Saturday, November 14, 2020

429. அவசரப்பட்டு எடுத்த முடிவு?

"50 வருஷமா இந்த ஊர்ல சாயப்பட்டறை நடத்திக்கிட்டிருக்கோம். நம்ப கழிவுகள் ஆத்தில கலக்கறதால ஆத்துத் தண்ணி கெட்டுப் போகுதுன்னு சொல்லி நம்ம பட்டறைகளை மூடச் சொல்றாங்க. இந்த வட்டாரத்தில நூறு பட்டறைகளுக்கு மேல இருக்கு. மொத்தம் ஐயாயிரம் பேருக்கு மேல வேலை செய்யறாங்க. பட்டறைகளை மூடினா ஐயாயிரம் குடும்பமும் நடுத்தெருவுக்குத்தான் வரும். நாம இதை எதிர்த்துப் போராடுவோம். யாரும் பயப்பட வேண்டியதில்ல."

சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேசியதும் அனைவரும் கை தட்டினர்.

"சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆணையத்திலேந்து நமக்கெல்லாம் நோட்டீஸ் வந்திருக்கே!" என்றார் ராஜாங்கம்.

"இது மாதிரி நோட்டீசுக்கெல்லாம் நாம பயப்பட வேண்டியதில்ல. பக்கத்து ஊர்ல ஒரு ரசாயனத் தொழிற்சாலையோட கழிவுகளால நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்குன்னு விவசாயிங்க 10 வருஷமாப் போராடிக்கிட்டிருக்காங்க. அவங்களையே இன்னும் மூட வைக்கலியே இந்த அரசாங்கம்!" என்றார் தலைவர்.

ரு வாரம் கழித்து ராஜாங்கம் தன் தொழிற்சாலை ஊழியர்களின் மூத்த உறுப்பினர்கள் சிலரைத் தன் அறைக்கு அழைத்தார்.

"நாளுக்கு நாள் சுற்றுச் சூழல் அமைப்புகள்கிட்டேந்து நமக்கு எதிர்ப்பு அதிகமாயிக்கிட்டே இருக்கு, இந்தத் தொழிலை ரொம்ப நாளைக்கு நம்மால நடத்த முடியாதுன்னு எனக்குத் தோணுது" என்று ராஜங்கம் ஆரம்பித்ததுமே, "சார்! அப்படி நடக்க விடமாட்டோம்னு உங்க சங்கத்தில சொல்லி இருக்காங்களே! ஒத்தர் கூடத் தங்கள் பட்டறையை மூடறதா இல்லை" என்றார் ஊழியர்களில் ஒருவர்.

"ஆனா, நான் மூடப் போறேன்!" என்றார் ராஜங்கம்.

"என்ன சார் இது?" என்றார் இன்னொரு ஊழியர் அதிர்ச்சியுடன்.

"நீங்க முதலாளி. நீங்க ஏதாவது தொழில் செஞ்சு பொழச்சுப்பீங்க. நாங்கள்ளாம் என்ன செய்யறது?" என்றார் மற்றொருவர், அழுது விடுவார் போன்ற தொனியுடன்.

"நீங்க சொல்றது சரிதான். நான் வேற தொழில் ஆரம்பிக்கத்தான் போறேன். ஆனா உங்க எல்லாருக்கும் அதில வேலை கொடுக்கப் போறேன்!" என்றார் ராஜாங்கம்.

"என்ன சார் சொல்றீங்க?"

"என்னோட திட்டத்தை சொல்றேன். இப்ப கையில இருக்கற ஆர்டர்களை மட்டும் முடிச்சுட்டு பட்டறையை மூடிடப் போறேன். இயந்திரங்களையெல்லாம் வித்துட்டு, தொ,ற்சாலையை இடிச்சுட்டு வேற கட்டிடம் கட்டி ஒரு துணிக்கடை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நல்ல வேளையா இது என் சொந்த இடம். அதோட இது மெயின் ரோடில இருக்கு. பல இடங்களிலேந்தும் பல வகையான உடைகளை வாங்கிக் குறைஞ்ச லாபம் வச்சு வித்தா வியாபாரம் நல்லா நடக்கும்னு நினைக்கிறேன்.

"இங்கே 30 பேரு வேலை செய்யறீங்க. ஒத்தரை கூட நான் வேலையை விட்டு அனுப்பப் போறதில்ல. அத்தனை பேருக்கும் அதே சம்பளத்தில வேலை கொடுக்கப் போறேன். கடை ஆரம்பிக்க ரெண்டு மூணு மாசம் ஆகும். ஆனா எல்லாருக்கும் தொடர்ந்து சம்பளம் கிடைக்கும். வேற வேலைக்குப் போகணும்னு நினைக்ககறவங்க போகலாம்" என்றார் ராஜாங்கம்.

"அவ்வளவு பேருக்கும் கடையில வேலை இருக்குமா சார்? அதுவும் அது வேற விதமான வேலையா இருக்குமே சார்?"

"வேற விதமான வேலைதான். ஆனா அதுக்கு நீங்க தயாரா இருக்கணும். இப்ப சாயப்பட்டையில உடையெல்லாம் சாயமாக்கிக்கிட்டு வேலை செய்யறீங்க. உடையில அழுக்குப் படாத கடை வேலை யாருக்கும் கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன். முப்பது பேரில பத்து பேர் கடையில வேலை செய்வாங்க. அஞ்சாறு பேர் இருந்தாப் போதும். ஆனா எல்லாருக்கும் வேலை கொடுக்கணுமே, அதனால பத்து பேரைக் கடையில வைக்கலாம்னு நினைக்கிறேன். இப்ப ஆஃபீஸ்ல வேலை பாக்கற அஞ்சு பேரு அங்கேயும் ஆஃபீஸ் வேலை பாப்பாங்க. பல ஊர்களுக்குப் போய் துணிகளைப் பாத்து தரமாவும், விலை குறைவாகவும் இருக்கற துணிகளைப் பாத்து வாங்கணும். அது மாதிரி சின்ன ஊர்களில இருக்கள துணிக்கடைகளிலே நம்ம துணிகளை விக்கணும். இதுக்கெல்லாம் ஒரு அஞ்சு பேரு..."

"இன்னும் அஞ்சு பேரு இருக்காங்களே!"

"கவலைப் படாதீங்க. அவங்களுக்கு ஒரு திட்டம் வச்சிருக்கேன்" என்றர் ராஜாங்கம் சிரித்துக் கொண்டே. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் ஐந்தாறு பேர் வேலையை விட்டுப் போய் விடுவார்கள் என்ற தன் எதிர்பார்ப்பை அவர் அவர்களிடம் சொல்லவில்லை.

"சார்! சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க! நாம கொஞ்ச காலம் பொறுத்திருந்து பாக்கலாமே! சங்கத் தலைவர் சொல்ற மாதிரி அரசாங்கத்தில நம்மளை இந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் இல்ல?" என்றார் வயதில் மூத்த ஒரு ஊழியர்.

"பொதுவாகவே இப்ப சுற்றுச் சூழல் பாதிப்பு விஷயத்தில கடுமையா நடவடிக்கை எடுடக்கற போக்கு இருக்கு. நடவடிக்கை எடுக்கறது சில மாதங்கள் தள்ளிப் போகலாம். ஆனா இந்தத் தொழிலை ரொம்ப நாளைக்கு நடத்த அனுமதிக்க மாட்டாங்க. வெள்ள அபாயம் இருக்கும்போது ஒரு பாதுகாப்பான இடத்துக்குப் போக நாம நம்மை முன்னமே தயார்ப்படுத்திக்கணும். வெள்ளம் வந்தப்பறம் நமக்கு நேரமும் இருக்காது, போறதுக்கு இடமும் இருக்காது" என்றார் ராஜாங்கம்.

மற்ற சாயப்பட்டறை உரிமையாளர்கள் கூட ராஜாங்கம் தேவையில்லாத பயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டதாக நினைத்தார்கள். 

ராஜாங்கத்தின் சாயப்பட்டறை மூடப்பட்டு அவரது துணிக்கடை செயல்படத் தொடங்கிய ஓரிரு மாதங்களில் அரசின் உத்தரவால் எல்லா சாயப்பட்டறைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை  
குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
பொருள்:
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ள வல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் எதுவும் நேராது.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...