"இந்த ஆஃபீஸே அப்படித்தான். அதில, நீயும் நானும் மட்டும் நேர்மையா இருந்து என்ன பயன்?" என்றான் செந்தில்.
"பயன் இல்லாம போகட்டும். நாம வேலை செய்யறதே இல்ல கஷ்டமா இருக்கு?" என்றான் பாலாஜி.
"ஆமாம், ஒரு பக்கம் பொதுமக்கள் அவங்க கிட்ட லஞ்சம் வாங்கிக்கிட்டு அவங்களுக்கு சாதகமா செயல்படச் சொல்லி நமக்கு அழுத்தம் கொடுக்கறாங்க. இன்னொரு பக்கம் நம் மேலதிகாரிகள் நாம அவங்களுக்கு இடைஞ்சலா இருக்கோமேன்னு நம்ம மேலே ஆத்திரமா இருக்காங்க. நம்மோட வேலை செய்யற மத்தவங்க, நாம ஏதோ பைத்தியக்காரங்க மாதிரி, நம்மை ஏளனமாப் பாக்கறாங்க!"
"ஏதோ, உனக்கு நானும் எனக்கு நீயும் ஆறுதலா இருக்கோம்!"
"இன்னிக்கு, புது அதிகாரி வரப் போறாரு.அவரு எப்படி இருக்கப் போறாரோ!" என்றான் செந்தில்.
புதிய அதிகாரி தணிகாசலம் பொறுப்பேற்றுக் கொண்டதும், ஊழியர்கள் அனைவரையும் தன் அறைக்கு அழைத்தார்.
"இங்க பாருங்க. நான் வேலை விஷயத்தில ரொம்ப கடுமையா இருக்கறவன். ஒரு சின்ன தவறு நடந்தா கூடப் பொறுத்துக்க மாட்டேன். இதை மனசில வச்சுக்கிட்டு எல்லாரும் உங்க வேலையில கரெக்டா இருங்க" என்று ஆரம்பித்து, நேர்மை, சேவை உணர்வு, அர்ப்பணிப்பு இவற்றுடன் பணி புரிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, ஒரு சிறிய உரை நிகழ்த்தினார்.
தங்கள் இருக்கைகளுக்கு வந்ததும், "அப்பா! ஒருவழியா, ஒரு நேர்மையான அதிகாரி வந்திருக்காரு. மத்தவங்களுக்கு எப்படியோ, உனக்கும், எனக்கும் இவர்கிட்ட வேலை செய்யறது ஒரு திருப்தியான அனுபவமா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றான் செந்தில், பாலாஜியிடம்.
"அவர் சொன்னதை வச்சு அவரை எப்படி எடை போட முடியும்? எப்படி நடந்துக்கறார்னு பாக்கலாம்!" என்றான் பாலாஜி, சிரித்தபடி.
"மோசமான பல அதிகாரிகளைப் பாத்ததால, எந்த ஒரு அதிகாரியும் நேர்மையானவரா இருப்பார்னு நம்பறது உனக்குக் கஷ்டமா இருக்கு போலிருக்கு!" என்றான் செந்தில்.
பாலாஜி பதில் சொல்லாமல் சிரித்தான்.
சில நாட்களுக்குப் பிறகு, ஒருமுறை பாலாஜியிடம் தனிமையில் பேசும்போது, "நீ சந்தேகப்பட்டது சரிதான். நான் நினைச்ச மாதிரி, இந்த அதிகாரி ஒண்ணும் நேர்மையானவர் இல்ல!" என்றான் செந்தில், தணிந்த குரலில்.
"எப்படிச் சொல்ற?"
"மாணிக்கம்னு ஒரு தொழிலதிபர் ஒரு அப்ரூவல் கேட்டிருந்தார். சட்டப்படி அப்படி ஒரு அப்ரூவல் கொடுக்க முடியாதுன்னு நான் அவர்கிட்ட சொன்னேன். 'நீங்க ஃபைலை உங்க ஆஃபீசருக்கு அனுப்புங்க, நான் பாத்துக்கறேன்'னு சொன்னாரு. 'இப்ப வந்திருக்கிற அதிகாரி நேர்மையானவர், அவர் இதுக்கு ஒத்துக்க மாட்டார்' னு சொன்னேன்.
"சட்டப்படி இந்த அப்ரூவல் கொடுக்க முடியாதுன்னு நோட் போட்டு ஃபைலை அதிகாரிக்கு அனுப்பிட்டேன், ஒரு வாரமாச்சு. ஃபைல் எனக்குத் திரும்பி வரல. இன்னிக்குக் காலையில, மாணிக்கம் எனக்கு ஃபோன் பண்ணி, 'உங்க அதிகாரியை நான் கவனிச்சுட்டேன். நான் கேட்ட அப்ரூவலை அவர் கொடுத்துட்டார்'னு சொல்லிச் சிரிச்சாரு.
"கொஞ்ச நேரத்துக்கெல்லாம், அதிகாரிகிட்டேந்து ஃபைல் திரும்பி வந்தது. என்னோட அப்ஜக்ஷனை ஓவர்ரூல் பண்ணி, ஏதோ ஒரு பலவீனமான காரணத்தைச் சொல்லி, அப்ரூவல் கொடுத்திருக்காரு!"
பாலாஜி பதில் சொல்லாமல் சிரித்தான்.
"நீ எப்படி இவரை முதலிலேயே சந்தேகப்பட்ட? இவரைப் பத்தி உனக்கு முன்னமே தெரியுமா?" என்றான் செந்தில்.
"தெரியாது. பொதுவாகவே யாரையும் அவங்க சொல்றதை வச்சு மதிப்பிடக் கூடாது, அவங்க செய்யறதை வச்சுத்தான் மதிப்பிடணும்னு நினைக்கிறவன் நான். நேர்மை இல்லாத பல பேர் தங்களை நேர்மையானவங்கன்னு சொல்லிப்பாங்க. ரொம்ப அதிகமாவே சொல்லிப்பாங்க!
"இவரு நம்ம ஆஃபீஸ்ல சேருகிற அன்னிக்குக் காலையில இவரை நான் கோயில்ல பாத்தேன். அப்ப அவர் யார்னு எனக்குத் தெரியாது. கோவில் திறக்கறதுக்கு முன்னால வாசல்ல கொஞ்சம் பேரு வரிசையில நின்னுக்கிட்டிருந்தாங்க.
"இவரு வரிசையில நடுவில போய் சேந்துக்கிட்டாரு. பின்னாலேந்து சில பேர் ஆட்சேபிச்சாங்க. தான் முன்னாடியே வந்துட்டதாகவும், ஸ்கூட்டர்லேந்து பர்சை எடுத்துக்கிட்டு வரப் போனதாகவும் சொன்னாரு. அது பொய்னு எனக்குத் தெரியும். வரிசை சின்னதாத்தான் இருந்தது. அதுக்கே பொய் சொல்லிட்டு முன்னால போய் நிக்கணுமான்னு நினைச்சேன்.
"சன்னதிக்குள்ள போனப்பறம், சில வயசானவங்களையெல்லாம் கூட நெட்டித் தள்ளிக்கிட்டுப் போய் முன்னால நின்னாரு. அப்புறம், ஆஃபீஸ்ல அவரைப் பாத்ததும், அவர் கோவில்ல நடந்துக்கிட்டதை வச்சுப் பாத்தப்ப, அவரு நேர்மையானவரா இருக்க மாட்டார்னு நினைச்சேன். அவர் தன்னை ரொம்ப நேர்மையானவர்னு சொல்லிக்கிட்டது, என் சந்தேகத்தை இன்னும் அதிகாமாக்கிச்சு!" என்றான் பாலாஜி.
No comments:
Post a Comment