என் அப்பா இருந்தவரை, மருதாசலம் மாமாவுடன் எங்களுக்குக் கடிதத் தொடர்பு இருந்தது. அப்பா மறைந்தபோது, மருதாசலம் மாமாவிடமிருந்து இரங்கல் கடிதம் வந்தது. தன் நீண்ட நாள் நண்பரின் மறைவினால் தான் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார் அவர்.
அதற்குப் பிறகு, அவருடனான எங்கள் தொடர்பு அடியோடு நின்று போய் விட்டது.
அப்பா மறைந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. ஆனால் அம்மா மட்டும் மருதாசலம் மாமாவைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள்.
"அந்தஸ்தில அவருக்கும் நமக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. ஆனா, உங்கப்பாவோட அவர் ரொம்ப நெருக்கமா இருந்தாரு. குசேலரும் கிருஷ்ணரும் மாதிரின்னு உங்கப்பா அடிக்கடி சொல்வாரு. உனக்கு ஹைதராபாத்தில வேலை கிடைச்சதும், நாம ஒரேயடியா ஊரை விட்டு ஹைதராபாத்துக்கு வர வேண்டியதாயிடுச்சு. ஒரு தடவை, அவர் பொண்ணு கல்யாணத்துக்காக அப்பா ஊருக்குப் போயிட்டு வந்தாரு. அதுக்கப்புறம், உங்கப்பாவுக்கு ஊருக்குப் போக சந்தர்ப்பம் கிடைக்கல. ஆனா, மூச்சுக்கு மூச்சு உங்கப்பா அவரைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருப்பாரு. வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதுவாரு உங்கப்பா. ஆரம்பத்தில, அவரும் பதில் போட்டுக்கிட்டிருந்தாரு. ஆனா, என்னவோ தெரியல. கொஞ்ச நாளைக்கப்பறம், அவர்கிட்டேருந்து கடிதம் வரது குறைஞ்சுடுச்சு. உங்கப்பாவுக்கு அதில வருத்தம்தான். நான் கூடச் சொன்னேன் 'ஊரை விட்டு வந்தப்பறம் அவருக்கு உங்ககிட்ட இருந்த நெருக்கம் குறைஞ்சு போயிருக்கும்'னு. ஆனா உங்கப்பா அதை ஒத்துக்கல. 'அவனுக்கு நேரம் கிடைக்காம இருந்திருக்கும்' அப்படிம்பாரு."
"அதான் அப்பாவே போயிட்டாரே! அப்புறம் என்ன?" என்றான் நான், ஒருமுறை.
ஆயினும், அம்மா மருதாசலம் மாமாவைப் பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டுதான் இருந்தார்.
ஒரு அலுவலுக்காக நான் கும்பகோணத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது, "அப்படியே ஊருக்குப் போய் மருதாசலம் மாமாவைப் பாத்துட்டு வாடா!" என்றார் அம்மா. எங்கள் ஊர் கும்பகோணத்துக்கு அருகில்தான் இருந்தது.
மருதாசலம் மாமாவைப் பார்ப்பதற்காக, ஊருக்குப் போவது எனக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. ஆயினும், அம்மா சொன்னதற்காகப் போனேன்.
ஊர் நிறைய மாறி இருந்தது. ஆனால், மருதாசலம் மாமாவின் வீடு அதே போல்தான் இருந்தது. அந்தக் காலத்தில் ஊரிலேயே பெரிய வீடு அவருடையதுதான். ஆனால், இப்போது பல வீடுகள் இடிக்கப்பட்டுப் பெரிதாகவும், நவீனமாகவும் கட்டப்பட்டிருந்ததாலோ என்னவோ, மருதாசலம் மாமாவின் வீடு சற்றே களையிழந்து காணப்பட்டது.
என்னிடம் மிகவும் அன்புடனும்,கனிவுடனும் பேசினார் அவர். எனக்குக் காப்பி போட்டு எடுத்து வருவதாகச் சொல்லி, அவர் உள்ளே போக யத்தனித்தபோது, "ஏன் மாமா, நீங்க போறீங்க?" என்றேன் நான், சங்கடத்துடன்.
"வேற யாரு இருக்காங்க. தங்கம் சின்னப் பொண்ணா இருக்கறப்பவே, அவ அம்மா போய்ச் சேந்துட்டா. தங்கமும் கல்யாணம் ஆகிப் போயிட்டா. எனக்கு வேண்டியதை நான்தான் பாத்துக்கறேன்" என்றார் மருதாசலம் மாமா.
முன்பெல்லாம் விடு நிறைய வேலையாட்கள் இருந்தது என் நினைவுக்கு வந்தது. ஆனால் நான் எதுவும் கேட்கவில்லை.
நான் சொல்லியும் கேட்காமல், மாமா உள்ளே போய் காப்பி போட்டு எடுத்து வந்தார்.
அவரிடமிருந்து காப்பி தம்ளரை வாங்கிக் கொண்டு,"சமையலுக்கு ஆள் வச்சுக்கலியா மாமா?" என்றேன் நான், சற்றுத் தயக்கத்துடன்.
"ஆளு வச்சுக்கிட்டா, சம்பளம் கொடுக்க வேண்டாமா?" என்றார் மாமா, சிரித்துக் கொண்டே.
"என்ன மாமா சொல்றீங்க?" என்றேன் நான், அதிர்ச்சியுடன்.
"என்னத்தைச் சொல்றது? ஒரு காலத்தில எனக்கு ஏகப்பட்ட சொத்து இருந்தது. அதனால, கணக்குப் பாக்காம ஏகமா செலவழிச்சேன். மீனாட்சி கூட சொல்லுவா 'கொஞ்சம் பாத்து செலவழிங்க, அப்புறம் பின்னால நமக்கு ஒண்ணும் இல்லாம போயிடப் போகுது'ன்னு. அப்ப அவ சொன்னதை நான் காதில போட்டுக்கல. அவ போனப்பறம் என்னைக் கேக்கறத்துக்கு யாரும் இல்ல. உன் அப்பா கூடச் சொல்லுவான் 'கல்யாணத்துக்குப் பொண்ணு இருக்கா, பாத்து செலவழிடா'ன்னு!
"தங்கத்துக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனப்பறம், பணத்துக்கு ஏற்பாடு பண்றப்பதான் தெரிஞ்சுது என் பொருளாதார நிலைமை அப்படி ஒண்ணும் வலுவா இல்லேன்னு. கல்யாணச் செலவுக்கே நிலத்தையெல்லாம் விற்க வேண்டி இருந்தது.
"அதுக்கு முன்னாடியே, வேற செலவுகளுக்காகக் கொஞ்சம் நிலத்தை வித்திருந்தேன். எவ்வளவு வருமானம் வருது, எவ்வளவு செலவாகுதுன்னு கணக்குப் பாக்காமயே வாழ்ந்துக்கிட்டிருந்தேன். நிலங்களையெல்லாம் வித்தப்பறமும், கல்யாணச் செலவுக்குக் கடன் வாங்க வேண்டி இருந்தது.
"என் நிலைமை அவ்வளவு மோசமாயிடுச்சுன்னு என்னால நம்பவே முடியல. கல்யாணத்துக்கு வந்த உன் அப்பாகிட்ட கூட என் நிலைமையைப் பத்தி நான் எதுவும் சொல்லல. உங்கப்பாவோட கடிதங்களுக்கு பதில் போடறதையும் குறைச்சுட்டேன். என் வாழ்க்கை இப்ப ரொம்ப எளிமையா மாறிடுச்சு."
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பெருங்காய டப்பாவில் இருந்த பெருங்காயம் அத்தனையும் தீர்ந்து போன பின், பெருங்காய வாசனையுடன் பெருங்காய டப்பா மட்டும் மீதமிருப்பது போல், அந்தப் பெரிய வீடு இருப்பதாக எனக்குத் தோன்றியது.
"நல்ல வேளை நீ இன்னிக்கு வந்தே. அடுத்த வாரம் வந்திருந்தா, நான் இந்த வீட்டிலே இருந்திருக்க மாட்டேன்" என்றார் மாமா.
"ஏன் மாமா?"
"இன்னும் கொஞ்சம் கடன் பாக்கி இருக்கு. எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு? அதானல இதை வித்துட்டேன். அந்தப் பணத்தில கடனை அடைச்சுட்டு, மீதமிருக்கற பணத்தை பாங்க்ல போட்டுட்டு, அதிலேந்து வர வட்டியை வச்சுக்கிட்டு என் செலவுகளைப் பாத்துக்கலாம்னு இருக்கேன். சின்ன வீடு ஒண்ணை வாடகைக்கு எடுத்திருக்கேன். அடுத்த வாரம் அங்கே போயிடுவேன்."
எனக்குத் தொண்டையை அடைத்தது. நல்லவேளை தன் நண்பர் இந்த நிலைமைக்கு வந்து விட்டதைப் பார்க்க என் அப்பா உயிரோடு இல்லை!
No comments:
Post a Comment