Saturday, May 22, 2021

484. மகாராஜன் உலகை ஆளலாம்!

கடந்த சில வருடங்களாக சென்னையில் 'குஞ்சம்மாள் பவன்' என்ற உணவகம் பிரபலமாகிக் கொண்டு வந்தது. 

நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு, மூடப்படும் நிலையில் இருந்த ஒரு பழைய ஹோட்டலை ஒருவர் வாங்கி 'குஞ்சம்மாள் பவன்' என்று பெயர் மாற்றி (அவர் அம்மாவின் பெயராக இருக்கலாம்!) இயக்க ஆரம்பித்ததும், வெகு விரைவில் அது பிரபலமாகிப் பெரிதாகி வளர்ந்து, புதிய கிளைகள் திறக்கப்பட்டு வந்தன.

நான் டெல்லியில் பணி செய்து வந்தாலும், டெல்லியிலிருந்த தமிழர்களுக்கிடையே 'குஞ்சம்மாள் பவனி'ன் வளர்ச்சி பற்றிய பேச்சு இருந்து கொண்டிருந்தது.

நான் ஒரு முறை சென்னைக்கு வந்தபோது, என் நண்பனுடன் 'குஞ்சம்மாள் பவனு'க்கு உணவருந்தச் சென்றேன். 

ஹோட்டலில் நுழையு முன்பே, முகப்பில் இருந்த ஹோட்டலின் பெயர்ப் பலகையில், மேலே பெரிய எழுத்துக்களில் 'சுவை, சுத்தம், சுகாதாரம்' என்று எழுதப்பட்டிருந்ததையும், அதற்குக் கீழே ஹோட்டலின் பெயர் அதை விடச் சிறிய எழுத்துக்களிலேயே எழுதப்பட்டிருந்ததையும் கவனித்தேன்.

உணவுக் கூடத்துக்கு வெளியே இருந்த காத்திருக்கும் அறையில் சுமார் இருபது பேர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வரிசைப்படி உள்ளே அனுப்பப்பட்டு வந்தனர்.

பதினைந்து நிமிடம் காத்திருந்த பின் நாங்கள் உள்ளே அனுப்பப்பட்டோம்.

உணவுக் கூடத்துக்குள் நுழைந்ததும், ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. 

ஒரு தூசு கூட இல்லாத தரை விரிப்புக்கள், மெலிதான வண்ணம் பூசப்பட்ட சுவர்களில் ஆங்காங்கே தொங்க விடப்பட்டிருந்த ஓவியங்கள், சற்றே உயரமான கூரைக்குக் கீழ் அலங்காரமான செயற்கைக் கூரை என்று ரசனையுடனும், உள்ளே வருபவர்களை உடனே கவரும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தன.

உணவு அருந்துவதற்கான மேஜைகள் அதிக இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்தது ஹோட்டலுக்கு ஒரு உயர் ரகத் தன்மையை அளித்திருந்தது. 

"மேஜைகளை இவ்வளவு இடம் விட்டுப் போட்டிருக்கறதாலதான் வெளியில சில பேர் காத்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு!" என்றான் என் நண்பன்.

"இங்கே சூழ்நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறதாலதான் கபாசிடி குறைஞ்சாலும் பரவாயில்லைன்னு நிறைய இடைவெளி விட்டு மேஜைகளைப் போட்டிருக்காங்கன்னு நினைக்கறேன்" என்றேன் நான்.

வெளியே போர்டில் போட்டிருந்ததற்கு ஏற்ப உணவு வகைகள் சுவையாக இருந்ததுடன், சுத்தம்,சுகாதரம் இரண்டும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தன.

சமையற்கட்டில் எந்த அளவுக்கு சுத்தமும், சுகாதாரமும் பாதுகாக்கப்படுகிறது என்பதை வாடிக்கையாளர்கள் பார்க்க வசதியாக, சமையற்கட்டின் கதவின் மேற்புறத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் வெளியிலிருந்தே சமையலறைச் செயல்பாடுகளைப் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. 

அது போல் பாத்திரங்கள் கழுவப்படும் இடத்தையும் வாடிக்கையாளர்கள் சென்று பார்க்கலாம் என்றான் என் நண்பன்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும், "இந்த ஹோட்டலைப் பத்தி நிறைய பேர் சொன்னப்ப மிகைப்படுத்திச் சொல்றாங்கன்னுதான் நினைச்சேன். ஆனா எல்லாரும் சொன்னதை விட இன்னும் சிறப்பாகவே இருக்கு" என்றேன் நான்.

"நீ குற்றம் சொல்றதில நிபுணன் ஆச்சே! நீயே பாராட்டறேன்னா அது பெரிய விஷயம்தான்!" என்றான் என் நண்பன்.

வெளியில் வரும்போது,,கண்ணாடிக் கதவு போட்ட அறையைக் காட்டிய நண்பன், அதில் அமர்ந்திருந்தவரைக் காட்டி, "அவர்தான் முதலாளி. இதுதான் இந்த ஹோட்டல் ஆரம்பிச்ச இடங்கறதால, பெரும்பாலும் அவர் இங்கேதான் இருப்பார்" என்றான்.

ஏதோ ஒரு உந்துதலில் முதலாளியின் அறை வாசலில் போய் உள்ளே வரலாமா என்று சைகையால் அனுமதி கேட்டேன். அவர் வரச் சொன்னதும், இருவரும் அவர் அறைக்குள் சென்று அமர்ந்தோம். 

"உங்க ஹோட்டல்ல எல்லாமே பிரமாதமா இருக்கு, உங்களைப் பாத்துப் பாராட்டணும்னு நினைச்சேன்" என்றேன்.

"நன்றி" என்றார் அவர் சிரித்தபடியே.

"நான் ஒரு பத்திரிகைக்காரன். அதனால, ஒரு ஆர்வத்தில கேக்கறேன், நஷ்டத்தில ஓடிக்கிட்டிருந்த, மூடற நிலைமையில இருந்த இந்த ஹோட்டலை நீங்க வாங்கி இவ்வளவு சிறப்பா நடத்துக்கிட்டு வரீங்களே, அது எப்படின்னு சொல்ல முடியுமா?" என்றேன்.

கேட்டவுடனேயே, முன்பின் தெரியாத ஒருவரிடம் அதிகப் பிரசங்கித்தனமாகக் கேட்கிறோமோ என்று நினைத்தேன். ஆனால் அவர் தயங்காமல் எனக்கு பதில் சொன்னார். 

"இந்த ஹோட்டல்ல நான் மானேஜரா இருந்தேன். கொஞ்ச காலமாவே ஹோட்டல் நஷ்டத்தில ஓடிக்கிட்டிருந்தது. என் முதலாளிகிட்ட சில யோசனைகள் சொன்னேன். ஆனா அவர் அதையெல்லாம் கேக்கல. நிலைமை ரொம்ப மோசமாப் போனப்பறம் ஹோட்டலை விக்க முடிவு செஞ்சாரு. அதிர்ஷ்டவசமா அவர் கடன் எதுவும் வாங்கல. அதனால கடன்காரர்கள் தொல்லை இல்லை. ஹோட்டலை வித்தா, அந்தப் பணம் முழுசா அவருக்குக் கிடைக்கும்.

"அவர் இதை விக்கப் போறதா சொன்னதும், எல்லாரும் ரொம்ப குறைச்ச விலைக்குத்தான் கேட்டாங்க. அப்ப இந்த ஏரியா வளர்ச்சி அடையாததால இங்கே இடம் வாங்க அதிகம் பேர் ஆர்வம் காட்டல. விலைக்குக் கேட்டவங்க எல்லாம் மார்க்கெட் விலையை விட ரொம்பக் குறைவாத்தான் கேட்டாங்க.முதல்ல அவர் தயங்கினாரு. அப்புறம் ஒரு கட்டத்தில, ஒரு விரக்தியில, ரொம்பக் குறைச்ச விலைக்கு இதை விக்க ஒத்துக்கிட்டாரு. 

"அப்பதான் நான் அவர் கிட்ட ஒரு யோசனை சொன்னேன். ஹோட்டலை மார்க்கெட் விலைக்கு  நான் வாங்கிக்கறதாச் சொன்னேன். ஆனா எங்கிட்ட அப்ப அதிகமா பணம் இல்ல. விற்பனை ஒப்பந்தம் போட்டுக்கிட்டு முன்பணமா கொஞ்சம் கொடுத்துட்டு,மீதிப் பணத்தை ஒரு வருஷத்துக்குள்ள கொடுத்துட்டு ரிஜிஸ்டர் பண்ணிக்கறேன்னு சொன்னேன். அதுவரையிலும் மீதிப் பணத்துக்கு வட்டி கொடுக்கறதாவும் சொன்னேன். என் மேல அவருக்கு நம்பிக்கை இருந்ததால,அவர் அதுக்கு ஒத்துக்கிட்டாரு.

"என்னோட சேமிப்பில ஒரு பகுதியை அவருக்கு முன்பணமாக் கொடுத்துட்டு, மீதிப் பணத்தில ஹோட்டல்ல சில மாறுதல்களைச் செஞ்சேன். நான் இருபது வருஷமா ஹோட்டல்கள்ள வேலை செஞ்சுக்கிட்டிருக்கறதால, அருமையா சமையல் பண்றவங்க சில பேரை எனக்குத் தெரியும். அவங்கள்ள ஒத்தரை அழைச்சுக்கிட்டு வந்து, இங்கே ஏற்கெனவே வேலை செஞ்சவங்களையும் வச்சுக்கிட்டு ஹோட்டலைப் புதுப் பொலிவோட ஆரம்பிச்சேன். பல வருஷங்களா பல விஷயங்களை அனுபவத்திலேந்து தெரிஞ்சுக்கிட்டிருந்தேன், எனக்குன்னு சில  யோசனைகளும் இருந்தது. அதையெல்லாம் பயன்படுத்தினதால, கடவுள் புண்ணியத்தில எல்லாம் நல்லாப் போய்க்கிட்டிருக்கு!" என்றார் அவர்.

"ஆமாம், இருபது வருஷத்துக்கு மேல ஹோட்டல்கள்ள வேலை செஞ்சதா சொன்னீங்களே, ஆரம்பத்துல என்னவா இருந்தீங்க?" என்றேன் நான், பத்திரிகைக்காரர்களுக்கே உரிய இயல்பான ஆர்வத்துடன்.

"ஒரு டீக்கடையில எல்லாருக்கும் டீ கொண்டு போய்க் கொடுக்கற பையானா  இருந்தேன். ஏன், உங்களுக்குக் கூட டீ கொண்டு வந்து கொடுத்திருக்கேனே, ஞாபகம் இல்லையா?" என்றார் அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி.

நான் அதிர்ச்சி அடைந்தவனாக, "எப்ப? எங்கே?" என்றேன்.

அவர் முகத்தை உற்றுப் பார்த்தபோது எப்போதோ பரிச்சயமான முகமாகத் தோன்றியது. ஆனால் எங்கே என்று நினைவுக்கு வரவில்லை.

"அடையாறுல ஒரு லாட்ஜில தங்கி இருந்தீங்களே! உங்க லாட்ஜுக்கு எதித்தாப்பல இருந்த டீக்கடையிலதானே நான் இருந்தேன்! யாருக்காவது டீ வேணும்னா, என் பெயரைச் சொல்லித்தானே கூப்பிடுவீங்க?" என்றார் அவர்.

அவர் புன்னகை இப்போது விரிந்திருந்தது. பழைய நாட்களின் நினைவுகளை அவர் ரசிக்கிறார் என்று தோன்றியது.

எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்து விட்டது. 

"நீ மகாராஜாவா?" என்று அவசரமாகக் கேட்ட நான், சட்டென்று பல்லைக் கடித்துக் கொண்டு,"சாரி" என்றேன்.

லாட்ஜின் வராந்தாவில் நின்றபடி,"டேய் மகாராஜா! ரெண்டு டீ கொண்டு வாடா!" என்று எத்தனை முறை கூவி இருப்பேன்!

ஒரு 'மகாராஜா' 'டேய் மகாராஜா!' என்று கூப்பிடப்பட்டு அதிகாரம் செய்யப்படும் அவலத்தை நாங்கள் ஒரு நகைச்சுவையாக நினைத்துச் சிரித்ததும், "இவனுக்கு இவன் அப்பா அம்மா வேற ஏதாவது பெயர் வச்சிருக்கலாம்!" என்று அவன் முகத்துக்கு நேராகவே சொல்லிச் சிரித்ததும் என் நினைவுக்கு வந்தது.

சில சமயம், அவன் ரோஷம் வந்தவனாக, "ஒரு நாளைக்கு நானே ஒரு பெரிய ஹோட்டல் ஆரம்பிக்கறேனா இல்லையா பாருங்க!" என்று எங்களிடம் கூறியதையும், அதை ஒரு நகைச்சுவையாகக் கருதி நாங்கள் சிரித்ததும் கூட என் நினைவுக்கு வந்தது. 

இப்போது மகாராஜா என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். 

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல்
குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

பொருள்:
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், இந்த உலகம் முழுவதையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...