"குமாரை நீங்க கன்ஸிடர் பண்ணலியா?"
"சார்! குமாருக்கு அனுபவம் போதாது. பிராஞ்ச் திறக்கணும்னா, அதுக்கு முன்னால, அந்த ஊருக்குப் போய், நிறைய பிரிபரேடரி வேலைகள் எல்லாம் செய்யணும், வாடகைக்கு இடம் பாக்கறதிலேந்து, இன்டீரியர் வரை. உள்ளூர் ஆட்கள் சில பேரை வேலைக்கு எடுக்கணும். பிராஞ்ச் ஆரம்பிச்சப்பறம், பிசினஸை டெவலப் பண்ணணும். இதையெல்லாம் ஃபீல்டில அனுபவம் உள்ளவங்களாலதான் செய்ய முடியும், குமார் பெரும்பாலும் ஆஃபீசுக்குள்ளேயேதான் வேலை செஞ்சிருக்காரு..."
சுந்தரமூர்த்தியை இடைமறித்த அருணன், "அதனால என்ன? அவருக்கு எப்பதான் எக்ஸ்போசர் கிடைக்கறது? ஆஃபீஸ்ல அதிகம் வேலை செஞ்சதால, அவருக்கு கம்பெனி பாலிசி நடைமுறைகள் எல்லாம் நல்லாத் தெரிஞ்சிருக்குமே! அது ஒரு அட்வான்டேஜ் இல்லையா?" என்றார்.
சுந்தரமூர்த்தி சற்றுத் தயக்கத்துடன், "சார்! உண்மையில, குமாருக்கு நம் கம்பனி பாலிசி, நடைமுறைகள் எல்லாம் கூட அவ்வளவாத் தெரியாது. பொதுவாகவே, எதையும் தெரிஞ்சுக்கறதில அவர் ஆர்வம் காட்டறதில்ல. ஒரு புது பிராஞ்ச்சைத் திறந்து, அதை நல்லா நடத்தறதுக்குத் தேவையான திறமை அவர்கிட்ட இல்லேன்னுதான் நான் நினைக்கிறேன்" என்றார்.
"உங்களுக்கு எதனாலேயோ குமாரைப் பிடிக்கலேன்னு நினைக்கிறேன்!" என்றார் அருணன்.
'உங்களுக்கு எதனாலேயோ குமாரைப் பிடிச்சிருக்கு. அதனாலதான் அவரோட குறைகளை நீங்க பெரிசா நினைக்க மாட்டேங்கறீங்க!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி.
"சார்! குமாரோட புரொஃபைலை வச்சுப் பாக்கறப்ப, அவரை பிராஞ்ச் மானேஜராப் போட ஹெட் ஆஃபீஸ்ல அப்ரூவல் வாங்கறது கஷ்டம்!" என்றார் சுந்தரமூர்த்தி, தன் இறுதி முயற்சியாக,
"அதை நான் பாத்துக்கறேன்!" என்றார் அருணன்.
அருணன் தான் சொன்னபடியே, தலைமை அலுவலகத்தில் பேசி, மதுரையில் அமைக்கப்பட வேண்டிய புதிய கிளைக்கு, குமாரை மானேஜராக நியமிக்க அனுமதி வாங்கி விட்டார்.
குமார் மதுரைக் கிளைக்கு மானேஜராகப் பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் ஓடி விட்டன. சுந்தரமூர்த்தி பயந்தபடியே, குமாரின் திறமையின்மை மற்றும் அனுபவக் குறைபாட்டின் காரணமாக, அந்தக் கிளையின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை.
"புது பிராஞ்ச்தானே! ஆரம்பத்தில அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாள்ள சரியாயிடும்" என்றார் அருணன்.
பிரச்னைகளுக்குக் காரணம் குமாரின் திறமையின்மைதான் என்பது அருணனுக்குப் புரியவில்லையா, அல்லது அவர் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறாரா என்பது சுந்தரமூர்த்திக்குப் புரியவில்லை.
புதிய கிளையின் செயல்பாடு பற்றிய மாதாந்தர அறிக்கைகளைப் பெற்று வந்த தலைமை அலுவலகம், கிளையின் திருப்தியற்ற செயல்பாடு பற்றி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தது. ஓரிரு மாதங்களில் நிலைமை சரியாகி விடும் என்று அருணன் தலைமை அலுவலகத்துக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.
அன்று அருணனுக்குத் தலைமை அலுவலகத்திலிருந்த ஜெனரல் மானேஜரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
"மிஸ்டர் அருணன்! நம்ம மதுரை கிளை துவங்கி ஒரு வருஷம் ஆகப் போகுது!" என்றார் ஜெனரல் மானேஜர்.
"ஆமாம் சார்! அதை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம்" என்றார் அருணன், மென்று விழுங்கியபடி.
"உங்களுக்குத் தெரியும் - நாம புதுசா ஆரம்பிக்கிற எந்தக் கிளையும் ரெண்டு மூணு மாசத்திலேயே நல்லா செயல்பட ஆரம்பிச்சுடும். அதுவும், மதுரை பெரிய ஊரு. நிறைய பிசினஸ் பொடென்ஷயல் உள்ள ஊரு. ஒரு வருஷம் முடியப் போற நிலையிலேயும், கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாதது ரொம்ப கவலை அளிக்கக் கூடியதா இருக்கு!"
"எஸ் சார்! ஐ ஹேவ் எ பிளான். கிளையோட முதல் ஆண்டுவிழாவுக்கு நான் போகப் போறேன். அங்கேயே ரெண்டு மூணு நாள் தங்கி, பிராஞ்ச் மானேரை நல்லா கயிட் பண்ணி, என்கரேஜ் பண்ணி, சீக்கிரமே நல்ல ரிசல்ட் காட்டற மாதிரி செயல்படச் செஞ்சுட்டு வரேன்" என்றார் அருணன்.
"அதுக்கு அவசியம் இருக்காது. ஏன்னா, அந்த பிராஞ்ச்சை மூடறதுன்னு நாங்க முடிவு பண்ணி இருக்கோம். பிராஞ்சுக்கும், உங்களுக்கும் கடிதம் அனுப்பிட்டோம். உங்களுக்கு முன்னாலேயே தகவல் தெரியணுங்கறதுக்குத்தான் ஃபோன் பண்ணினேன்."
ஃபோனை வைத்து விட்டார் ஜெனரல் மானேஜர்.
'சுந்தரமூர்த்தி சொன்னதை அலட்சியப்படுத்தி விட்டு, என்னுடைய விருப்பத்தின்படி செயல்பட்டது எவ்வளவு பெரிய தவறாகி விட்டது!' என்று நினைத்து வருந்தினார் அருணன்.
No comments:
Post a Comment