கார்த்திகேயன் பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அவனுக்கு அந்த சொந்தத் தொழில் வாய்ப்புக் கிடைத்தது.
சில வகை இயந்திரங்களைத் தயாரித்து வந்த ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுக்க, சில சிறு தொழில்களுக்கு உதவும் திட்டம் ஒன்றை அறிவித்தது.
அந்தப் பெரிய நிறுவனம் ஒரு தொழிற்பேட்டை அமைத்து, அதில் 30 தொழிற்சாலைகளைக் கட்டி, அவற்றில் தொழிற்கூடங்களை நிறுவித் தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுக்க, புதிதாகப் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க முன் வந்தது.
இயந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் போதும். தொழிற்கூடத்துக்கு வாடகை மட்டும் கொடுக்க வேண்டும். குறிப்பட்ட உதிரி பாகங்களைத் தயாரித்து, அந்தப் பெரிய நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.
மாதத்துக்கு எத்தனை பாகங்கள் தயாரித்து வழங்க வேண்டும், அவை என்ன விலைக்கு வாங்கப்படும் என்பதெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
ஆண்டுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, வழங்க வேண்டிய பொருட்களின் எண்ணிக்கை, விலை போன்றவை தேவைக்கும், சந்தை நிலவரத்துக்கும் ஏற்ப ஒப்பந்தத்தில் மாற்றி அமைக்கப்படும்.
பலரும் இதற்கு விண்ணப்பித்த நிலையில், கார்த்திகேயன் உட்பட 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒரு பெரிய நிறுவனத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற அவன் தந்தை, "உனக்கு லைஃப் செட்டில் ஆயிடுச்சுடா. அது வளர்ந்து கொண்டே இருக்கிற கம்பெனி. மார்க்கெடிங், ஃபைனான்ஸ் பிரச்னைகள் இல்லாம, தயாரிப்பில மட்டும் கவனம் செலுத்திக்கிட்டு, லாபகரமா இயங்கிக்கிட்டே இருக்கலாம்" என்றார்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு, கார்த்திகேயன் தொழில் நிறுவனத்தின் அனுமதி பெற்றுத் தன் தொழிற்சாலையை அந்தத் தொழிற்பேட்டைக்கு வெளியே, தான் வாடகைக்கு எடுத்திருந்த இடத்துக்கு மாற்றினான்.
அவர்கள் காரணம் கேட்டபோது, தன் நண்பன் ஒருவன் அவனுக்குச் சொந்தமான ஒரு இடத்தைத் தனக்குக் குறைந்த வாடகைக்குக் கொடுப்பதாகவும், அது பெரிய இடம் என்பதால், எதிர்காலத்தில் அதிக இயந்திரங்களை நிறுவி, உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்றும் கூறினான்.
வெளியில் தொழிற்சாலைகளை அமைத்து அந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கி வந்த சில நிறுவனங்கள் தங்களுக்குத் தொழிற்பேட்டையில் இடம் வேண்டுமென்று கேட்டு வந்ததால், தொழில் நிறுவனம் கார்த்திகேயனின் கோரிக்கையை ஏற்றது.
"ஏண்டா, அவங்க இண்டஸ்டிரியல் எஸ்டேட்டை விட்டுட்டு வெளியே போற? அதிக வாடகை கொடுத்து ஒரு இடத்தை எடுத்திருக்க!" என்றார் கார்த்திகேயனின் தந்தை.
"அவங்க தொழிற்பேட்டையில இருந்தா அவங்களுக்கு மட்டும்தான் பொருட்களைத் தயாரிச்சுக் கொடுக்க முடியும். வெளியில இருந்தா இந்தக் கட்டுப்பாடு இருக்காது. இப்ப கையில கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கறதால, புதுசா ரெண்டு மூணு இயந்திரங்கள் வாங்கி வேற சில கம்பெனிகளுக்கும் பொருட்கள் தயாரிச்சுக் கொடுக்க முடியும். ஏற்கெனவே ஒரு கம்பெனியில பேசி இருக்கேன். அவங்க ஆர்டர் கொடுக்கறதாச் சொல்லி இருக்காங்க" என்றான் கார்த்திகேயன்.
"எதுக்கு இந்த வேண்டாத வேலை? உனக்கு ஒத்தன் வாழைப்பழத்தை உரிச்சுக் கையில கொடுக்கறான். அதோட அருமை தெரியலியே உனக்கு! ரிஸ்க் எடுக்கறேன்னு நினைக்கிறேன்" என்றார் அவன் தந்தை.
கார்த்திகேயன் பதில் கூறவில்லை.
அடுத்த சில ஆண்டுகளில், கார்த்திகேயன் அந்தப் பெரிய நிறுவனத்துக்குப் பொருட்கள் தயாரித்து வழங்கியதுடன், வேறு சில நிறுவனங்களுக்கும் சிறிய அளவில் பொருட்கள் தயாரித்து வழங்கி வந்தான்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெரிய நிறுவனம் நலிவடையத் தொடங்கியது. தொழில் நுட்ப மாற்றங்களால், அவர்கள் தயாரித்து வந்த இயந்திரங்களுக்கான தேவை குறைந்து கொண்டே வந்ததாகக் கூறினார்கள்.
உதிரி பாகங்கள் வழங்கியதற்கான பில்களுக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து பணம் வருவது தாமதமாகிக் கொண்டு வந்தது.
துவக்கத்தில் ஒரு மாதத்தில் பில்களுக்குப் பணம் கொடுத்து வந்தவர்கள், இரண்டு மாதம், மூன்று மாதம் என்று காலத்தை நீட்டித்து, ஆறு மாதங்களுக்குப் பிறகும் பணம் கொடுக்க முடியாத நிலை வந்தது.
உதிரி பாகங்கள் தயாரித்து வந்த சிறு தொழிற்சாலைகளில் பல, தங்கள் பில்களுக்குப் பணம் வராததால் தொடர்ந்து செயல்பட முடியாத நிலைக்கு வந்தன.
இனி அந்த நிறுவனத்துக்குப் பொருட்கள் தயாரித்து வழங்கினாலும், தங்கள் பில்களுக்கான பணம் வருமா என்ற ஐயம் ஏற்பட்டதால், பல சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியையே நிறுத்தி விட்டன. சில நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன. ஊழியர்களுக்கான சம்பளத் தொகை பல மாதங்களுக்கு வழங்கப்படவில்லை.
கார்த்திகேயன் தான் ஏற்கெனவே வேறு சில நிறுவனங்களுக்குப் பொருட்கள் தயாரித்து வழங்கி வந்ததால், அவனால் நிலைமையைச் சமாளிக்க முடிந்தது. அந்த நிறுவனங்களிடமிருந்து அதிக ஆர்டர்கள் கோரிப் பெற்றான். புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் முயற்சியில் அவன் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், புதிய ஆர்டர்களைப் பெறுவது அவனுக்குக் கடினமாக இல்லை.
"எப்படிடா? இதையெல்லாம் முன்னாலேயே எதிர்பாத்தியா?" என்றார் அவன் தந்தை.
"இல்லப்பா. ஒரு கம்பெனியை மட்டும் நம்பி இருக்கறது ரிஸ்க்னு நினைச்சேன். வாழ்க்கையில மேல இருந்தவங்க கீழே போற நிகழ்வுகள் நம்மைச் சுத்தி நடக்கறதைப் பாக்கறமே! அது மாதிரி, நிறுவனங்களுக்கும் நடக்கலாமே! அதனாலதான், ஒரு கம்பெனியை மட்டும் நம்பி இருக்க வேண்டாம்னு திட்டம் போட்டு நடந்துக்கிட்டேன். இப்ப கூட, என்னென்ன மாறுதல்கள் வருமோ, வந்தா அதுக்கு நாம எப்படித் தயாரா இருக்க முடியும்னு யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்" என்றான் கார்த்திகேயன்.
மகனைப் பெருமையுடன் பார்த்தார் அவன் தந்தை.
அரசியல் இயல்
No comments:
Post a Comment