Wednesday, October 14, 2020

425. வேணுவின் நண்பர்கள்

வேணு, கிரி இருவரும் ஒரே நேரத்தில்தான் அந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தனர். 

அந்த நேரத்தில் பணியில் சேர்ந்த ஐம்பது பேருக்கும் சென்னையிலிருந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

கான்ஃபரன்ஸ் அறையில் வகுப்பு, அலுவலகத்தின் பல பிரிவுகளிலும் நேரடியான வேலைப் பயிற்சி என்று இரண்டு வாரங்கள் பயிற்சி நடந்தது.

அனைவரும் இளைஞர்கள். பெரும்பாலோருக்கு அது முதல் வேலை. அனைவருக்கும் அந்த இரண்டு வாரங்கள் உற்சாகமாக இருந்தன.

வேணுவும், கிரியும் வகுப்பின்போது கான்ஃபரன்ஸ் அறையில் அருகருகில் அமர்ந்ததால் முதலிலிருந்தே நெருக்கமாகி விட்டனர். 

கிரி இயல்பிலேயே அனைவருடனும் சரளமாகப் பேசக கூடியவன் என்பதால் அநேகமாக எல்லோருடனுமே நெருங்கிப் பழகினான். வேணு அவனுடைய அமைதியான இயல்புக்கு ஏற்ப ஒரு சிலரிடம் மட்டுமே நெருங்கிப் பழகினான்.

பயிற்சி முடிந்ததும், வேணு, கிரி உட்படப் பத்து பேர் தலைமை அலுவலகத்திலேயே பணி அமர்த்தப்பட்டனர். மற்றவர்கள் வெவ்வேறு கிளை அலுவலங்களில் பணி அமர்த்தப்பட்டனர்.

வேணு, கிரி இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் இல்லை. இருவரும் ஒரே அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கினர்.

வார இறுதி நாட்களில் வேணு பெரும்பாலும் வெளியே சென்று விடுவான். 

"ஒவ்வொரு வாரமும் எங்க போற? உனக்கு அவ்வளவு நண்பர்கள் இருக்காங்களா?" என்றான் கிரி வியப்புடன்.

"நம்ம பாட்ச்சில ரெண்டு மூணு பேரோடதான் நான் பழகினேன். அதைத் தவிர நாம ஹெட் ஆஃபீஸ்ல டிரெயினிங்கில இருந்தப்ப ஒண்ணு ரெண்டு சீனியர்களோட பழக்கம் ஏற்பட்டுச்சு. அவங்களையெல்லாம் பாக்கத்தான் போறேன்" என்றான் வேணு.

"எங்க போவீங்க? சினிமாவுக்கா?"

"சில பேரோட சினிமாவுக்குப் போவேன். சில பேர் குடும்பத்தோட சென்னையிலேயே இருக்கறவங்க. அவங்க என்னை அவங்க வீட்டுக்குக் கூப்பிடுவாங்க. அங்கேயும் போவேன்" என்றான் வேணு.

"பரவாயில்லையே! இவ்வளவு சீக்கிரத்தில இவ்வளவு நெருக்கமான நண்பர்கள் உனக்குக் கிடைச்சிருக்காங்களே!" என்றான் கிரி.

"ஆமாம். நீதான் எல்லார் கிட்டயும் நல்லாப் பழகுவியே! உனக்கு நிறைய நண்பர்கள் இருப்பாங்களே!"

"நான் பழகற எல்லாரும் என் நண்பர்கள்னு சொல்ல முடியாது. எனக்கு நண்பர்கள் இருக்காங்க. ஆனா நான் அவங்களை நேர்ல சந்திக்கறது எப்பவாவதுதான். பெரும்பாலும் ஃபோன்ல பேசிக்கறதோட சரி."

சில மாதங்களுக்குப் பிறகு வேணு வார இறுதிகளில் வெளியே போவது குறைந்து விட்டது.

"ஏன் இப்பல்லாம் வீக் எண்ட்ல அதிகம் வெளியில போறதில்ல?" என்றான் கிரி.

"என்னவோ தெரியல. ஆரம்பத்தில இருந்த இன்ட்ரஸ்ட் இப்ப இல்ல. எனக்கும் இல்ல. அவங்களுக்கும் இல்ல. மொதல்ல நெருங்கின நண்பர்களாத் தெரிஞ்ச சில பேர் இப்ப ஏதோ தெரிஞ்சவங்கங்கங்கற நிலைக்கு இறங்கி வந்துட்டதாத் தோணுது" என்றான் வேணு.

"நான் எப்படித் தெரியறேன்?" என்றான் கிரி சிரித்தபடி.

"நீ எப்பவுமே எனக்கு நெருக்கமானவன்தாண்டா! ஏன் இப்படிக் கேக்கற?" என்றான் வேணு சற்று அதிர்ச்சியுடன்.

"சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன். எனக்குத் தெரியாதா, நீ என்னைப் பத்தி என்ன நினைக்கறேன்னு?" என்றான் கிரி.

"ஆமாம். டிரெயினிங்போது நீ எல்லார்கிட்டயும் நல்லாப் பழகின. ஆனா உனக்கு நண்பர்கள் அதிகம் பேர் இருக்கற மாதிரி தெரியலியே?" என்றான் வேணு.

"நான் எல்லார்கிட்டயும் நல்லாப் பழகுவேன். ஆனா உன்னை மாதிரி சில பேர் கிட்ட மட்டும்தான் நட்பா இருப்பேன். எல்லாரையுமே ஓரளவுக்கு கவனிச்சு அவங்க எப்படிப்பட்டவங்கன்னு புரிஞ்சுக்கிட்டு அவங்களை எனக்குப் பிடிச்சிருந்தாத்தான் அவங்க கிட்ட நட்பா இருப்பேன். 

"நம்ம பாட்ச்ல எனக்கு அஞ்சாறு நண்பர்கள் இருக்காங்க. ரெண்டு மூணு பேர் சென்னையிலேயும், மத்தவங்க வேற ஊர்களிலேயும் இருக்காங்க. சென்னையில இருக்கறவங்களை சில சமயம் நேர்ல சந்திப்பேன். ஆனா எல்லார்கிட்டயும் அப்பப்ப ஃபோன்ல பேசிக்கிட்டுத்தான் இருப்பேன். 

"இப்ப கூட திருச்சியில இருக்கற நம்ம பாட்ச்மேட் கண்ணன் அவன் தங்கை கல்யாணத்துக்கு என்னை வரச் சொல்லி ஃபோன்ல கூப்பிட்டு பத்திரிகையும் அனுப்பி இருக்கான். அடுத்த வாரம் கல்யாணம். அதுக்குப் போகப் போறேன்" என்றான் கிரி.

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை  
குறள் 425:
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

பொருள்:
உயர்ந்தவர்களை நட்பாக்கிக் கொள்வது அறிவு. நட்பத்தின் துவக்க நிலையில் அதிகம் மலர்வதும், பின்பு கூம்புவதும் இல்லாமல் இருப்பது அறிவுடைமை.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...