"சார்! நான் ரிடயர் ஆக இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. புது சி ஈ ஓ வைத் தேர்ந்தெடுக்க இன்டர்வியூவுக்கு நீங்க இன்னும் தேதி கொடுக்கலியே!" என்றார் வரதராஜன்.
"வர 16-ஆம் தேதி அன்னிக்கு வச்சுக்கலாம்" என்றார் நிறுவனத் தலைவர் கோவிந்த்.
"நாம ஷார்ட்லிஸ்ட் பண்ணின ஆறு பேரையும் வரச்சொல்லி மெயில் அனுப்பிடட்டுமா?"
"அந்த ஆறு பேர்ல நாலு பேரை நான் எலிமினேட் பண்ணிட்டேன். சுந்தர், கனகசபை ரெண்டு பேரை மட்டும் வரச் சொல்லுங்க போதும். மீதி நாலு பேருக்கும் ரிக்ரட் லெட்டர் அடுப்பிடுங்க"
வரதராஜன் குழப்பத்துடன் கோவிந்தைப் பார்த்தார்.
"ஐ ஆம் சாரி, வரதராஜன். நீங்க ரிடயர் ஆகப் போறதால, உங்களை நான் இதில இன்வால்வ் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்" என்றார் கோவிந்த்.
"சார்! முடிவெடுக்கற உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. ஆனா, ஆறு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணினப்பறம், அவங்களைப் பத்தின எல்லா பின்னணித் தகவல்களையும் நாம சேகரிச்சுட்டமே!"
"தகவல்களை எல்லாம் சேகரிச்சுட்டோம். ஆனா, நான் சில விஷயங்களை சோதனை செய்ய விரும்பினேன். அதனால, ஆறு பேருக்கும் என் நண்பர் ஒத்தர் மூலமா சில சோதனைகள் வச்சேன். டிராப்னு கூடச் சொல்லலாம்! பொறியில நாலு பேரு சிக்கிக்கிட்டாங்க. அதனால, அவங்களை எலிமினேட் பண்ணிட்டேன். உங்ககிட்ட இந்த விவரங்களை அப்புறம் பகிர்ந்துக்கலாம்னு நினைச்சுதான், உங்ககிட்ட முன்னால சொல்ல. இப்ப சொல்றேன்" என்ற கோவிந்த், தான் செய்தவற்றை வரதராஜனிடம் விவரித்தார்.
"நம்ம நிறுவனத்துக்கு இருக்கற ரெபுடேஷனால, இங்க சி ஈ ஓ பதவிக்கு வர பல பேர் ஆசைப்பட்டது உங்களுக்குத் தெரியும். நம்ம கம்பெனியிலேயே நிறைய திறமையான நிர்வாகிகள் இருந்தாலும், இந்தப் பதவிக்கு இருக்க வேண்டிய சில சிறப்பான திறமைகள் உள்ளவங்க நம்ம கம்பெனியில யாரும் இல்லைங்கறதாலதான், வெளியிலேந்து ஒத்தரைத் தேர்ந்தெடுக்க முடிவு செஞ்சோம். நீங்க நம்ம கம்பெனிக்குக் கிடைச்ச பெரிய சொத்து. உங்களை மாதிரி இன்னொருத்தர் கிடைக்க மாட்டார். 70 வயசுக்கு அப்புறம் இந்தப் பொறுப்புல நீங்க தொடர விரும்பாததாலதான், நாம இன்னொருத்தரைத் தேட வேண்டி இருக்கு."
நிறுவனத்தலைவர் தன்னைப் புகழ்வது உண்மையாகத்தான் என்றாலும், தன்னிடம் கூறாமல் சி ஈ ஓ தேர்வில் சில விஷயங்களைச் செய்து விட்டது பற்றித் தான் வருத்தப்படக் கூடாதே என்பதற்காகவும்தான் அந்தப் புகழ்ச்சி என்பதை உணர்ந்து கொண்டவராக, வரதராஜன் பேசாமல் இருந்தார்.
"நம்ம போட்டியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், நம் சப்ளையர்கள், ஒப்பந்ததாரர்கள் இவங்ககிட்டேருந்தெல்லாம் சி ஈ ஓவுக்கு எப்படிப்பட்ட அழுத்தங்கள்ளாம் வரும்கறது உங்களை விட அதிகமா யாருக்கும் தெரியாது. இதையெல்லாம் சமாளிக்க, சில அடிப்படையான குணங்கள் வேணும். இதெல்லாம் ஒத்தர்கிட்ட இருக்கான்னு அவங்க சர்வீஸ் ரிகார்டுலேந்து தெரியாது. அதுக்குத்தான், மூணு விஷயங்கள்ள அவங்களுக்கு சோதனைகள் வச்சேன்."
"என்ன அந்த 3 விஷயங்கள்?"
"நேர்மையான வழிகளைக் கடைப்பிடிக்கிறது, பணத்துக்கு ஆசைப்பட்டு தவறான காரியங்களைச் செய்யாம இருக்கறது, காம இச்சைக்காக நேர்மை தவறி நடந்துக்காம இருக்கறது. இந்த வகையான சோதனைகள் உங்களுக்குப் பலமுறை வந்திருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா, இயல்பிலேயே உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட உங்களுக்கு இதெல்லாம் ஒரு சவாலாவே இருந்திருக்காது. நீங்க ரொம்ப சுலபமா இந்த சவால்களை ஊதித் தள்ளி இருப்பீங்க!"
கோவிந்த் கூறியவற்றின் உண்மையை அறிந்தவராக, வரதராஜன் மௌனமாகத் தலையாட்டினார்.
"அதனால, இந்த நாலு பேருக்கும் சில பொறிகள் வச்சேன். முதலாவதா, எனக்கு நெருக்கமான ஒத்தர் மூலமா, இந்தப் பதவிக்கு அவங்க வேற வழிகள்ள முயற்சி செஞ்சா, நிச்சயம் பலன் கிடைக்கும்னு அவங்களை நம்ப வச்சேன். ரெண்டாவதா, அவங்க நிறுவனத்திலேயே, யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு முறைகேடான காரியத்தைச் செய்ய, அவங்களுக்கு ஒரு மிகப் பெரிய தொகை கிடைக்க ஏற்பாடு செஞ்சேன். மூணாவதா, ஒரு ஹை கிளாஸ் கார்ல் கேர்ளை அவங்களோட பழக வச்சு, அவங்க நிறுவனம் தொடர்பா ஒரு முக்கியத் தகவலைப் பெற முயற்சி செஞ்சேன். ரெண்டு பேர் ஒரு பொறியல சிக்கினாங்க. ஒத்தர் ரெண்டு பொறியல சிக்கினார். இன்னொருத்தர் மூணு பொறியிலேயும் சிக்கினாரு. எந்தப் பொறியிலுமே சிக்காதவங்க ரெண்டு பேர்தான்!" என்றார் கோவிந்த்.
வரதராஜன் மௌனமாக இருந்தார்.
"நான் பயன்படுத்தின முறைகளை நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களை இதில இன்வால்வ் பண்ணாததற்கு அதுவும் ஒரு காரணம்!"
"சரி. இந்த ரெண்டு பேர்ல ஒத்தரை எப்படித் தேர்ந்தெடுக்கப் போறீங்க?" என்றார் வரதராஜன்.
"தேர்ந்தெடுக்கப் போறோம்னு சொல்லுங்க. அதுக்குத்தானே இனடர்வியூ? நீங்களும் நானும் சேர்ந்துதானே இனடர்வியூ பண்ணப் போறோம்? நீங்க தேர்ந்தெடுக்கற ஆள்தான் அடுத்த சி ஈ ஓ!" என்றார் கோவிந்த்.
இன்டர்வியூ முடிந்ததும், இருவருமே ஒருமனதாக கனகசபையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
"சார்! உங்க்கிட்ட கேக்கணும்? இன்டர்வியூவின்போது, இந்த வேலையில உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம், அதுக்குத் தயாரா இருக்கீங்களான்னு கேட்டீங்க. உடனே சுந்தர் பயந்துட்டாரு. என்ன ஆபத்துன்னு பதட்டமாக் கேட்டாரு. ஆனா, கனகசபை, 'அதனால என்ன? எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கணும்'னு சொன்னாரு. அதனால அவர்தான் ஒரே சாய்ஸுன்னு ஆயிடுச்சு. ஆனா, இந்த வேலையில எனக்கு உயிருக்கு ஆபத்துக்கு ஏற்படற மாதிரி எதுவம் நடக்கலியே! ஏன் அப்படிச் சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றார் வரதராஜன்.
"இது மாதிரி உயர்ந்த பதவிக்கு தைரியம் ரொம்ப முக்கியம். உயிருக்குக் கூட பயப்படாம இருக்கறதை விடப் பெரிய தைரியம் வேற என்ன இருக்க முடியும்? அதனாலதான் அப்படிக் கேட்டேன்!" என்ற கோவிந்த், வரதராஜனை உற்றுப் பார்த்து, "நீங்க அப்படிப்பட்ட தைரியம் உள்ளவர்தான்! உங்களுக்கு அது தெரியாம இருக்கலாம். ஆனா, உங்ககிட்ட அந்த குணம் இருக்கறதை நான் பல முறை கவனிச்சிருக்கேன்!" என்றார்.
அறம், பொருள், இன்பம், உயிர் பற்றிய அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே, ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான். .
No comments:
Post a Comment