"இது எப்படிக் கிடைச்சது உங்களுக்கு?" என்றார் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி.
"எனக்கு நெருக்கமான ஒரு அரசாங்க அதிகாரி மூலமா!" என்றார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நவநீதம்.
"ரொம்ப வலுவான ஆதாரமா இருக்கே இது! தகவல் உரிமைச் சட்டத்தில அதிகாரபூர்வமாவே விவரங்கள் வாங்கி வழக்குப் போட்டா முதல்வருக்கு தண்டனை நிச்சயம்."
"நானும் அப்படித்தான் நினைச்சேன். அப்ப அதுக்கான வேலைகளைத் தொடங்கிடலாமா?" என்றார் நவநீதம் உற்சாகத்துடன்.
"இருங்க.விவரங்களை சேகரிச்சுடலாம். ஆனா முதல்வர் மீது வழக்குப் போடணும்னா, அதுக்கு ஆளுனர்கிட்ட அனுமதி வாங்கணும். ஆளுனர் அனுமதி கொடுப்பாரா?"
நவநீதம் சுரத்து இறங்கியவராக மௌனமாக இருந்தார்.
"மாநிலங்களவையில பெரும்பான்மை இல்லாத மத்திய அரசு இவங்க கட்சியோட பத்து மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் ஆதரவை நம்பித்தானே இருக்காங்க? அதனால இந்த அரசுக்கு எதிரா மத்திய அரசு எதையும் செய்யாது. மத்திய அரசு விருப்பப்படிதானே இந்த ஆளுனர் நடந்துப்பாரு?" என்றார் சத்தியமூர்த்தி.
"அப்படின்னா ஒண்ணு செய்யலாம். நமக்கு இருக்கிற தொடர்புகள் மூலமா இந்த ஆதாரத்தை, நம்பகத்தன்மை உள்ள ஒரு பெரிய பத்திரிகையில பிரசுரிக்கச் செய்யலாம்."
"செய்யலாம். இது உண்மையான ஆதாரம்கறதால அரசாங்கம் ஒப்புக்கு இதை மறுக்குமே தவிர, பத்திரிகைக்கு எதிரா வழக்குப் போடாது. அதனால, இது உண்மையானதுன்னு நாம உறுதி கொடுத்தா, சில பெரிய பத்திரிகைகள் இதை வெளியிட ஒத்துப்பாங்க."
"அப்புறம் என்ன?" என்றார் நவநீதம் உற்சாகம் திரும்பியவராக.
"அப்புறம் என்னங்கறதுதான் கேள்வி!" என்றார் சத்தியமூர்த்தி சிரித்துக் கொண்டே.
"நீங்க என்ன சொல்றீங்க?"
"இது பத்திரிகையில வெளி வந்தப்பறம் என்ன நடக்கும்? இது ரொம்பப் பரபரப்பாகும். எல்லாரும் இது பத்திப் பேசுவாங்க. அது பத்தி முழுசா விசாரணை நடத்தணும்னு நாம போராட்டம் பண்ணலாம். அதுக்கு மக்கள்கிட்டேயும், ஊடகங்களிலேயும் ஆதரவு கூட இருக்கும். ஆனா ஆறு மாசத்துக்குள்ள எல்லாம் அடங்கிடும். தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. தேர்தல் சமயத்தில நாம இதைப் பத்திப் பேசினா, அப்ப மக்கள் கிட்ட அதில அதிக ஆர்வம் இருக்காது."
"அப்ப, நம்பளால எதுவுமே செய்யமுடியாதா?"
"நல்ல காலத்துக்காகக் காத்திருப்போம்."
"என்னங்க நீங்க? ஜோசியத்தை நம்பறவங்க மாதிரி நல்ல காலம் வரவரையில காத்திருக்கணுங்கறீங்க?"
"நான் காலம்னு சொன்னது வேற அர்த்தத்தில. இப்ப சூழ்நிலை நம் எதிரிகளுக்கு சாதகமா இருக்கு. அது நமக்கு சாதகமா ஆகற வரையிலும் நாம காத்திருக்கணும்."
"அது எப்ப வருமோ?" என்றார் நவநீதம் சலிப்புடன்.
"கவலைப் படாதீங்க. அது இன்னும் ரெண்டு மூணு மாசத்தில வரும்" என்றார் சத்தியமூர்த்தி சிரித்தபடி.
"அது எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றீங்க?"
தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த சத்தியமூர்த்தி, "இப்ப மணி நாலு. இன்னும் மூணு மணி நேரத்தில இருட்டிடும்னு சொல்ல முடியாதா? அது மாதிரிதான்!" என்றார்.
நவநீதம் புரியாமல் தலைவரைப் பார்த்தார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, சத்தியமூர்த்தி நவநீதத்திடம்,"நீங்க கொடுத்த ஊழல் விவரங்கள் அடிப்படையில முதல்வர் மேல வழக்குப் போட அனுமதி கேட்டு ஆளுனர் கிட்ட மனு கொடுக்கலாம். அடுத்த வாரம் ஆளுனரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கேன். நீங்களும் என்னோட வரீங்க!" என்றார்.
"இப்ப மட்டும் ஆளுனர் அனுமதி கொடுப்பாரா?" என்றார் நவநீதம் வியப்புடன்.
"நிச்சயமா கொடுப்பாரு."
"எப்படிச் சொல்றீங்க?"
"இப்ப நாடு முழுக்க ராஜ்யசபா தேர்தல் நடந்துக்கிட்டிருக்கு. நான் கணக்குப் போட்டு வச்சிருந்தபடியே, மத்தியில இருக்கற ஆளுங்கட்சிக்கு 15 இடங்கள் அதிகம் கிடைக்கப் போகுது. அதனால நம் எதிரிகளோட ஆதரவு அவங்களுக்கு இனிமே தேவையில்லை. அதோட தங்களோட பத்து எம் பிக்கள் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவைங்கறதைப் பயன்படுத்தி முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சில காரியங்களை சாதிச்சுக்கிட்டிருக்காரு. அதனால அவங்க முதல்வர் மேல ஆத்திரத்தில இருக்காங்க. அதனால அவருக்குக் குடைச்சல் கொடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா, அவங்க அதை நழுவ விடமாட்டாங்க. அதனால காலம் இப்ப நமக்கு சாதகமா இருக்கு. இந்தக் காலத்துக்குக் காத்திருக்கணும்னுதான் நான் சொன்னேன்" என்றார் சத்தியமூர்த்தி சிரித்தபடி.
அரசியல் இயல்
No comments:
Post a Comment