷ்!" என்று தன் வீட்டுக்கு வந்த ரமேஷை வரவேற்ற நம்பி, "கம்பெனி எப்படிப் போயிக்கிட்டிருக்கு?" என்றார்.

"அது விஷயமாத்தான் சார் உங்களைப் பாத்துப் பேச வந்தேன். புது ஜி எம் வந்து இந்த ஆறு மாசத்தில கம்பெனியில நிறைய பிரச்னைகள். ஆஃபீசுக்குள்ளேயும் பிரச்னைகள், வாடிக்கையாளர்கள் கிட்டேயும் பிரச்னைகள். ஒண்ணு ரெண்டு முக்கியமான வாடிக்கையாளர்கள் நம்மை விட்டுப் போயிடுவாங்க போலருக்கு!"

"ஏன் அப்படி? தங்கப்பன் அனுபவம் உள்ளவர். அவர் இந்த ஆஃபீசுக்குப் புதுசுன்னாலும் உதவி செய்ய நீங்க இருக்கீங்க. அப்புறம் என்ன பிரச்னை?"

"இல்லை சார். பொதுவா நான் சொல்ற எதையும் அவர் ஏத்துக்கறதில்ல. பல சமயங்களிலே என்னைக் கேக்கறதும் இல்ல. அது அவர் விருப்பம். ஆனா நம்ம ஆஃபீஸ்ல விநாயகம்னு ஒத்தர் இருக்காரே..."

"ஆமாம் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டன்ட். அதிகப் பிரசிங்கி. அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனா எல்லாத்திலேயும் தலையிட்டுக்கிட்டிருப்பான். நான் கூட அவனை ரெண்டு மூணு தடவை கண்டிச்சிருக்கேன். அவனுக்கு என்ன?"

"அவர்தான் ஜி எம்முக்கு முக்கிய ஆலோசகர்! பல விஷயங்களில அவரைக் கேட்டுக்கிட்டுத்தான் ஜி எம் முடிவெடுக்கிறாரு. அதனாலதான் பல விஷயங்கள் தப்பாப் போய்ப் பிரச்னைகள் வருது. ஆனா இது ஜி எம்முக்குப் புரியல" என்றான் ரமேஷ்.

"ஒரு பொறுப்பான பதவியில இருக்கறவரு விஷயம் தெரிஞ்சவங்க யாரு, பொறுப்புள்ளவங்க யாரு, நல்லவங்க யாரு, யார் பேச்சைக் கேக்கலாம், யார் பேச்சைக் கேக்கக் கூடாதுங்கறதையெல்லாம் ஆராய்ஞ்சு செயல்படணும். அப்படிச் செய்யாம அரைகுறைகள் பேச்சைக் கேட்டுக்கிட்டுச் செயல்பட்டா அதனால அவருக்கும் கேடு வரும், நிறுவனத்துக்கும் கேடு வரும். நாம என்ன செய்ய முடியும்? அவரா இதை உணர்ந்துக்கிட்டு சரியா செயல்பட்டாத்தான் உண்டு" என்றார் நம்பி. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்

குறள் 510:
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

பொருள்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...