"சார் இல்லியே!" என்றாள் சியாமளா.
"தெரியும். உங்களைத்தான் பார்க்க வந்தேன்" என்றார் கணேசன், சற்றுத் தயக்கத்துடன்.
கணவனின் அலுவலக மானேஜரான கணேசன் தன்னை ஏன் பார்க்க வந்திருக்கிறார் என்று யோசித்தபடியே, அவரை உள்ளே அழைத்து உட்கார வைத்தாள் சியாமளா.
"சொல்லுங்க!" என்றாள் சியாமளா, அவர் தயக்கத்தை கவனித்து.
"கம்பெனி நிலைமை முன்ன இருந்த மாதிரி இப்ப இல்லை. பெரியவர் காலத்தில நமக்குப் போட்டியே இல்லை. நாம ராஜா மாதிரி இருந்தோம். சார் வந்தப்பறமும் வியாபாரம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. ஆனா இப்ப ரெண்டு மூணு வருஷமா எங்கெங்கேந்தோ நிறைய போட்டி கம்பெனிகள் கிளம்பிட்டாங்க. போட்டியினால நம்ம வியாபாரம் குறைஞ்சதோட இல்லாம, நாம விலையையும் குறைக்க வேண்டி ஆயிட்டதால, ரெண்டு வருஷமா லாபம் ரொம்பக் குறைஞ்சு போயிடுச்சு. இந்த வருஷம் நஷ்டமே வரும் போல இருக்கு..." என்று சொல்லி நிறுத்தினார் கணேசன்.
"இதையெல்லாம் அவர் எங்கிட்ட சொல்லி இருக்காரே!" என்றாள் சியாமளா.
"பெரியவர் காலத்திலேந்தே தர்ம காரியங்களுக்கு நிறைய உதவி செய்யற பழக்கம் உண்டு. சாரும் அப்பா மாதிரியே நிறைய உதவிகள் செய்யறாரு. லாபம் நிறைய வந்தப்ப அப்படியெல்லாம் செய்யறது சரிதான். ஆனா இப்ப வருமானம் குறைஞ்சு, பாங்க்ல வாங்கின கடனுக்கு வட்டி கட்டறதே கஷ்டமா இருக்கற இந்த சமயத்தில இதையெல்லாம் குறைச்சுக்கணும்னு நான் சார் கிட்ட நிறைய தடவை சொல்லிப் பாத்துட்டேன். ஆனா அவரு உதவி கேக்கறவங்களுக்கெல்லாம் கொடுத்துக்கிட்டே இருக்காரு. நீங்கதான் அவர்கிட்ட சொல்லணும்!" என்றார் கணேசன்.
சியாமளா சிரித்தாள்.
கணேசன் ஒன்றும் புரியாமல் சியாமளாவைப் பாத்தார்.
"இன்னிக்கு காலையில கிரடிட் கார்டு கம்பெனிக்கு ஃபோன் பண்ணி 50,000 ரூபா கடன் வேணும்னு கேட்டாரு. அவங்க உடனே சாங்ஷன் பண்ணிட்டாங்க. நாளைக்கு பாங்க் அக்கவுன்ட்ல கிரடிட் ஆயிடுமாம்!"
கணேசன் குழப்பத்துடன், "சாருக்கு இவ்வளவு பண நெருக்கடி இருக்கறது எனக்குத் தெரியாது. வீட்டுச் செலவுக்காகவா கிரடிட் கார்டுல கடன் வாங்கறாரு?" என்றார், தான் இது பற்றி எந்த அளவுக்குப் பேச முடியும் என்று யோசித்தபடியே.
"வீட்டுச் செலவுக்கு இல்ல, சார்! அவர் நண்பர் ஒத்தரோட பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட உதவி செய்யறதா சொல்லி இருக்காறாம். அதுக்கு கையில பணம் இல்லேன்னு கடன் வாங்கறாராம்! 'எதுக்கு இப்படிக கடன் வாங்கி உதவி செய்யறீங்க?'ன்னு நான் கேட்டதுக்கு, 'உதவி செய்யறதா நான் முன்னாடியே சொல்லிட்டேன், இப்ப கையில பணம் இல்லேங்கறதால என்னால உதவி செய்ய முடியாதுன்னு சொல்ல முடியுமா?'ங்கறாரு. அவர்கிட்ட எடுத்துச் சொல்லச் சொல்லி நீங்க எங்கிட்ட சொன்னதும், எனக்கு சிரிப்புதான் வந்தது அதான் சிரிச்சுட்டேன்" என்றபோது, சியாமளாவின் தொண்டை அடைத்தது.
தெரியாமல் இவரிடம் வந்து முதலாளியின் பிரச்னை பற்றிப் பேசி விட்டோமே என்று சங்கடமாக உணர்ந்தார் கணேசன்.
"எங்க பையன் இப்ப பத்தாவது படிக்கறான். இன்னும் ரெண்டு மூணு வருஷத்தில அவனை காலேஜ்ல சேக்கணும். அப்ப அதுக்குப் பணம் இல்லாம, யார் கிட்ட போய் உதவி கேக்கலாம்னு யோசிக்கிற அளவுக்கு எங்க நிலைமை வந்துடும் போலருக்கு!" என்றாள் சியாமளா, விரக்தியுடன்.
"அப்படியெல்லாம் நடக்காதும்மா!" என்றார் கணேசன், அவசரமாக. சியாமளாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக அவர் இப்படிச் சொன்னாலும், ஒருவேளை அப்படிப்பட்ட நிலைமை வந்து விடுமோ என்ற எண்ணம் அவர் அடி மனதில் எழுந்தது.
அரசியல் இயல்
No comments:
Post a Comment