வெங்கட்டின் நண்பன் ரகு அந்த யோசனையைச் சொன்னபோது, வெங்கட்டின் மனதில் உற்சாகம் பொங்கி எழுந்தது.
ஆனால் உயர எழும் நெருப்பை நீரை ஊற்றி அணைப்பது போல், அந்த உற்சாகத்தை அவன் உடனே அழித்து விட்டான்.
"எனக்கு இது சரியா வராதுடா!" என்றான் வெங்கட்.
"ஏன்?" என்றான் ரகு.
"உனக்குத்தான் என்னோட பின்னணி தெரியுமே!" என்றான் வெங்கட், பெருமூச்சுடன்.
பத்து வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் அது.
வெங்கட் ஒரு நல்ல நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனுக்குத் திருமணமாகி, ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்தது.
கல்லூரியில் அவனுடன் படித்த ரமணியைத் தற்செயலாகச் சந்தித்தான்.
ரமணியின் அப்பா சேகர் ஒரு பெரிய தொழில் அதிபர். அவருடைய நிறுவனமான 'சேகர் இண்டஸ்ட்ரீஸ்' பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
ரமணி, தான் ஒரு புதிய தொழில் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான்.
"ஏன், உன் அப்பாவோட தொழிற்சாலையையே நீயும் பாத்துக்கலாமே" என்று கேட்டான் வெங்கட்.
"என் அப்பாவோட தொழில் ரொம்பப் பெரிசு. அதைப் பல மூத்த அதிகாரிகள் நிர்வாகம் பண்றாங்க. அங்கே எனக்கு சுதந்திரம் இருக்காது. அவங்க பேச்சைக் கேட்டுத்தான் நடக்க வேண்டி இருக்கும். எங்கப்பாவே எல்லாத்தையும் அவங்க கிட்ட விட்டுட்டு அவங்க சொல்றபடியே தன் தொழிலை நடத்திக்கிட்டிருக்காரு.
"என்னால அப்படிப்பட்ட சூழ்நிலையில வேலை செய்ய முடியாதுன்னு எங்கப்பாகிட்ட சொல்லிட்டேன். நான் தனியா தொழில் ஆரம்பக்கப் போறதா சொன்னப்ப, அவரும் அதுக்கு ஒத்துக்கிட்டு, முதலீட்டுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்கறதா சொல்லி இருக்காரு. எல்லாம் என் பேர்ல, என் கட்டுப்பாட்டிலதான் நடக்கும். என் அப்பா தலையீடு இருக்காது."
"ஓ, ரொம்ப நல்ல விஷயம்" என்றான் வெங்கட், ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக.
"ஆனா, எனக்கு பார்ட்னர்களா நல்ல ஆட்கள் வேணும். அப்பதான் தொழில் சிறப்பா நடக்கும். ஏற்கெனவே ஒரு நண்பன் என்னோட சேருவதா சொல்லி இருக்கான். இப்ப உன்னை சந்திச்சது நல்லாதாப் போச்சு. நீயும் ஒரு பார்ட்னரா சேந்துடு" என்றான் ரமணி.
"என்னை விட்டுடுப்பா! நான் ஏதோ ஒரு வேலையில இருந்துக்கிட்டிருக்கேன். என்னால முதலீடு எதுவும் செய்ய முடியாது. சொந்தத் தொழில் செய்யறதைப் பத்தியெல்லாம் என்னால நினைச்சுக் கூடப் பாக்க முடியாது" என்றான் வெங்கட்.
"உன்னை யாருடா முதலீடு செய்யச் சொன்னாங்க? உன்னை மாதிரி சில நல்லவங்க, படிச்சவங்க, அறிவுள்ளவங்க துணையோடதான் என் தொழிலை நடத்தணும்னு நினைக்கிறேன். நீ ஒர்க்கிங் பார்ட்னரா சேந்துக்க. நீ இப்ப வாங்கற சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு வருமானமாவது உனக்கு வரும்படி நான் பாத்துக்கறேன். லாபத்தில பங்கு கொடுக்கறதைப் பத்தி அக்ரிமென்ட் போட்டுக்கலாம். பிராஜக்ட் ரிபோர்ட்டை நீ பாத்தாலே எவ்வளவு லாபம் வரும், உன் பங்குக்கு எவ்வளவு வரும்னெல்லாம் நீ தெரிஞ்சுக்கலாம்" என்றான் ரமணி விடாமல்.
ரமணி காட்டிய விவரங்களைப் பார்த்ததும், அது நிச்சயமாக லாபம் தரும் தொழில்தான் என்று தோன்றியதால், வெங்கட் அவனுடன் ஒர்க்கிங் பார்ட்னராகச் சேர ஒப்புக் கொண்டான்.
"நல்ல வேலையை விட்டுட்டு ஏன் இதில இறங்கறீங்க?" என்றாள் அவன் மனைவி கீதா.
"சொந்தமா தொழில் செய்யணும்னு ரொம்ப நாளாவே எனக்கு ஒரு ஆசை உண்டு. இப்ப ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நாம முதல் எதுவும் போடப் போறதில்ல. இதில பெரிய ரிஸ்க் எதுவும் இருக்காது" என்றான் வெங்கட்.
ஆனால், ஏற்படாது என்று அவன் நினைத்த ஆபத்து ஏற்பட்டே விட்டது. ரமணி ஆரம்பித்த தொழில் துவக்கத்திலிருந்தே தள்ளாடியது.
துவக்கத்தில், லாபப் பங்கீட்டின்போது கழித்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில், மாதா மாதம் வெங்கட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு அது நின்று போயிற்று.
ரமணியிடம் கேட்டபோது, கையில் பணம் இல்லையென்றும், தன் தந்தையிடம் பணம் கேட்டிருப்பதாகவும், ஓரிரு மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் என்றும் உறுதி கூறினான்.
ஆனால் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பணம் வராத நிலையில், தொழிலிலும் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வெங்கட் பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகினான்.
நல்லவேளையாக, ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் இத்தனை ஆண்டுகளுக்கு பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் இல்லை!
அதற்குப் பிறகு, வேறு வேலை தேடிக் கொள்ள, வெங்கட்டுக்குப் பல மாதங்கள் பிடித்தன. அந்தக் காலத்தில் அவன் எதிர்கொண்ட பொருளாதாரப் பிரச்னைகளும், மன உளைச்சலும் அவனை இனி எப்போதும் சொந்தத் தொழில் என்ற சிந்தனையே எழக் கூடாது என்று உறுதி கொள்ள வைத்தன.
"அப்ப நீ செஞ்சது ஒரு முதிர்ச்சி இல்லாத செயல். ஆங்கிலத்தில மிஸ்அட்வெஞ்சர்னு சொல்லலாம். ஒரு காரியம் செய்யும்போது, அதற்கான நேரம், சூழ்நிலை எல்லாம் சரியா இருக்கணும். அந்த சமயத்தில, உனக்கும் தொழில் அனுபவம் கிடையாது, அந்த ரமணிக்கும் கிடையாது. உங்க ரெண்டு பேருக்குமே தொழில் செய்யறதுக்கான சரியான நேரம் அது இல்ல.
"ரெண்டாவது, எந்த ஒரு செயலையும் செய்யறதுக்கு சில கருவிகள் வேணும். ஒரு தொழில் செய்ய, போதுமான முதலீடு இருக்கணும், தொழில் பத்தி அறிவும், அனுபவமும் இருக்கணும், ஃபைனான்ஸ், மார்க்கெடிங்குக்கெல்லாம் சில சப்போர்ட்களும் இருக்கணும்.
"ரமணியோட அப்பா ஒரு தொழிலதிபர்ங்கறதால இந்தக் கருவிகள் எல்லாம் அவங்கிட்ட இருக்குன்னு நீ நினைச்சுக்கிட்டே. ஆனா, ஆரம்பத்தில முதலீடுக்குப் பணம் கொடுத்ததைத் தவிர, அவன் அப்பாகிட்டேந்து வேற எந்த சப்போர்ட்டும் அவனுக்குக் கிடைக்கலேன்னு தெரியுது.
"நாம ஆரம்பிக்கப் போற தொழில் அப்படி இல்ல. உன்னையும், என்னையும் சேர்த்து நாலு பார்ட்னர்கள் இருக்காங்க. எல்லாருமே அனுபவம் உள்ளவங்க. அதில நீயும் நானும் டெக்னிகல் விஷயங்கள்ள, ஒத்தர் நிதி நிர்வாகத்தில, ஒத்தர் மார்க்கெட்டிங்ல படிப்பும் அனுபவமும் உள்ளவங்களா இருக்கோம். ஒரு பெரிய நிறுவனத்தோட மார்க்கெட்டிங் டை-அப்பும் செஞ்சுக்கிட்டிருக்கோம்.
"அதை விட சிறப்பா, ஒரு வெஞ்ச்சர் கேபிடல் நிறுவனம் நமக்கு முதலீட்டுக்கான நிதியைக் கொடுக்கறாங்க. நிதி கொடுக்கறதுக்கு முன்னால, அவங்க நம்ம பிராஜக்டை முழுமையா ஆய்வு செஞ்சு, அதை ஏத்துக்கிட்டிருக்காங்க. அதனால, நாம சரியான நேரத்தில, வலுவான கருவிகளோட இதில இறங்கறோம். அதனால, இதில நாம் நிச்சயமா வெற்றி பெறுவோம்" என்றான் ரகு, உறுதியுடன்.
"யோசிச்சுப் பாக்கறேன்" என்றான் வெங்கட்.
அரசியல் இயல்
No comments:
Post a Comment