Sunday, August 1, 2021

498. பாம்பு வேட்டை!

"பாம்பை அடித்தால், அதை அடித்துக் கொல்ல வேண்டும். தப்ப விட்டால் நமக்கு என்றுமே ஆபத்துதான்!" என்றான் அரசன் விக்ரமசிங்கன்.

"பிங்கள நாட்டுப் படைகள் நம்மிடம் தோற்றதும்,  பிங்கள நாட்டு மன்னர் வீரவர்மர், தன் சிறிய படையுடன் நாட்டை விட்டே ஓடி விட்டதைத்தான் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் எதிர்ப்புக் காட்டாமல், நாட்டை விட்டு விட்டு, தன் படைதான் முக்கியம் என்று ஓடுவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லையே!"

"அதைத்தான் பாம்பை உயிரோடு தப்ப விடுவது என்று நான் குறிப்பிட்டேன். இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்று தகவல் கிடைத்ததா?"

"இப்போதுதான் நம் ஒற்றர்படைத் தலைவர் புதுத் தகவலுடன் வந்திருக்கிறார். அதைத் தங்களிடம் சொல்லத்தான் நான் தங்களைக் காண வந்தேன்" என்றார் அமைச்சர்.

"சொல்லுங்கள்!" என்றான் மன்னன். ஆர்வத்துடன்.

"பரகால நாட்டுக்குச் சொந்தமான பனிமலர்த் தீவு என்ற சிறிய தீவில்தான் பிங்கள நாட்டு அரசரும், அவருடைய படைகளும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்."

"அப்படியா?" என்று சற்று யோசித்த மன்னன் விக்ரமசிங்கன், "பனிமலர்த்தீவில் பரகால நாட்டுப் படைகள் இருக்கின்றனவா?" என்றான்.

"இல்லை மன்னா! அங்கு குறைந்த எண்ணிக்கையில்தான் மக்கள் வசிக்கிறார்கள். பாதுகாப்புக்காக ஒரு சில படை விரர்கள்தான் இருக்கிறார்கள். அதனால்தான், பிங்கள நாட்டு மன்னரையும் அவர் படைகளையும் அங்கே தங்கி இருக்கப் பரகால நாட்டு மன்னர் அனுமதித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்றார் அமைச்சர்.

"அப்படியானால், நாம் பனிமலர்த்தீவைத் தாக்கினால் வீரவர்மனையும், அவன் படைகளையும் எளிதாகச் சிறைப்படுத்தி விடலாமே!" என்றான் விக்ரமசிங்கன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! அந்தத் தீவு பரகால நாட்டுக்குச் சொந்தமானது. நாம் அங்கு சென்று தாக்கினால், பரகால நாட்டின் மீது போர் தொடுத்ததாக ஆகாதா?" என்றார் அமைச்சர், தயக்கத்துடன்.

"நாம் என்ன பனிமலர்த்தீவை ஆக்கிரமிக்கவா போகிறோம்? வீரவர்மனையும், அவன் படைகளையும் தாக்கி, சிலரைக் கொன்று, மற்றவர்களைச் சிறைப்படுத்தி, நம் நாட்டுக்கு அழைத்து வரப் போகிறோம். அவ்வளவுதானே?"

"என்ன இருந்தாலும், அந்த இடம் பரகால நாட்டைச் சேர்ந்ததாயிற்றே!"

"நான் சொல்வதைக் கேளுங்கள். நம் நாட்டின் கிழக்குக் கடற்கரையிலிருந்து, பனிமலர்த்தீவு சிறிது தூரத்தில்தான் இருக்கிறது. அருகில், மலைகளும், காடுகளும் நிறைந்த சிறு தீவுகள் இருப்பதால், நாம் சில படகுகளில் நம் வீரர்களை அனுப்பினால், அதை யாரும் கவனிக்க மாட்டார்கள். சில மணி நேரங்களில், நம் வேலையை முடித்து விடலாம். தேவைப்பட்டால், பின்னர் பரகால நாட்டுக்கு நம் தூதரை அனுப்பி, நிலைமையை விளக்கலாம். என்ன சொல்கிறீர்கள்?"

அமைச்சர் அரை மனத்துடன் தலையசைத்தார்.

"அரசே! நமக்குப் பெரிய ஆபத்து நிகழ்ந்து விட்டது" என்றார் அமைச்சர்.

"என்ன ஆயிற்று?அதுதான் நம் வீரர்கள் வீரவர்மனைச் சிறைப்பிடித்து அழைத்து வருவதாக நமக்குத் தகவல் வந்ததே!" என்றான் விக்ரமசிங்கன், படபடப்புடன். 

"திட்டமிட்டபடி. நம் வீரர்கள் படகுகளில் சென்று, பனிமலர்த்தீவை அடைந்து, வீரவர்மரையும் அவர் படைவீரர்கள் பலரையும் சுலபமாகச் சிறைப்பிடித்து விட்டனர். அவர்களைப் படகுகளில் அழைத்து வந்தபோது, எதிர்பாராத வகையில், பரகால நாட்டுப் படைகள்  நம்மைத் தாக்கி, வீரவர்மனை மீட்டு அழைத்துச் சென்று விட்டனர். அத்துடன், பரகால நாடு நம் மீது போர் தொடுக்கும் விதமாக, நம் எல்லையில் தாக்குதலைத் துவக்கி இருக்கிறது!" என்றார் அமைச்சர், கவலையுடன்.

அமைச்சரின் பேச்சைக் கேட்காமல், யோசிக்காமல், அவசரமாகச் செயல்பட்டு விட்டோமே என்று வருந்தினான் விக்ரமசிங்கன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்  
குறள் 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

பொருள்:
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் இருக்கும் இடத்தைத் தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...