சம்பந்தம் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால், அவனுடைய பெரியப்பாவால் வளர்க்கப்பட்டான். அவர் அவனை அதிகம் படிக்க வைக்கவில்லை.
சம்பந்தத்துக்கு இருபத்திரண்டு வயதானபோது, சம்பந்தத்தின் பெரியப்பா தனக்குத் தெரிந்தவர் ஒருவர் மூலம் ஶ்ரீ ஏஜன்சீஸ் என்ற நிறுவனத்தில் அவனை வேலைக்குச் சேர்த்து விட்டார்.
ஶ்ரீ ஏஜன்சீஸ் நிறுவன உரிமையாளர் ஶ்ரீதர் அவனிடம் சம்பள விவரங்களைத் தெரிவித்ததும், "சார்! நீங்க சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் சரி, நான் ஆஃபீஸ்லேயே தங்கிக்க மட்டும் அனுமதிச்சீங்கன்னா போதும்!" என்றான்.
"பின்னால ஒரு அறை இருக்கு. ஆனா, அது வசதியா இருக்காதே! ஏன், நீ உன் பெரியப்பா வீட்டிலேயே இருந்துக்கலாமே!" என்றார் ஶ்ரீதர்.
"சார்! வேற வழியில்லாமதான் அங்கே இருந்தேன். எத்தனையோ தடவை, எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு நினைச்சிருக்கேன். ஆனா, எங்கே போய் என்ன செய்யறதுன்னு தெரியாததாலதான், பல்லைக் கடிச்சுக்கிட்டு அங்கேயே இருந்தேன். தெய்வம் மாதிரி நீங்க எனக்கு ஒரு வேலை கொடுத்திருக்கீங்க. இந்த உடம்பில உயிர் இருக்கற வரைக்கும், உங்களுக்கு நாய் மாதிரி உழைப்பேன்" என்றான் சம்பந்தம்.
ஶ்ரீதர் நெகிழ்ந்து போய், "சரி. உனக்கு எங்கேயாவது நல்ல அறை கிடைக்கிறவரைக்கும், இப்போதைக்கு இங்கேயே இருந்துக்க!" என்றார்.
சில மாதங்களுக்குப் பிறகு, சம்பந்தம் தங்குவதற்கு ஒரு அறை பார்த்துக் கொண்டு போய் விட்டான். ஆனால் அவன் சொன்னபடியே, அந்த நிறுவனத்துக்கு விஸ்வாசமாக இருப்பதைக் காட்டும் விதத்தில் கடுமையாக உழைத்து வந்தான்.
முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று கருதி, மற்ற ஊழியர்கள் அவனிடம் சற்று அதிக மரியாதையும், பயமும் காட்டினார். அதனாலேயே, அவன் ஒரு உதவியாளனாகவே இருந்த நிலையிலும், அதிகார அமைப்பில், அந்த நிறுவனத்தில் முதலாளிக்கு அடுத்த நிலையில் இருந்தவன் அவன்தான் என்று ஆகி விட்டது.
"சம்பந்தம் சாரா இப்படி?" என்றாள் டைப்பிஸ்ட் மீனா.
"பெட்டியில லட்ச லட்சமா பணம் இருந்ததாம்! சாராலேயே நம்ப முடியலையாம்" என்றான் ராம்குமார் என்ற ஊழியன்.
"அவர்கிட்ட எப்பவும் ஆஃபீஸ் பணம் பத்தாயிரம் ரூபாய் இருக்கும் - பெட்டி கேஷ் மாதிரி. சார்தான் கொடுக்கச் சொல்லி இருக்கார். கம்பெனிக்காக சில செலவுகளை அவர் செய்வாரு. அப்பப்ப பில், வவுச்சர் கொடுத்துட்டுப் பணம் வாங்கிப்பாரு. டாக்சி, ஆட்டோ, கஸ்டமர் என்டர்டெயின்மென்ட்னு நிறைய கணக்குக் காட்டுவாரு. சில சமயம், அதெல்லாம் போலி, இல்ல, தொகை அதிகமா இருக்குன்னு எனக்குத் தோணும். சார்கிட்ட ஒண்ணு ரெண்டு தடவை சொல்லி இருக்கேன்.
"'அவனுக்குக் குடும்பம் கிடையாது, சொந்தக்காரங்க கிடையாது. பொய்க்கணக்கு காட்டிப் பணம் சம்பாதிச்சு, அவன் என்ன செய்யப் போறான்?'ன்னு சார் சொல்லிடுவாரு. அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்? பல வருஷமா, சிறுகச் சிறுகக் கொள்ளையடிச்சிருக்காரு!" என்றான் அக்கவுன்டன்ட் குமரகுரு.
"அப்புறம் எப்படி மாட்டிக்கிட்டாரு?"
"சார் சில சமயம் வவுச்சர்களையெல்லாம் விவரமாப் பாப்பாரு. அப்ப ஏதோ சந்தேகம் வந்து, சம்பந்தத்தையே கூப்பிட்டுக் கேட்டிருக்காரு. அவர் பதில் சொல்ல முடியாம உளறி மாட்டிக்கிட்டாரு."
"எவ்வளவு நம்பினேன் அவனை! அவன் என்னைப் பல வருஷங்களா ஏமாத்தி இருக்கான்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப வருத்தமும் கோபமும் வந்தது. அதான் உடனே போலீஸ்ல சொல்லிட்டேன். போலீஸ்காரங்க அவன் வீட்டில சோதனை போட்டபோது, பெட்டியில, பையில, தலையணை உறையிலன்னு அங்கங்க பணத்தை ஒளிச்சு வச்சிருக்கான். இருபது லட்ச ரூபாய்க்கு மேல பணம்! எனக்குத் தெரிஞ்சு, அவன் தாராளமா செலவழிக்கறவன்தான், ஒருவேளை, அவன் ரொம்ப சிக்கனமா இருந்து சேமிச்சிருந்தா கூட, இந்த எட்டு வருஷத்தில அவனால அஞ்சாறு லட்ச ரூபாக்கு மேல சேமிச்சிருக்க முடியாது" என்று தன் மனைவியிடம் புலம்பினார் ஶ்ரீதர்.
"இரக்கப்பட்டு வேலை கொடுத்தீங்க. அவனை நம்பினீங்க. இப்படி செஞ்சிருக்கான். அவனுக்குக் குடும்பம், சொந்தம்னு கூட யாரும் இல்லையே! அவனுக்கு ஏன் இந்தப் பணத்தாசை?" என்றாள் அவர் மனைவி.
"தெரியலையே! குடும்பம், உறவுகள் இல்லாதவங்களுக்குப் பணத்தாசை இருக்காதுன்னு நாம நினைக்கிறோம்! ஆனா, குடும்பம் இருக்கறவங்களுக்கு, தாங்க தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா, குடும்ப உறுப்பினர்கள், சொந்தக்காரர்கள் இவங்க முகத்தில எல்லாம் எப்படி விழிக்கிறதுன்னு ஒரு பயம் இருக்கும். அந்த பயம் இல்லாததாலதான், சம்பந்தம் மாதிரி ஆட்கள் இந்த மாதிரித் தப்பையெல்லாம் கொஞ்சம் கூடக் கூச்சப்படாம செய்யறாங்களோ என்னவோ!" என்றார் ஶ்ரீதர்.
குறள் 506:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
No comments:
Post a Comment