"நான் பல வருஷங்களாத் தொழில் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனா, இது என் கனவு ப்ராஜக்ட். இந்த ப்ராஜக்ட் ரொம்ப நாளா என் மனசில இருந்துக்கிட்டிருக்கு. இப்பத்தான் இதை நிறைவேற்றுகிற நேரம் வந்திருக்கு. உங்களை மாதிரி ஒரு நல்ல எஞ்சினியரும் கிடைச்சிருக்கீங்க!" என்றார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரந்தாமன்.
"நல்லது சார்! நல்லா திட்டம் போட்டு, சிறப்பா செயல்படுத்திடலாம்" என்றான் ப்ராஜக்ட் எஞ்சினியராக அன்றுதான் பொறுப்பேற்றுக் கொண்ட கிரி.
"சங்கர்! ப்ராஜக்ட் ஃபைலை எடுத்துக்கிட்டு வந்து கிரிகிட்ட கொடு" என்றார் பரந்தாமன், அவர் அருகின் பணிவுடன் நின்றிருந்த இளைஞனிடம்.
சங்கர் அறைக்கு வெளியே சென்று, ஓரிரு நிமிடங்களில் ஒரு பெரிய ஃபைலுடன் வந்தான். அதை கிரியிடம் கொடுத்தான்.
"சரி சார்! இதை முழுசா படிச்சுட்டு, அப்புறம் எப்படி புரொஸீட் பண்றதுன்னு உங்ககிட்ட வந்து விவாதிக்கிறேன்" என்ற கிரி, சற்றுத் தயங்கி விட்டு, "இதில நிறைய டெக்னிகல் டீடெயில்ஸ் இருக்கு. முழுசாப் படிக்க ரெண்டு நாள் ஆகும்" என்றான்.
"டேக் யுவர் டைம்!" என்றார் பரந்தாமன்.
இரண்டு நாட்கள் கழித்து, ஃபைலை முழுவதையும் படித்து விட்டு, சில குறிப்புகள் எழுதிக் கொண்டு, கிரி பரந்தாமன் அறைக்கு வந்தான்.
"வாங்க கிரி! ஃபைலை முழுசாப் படிச்சுட்டாங்களா?" என்றார் பரந்தாமன்.
"படிச்சுட்டேன் சார். எல்லா விவரங்களும் சேகரிச்சு, சுருக்கமான ப்ராஜக்ட் ரிபோர்ட் கூடத் தயார் பண்ணி வச்சுட்டீங்க. சில விஷயங்களை உங்ககிட்ட விரிவா டிஸ்கஸ் பண்ணணும்!" என்றான் கிரி.
"நிச்சயமா! அதுக்குத்தான் சங்கரையும் வரச் சொல்லி இருக்கேன்" என்று பரந்தாமன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அறைக்குள் நுழைந்தான் சங்கர்.
"இந்த டிஸ்கஷனுக்கு இவன் எதுக்கு?" என்று கிரி யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சங்கரைப் பார்த்து, "உட்காரு சங்கர்!" என்றார் பரந்தாமன்.
சங்கர் கிரியைப் பார்த்து இலேசாகச் சிரித்து விட்டு, அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
"கிரி! இந்த ப்ராஜக்டைப் பொருத்த வரையில டெக்னிகல் ஹெட் நீங்கதான். ஆனா, சங்கர்தான் ஓவர் ஆல் இன்சார்ஜ். அவனுக்கு நான் டெஸிக்னேஷன் எதுவும் கொடுக்கல. ப்ராஜக்ட் மானேஜர்னு வேணும்னா வச்சுக்கலாம். பட் ஹீ வில் ரெப்ரஸன்ட் மீ. எல்லா முடிவுகளையும் எடுக்க அவனுக்கு அதிகாரம் கொடுத்திருக்கேன், வேணும்னா, எங்கிட்ட கன்ஸல்ட் பண்ணிப்பான். அது அவனோட டிஸ்க்ரீஷன்! ஆனா, நீங்க அவன்கிட்ட கிளியரன்ஸ் வாங்கிக்கிட்டு எல்லாத்தையும் செய்யுங்க. இஸ் இட் கிளியர்?" என்றார் பரந்தாமன்.
கிரி என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாகத் தலையாட்டினான்.
"உங்களுக்கு சங்கரைப் பத்தித் தெரியணும். சங்கரோட அப்பா எங்கிட்டதான் வேலை செஞ்சாரு. ரொம்ப நம்பிக்கையானவர். நேர்மையானவர். அவர் இறந்தப்பறம், நான்தான் சங்கரை இங்கே வேலை செய்யச் சொல்லிக் கூப்பிட்டேன். அவனும் ஒத்துக்கிட்டு வந்தான். பாக்கறதுக்கு அவன் ரொம்ப எளிமையானவனாத் தெரிவான். அவன் அதிகம் படிச்சவன் இல்லதான். ஆனா, அவனோட அர்ப்பணிப்பு, நேர்மை, தவறிப் போய்க் கூட எந்த தப்பான காரியத்தையும் செய்யக் கூடாது, தனக்கு எந்த ஒரு கெட்ட பேரும் வந்துடக் கூடாதுங்கறதுங்கறதில அவன் காட்டற கவனம் இதையெல்லாம் அஞ்சு வருஷமா பக்கத்தில இருந்து கவனிச்சதில, இந்த ப்ராஜக்டை செயல்படுத்தறதில, என் இடத்தில இருந்து எல்லாத்தையும் செய்யக் கூடியவன் சங்கர்தான்னு தீர்மானிச்சு அவனுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கேன். உங்களுக்கு அவனோட இணைஞ்சு செயல்படறது ஒரு இனிமையான அனுபவமா இருக்கும்! சரி. நீங்க விவாதிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லுங்க!" என்றார் பரந்தாமன்.
சங்கரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, தான் குறித்து வைத்திருந்த விஷயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினான் கிரி.
குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
No comments:
Post a Comment