Thursday, September 24, 2020

423. தொழிற்சாலை விரிவாக்கம்

சசி இண்டஸ்ட்ரீஸ்தொழிற்சாலை விரிவாக்கம் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு நடந்து கொண்டிருந்தது. 

ஒரு புகழ் பெற்ற தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தால் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சசி இண்டஸ்ட்ரீஸின் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவால் செயலாக்கம் செய்யப்பட்டு வந்தது.

விரிவாக்கத் தொழில்கூடத்துக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டு அவை நிறுவப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிந்து தொழில்கூடம் உற்பத்தியைத் துவக்கத் தயாராகி விடும்.

நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சசிசேகர் தலைமைப் பொறியாளர் சாமுவேலைத் தன்அறைக்கு அழைத்தார்.

"நாம இறுதிக் கட்டத்தில இருக்கோம். ஆனா ஒரு சின்ன மாறுதலுக்கான யோசனை வந்திருக்கு. மெஷின் லே-அவுட்ல ஒரு சின்ன மாறுதல் செஞ்சா ப்ரொடக்‌ஷன் லைன் இன்னும் ஸ்மூத்தா இருக்கும்னு ஒரு சஜஷன் வந்திருக்கு. அதை நீங்க பரிசீலிக்கணும்" என்றார் சசிசேகர்.

"நிச்சயமா சார்! யாரோட யோசனை சார் இது?" என்றார் சாமுவேல்.

"நிச்சயமா என்னோடது இல்ல!" என்று சொல்லிச் சிரித்த சசிசேகர் அந்த யோசனையை விளக்கினார்.

"சரி சார்! என் டீம்ல இதைப் பத்தி விவாதிக்கறேன்" என்றார் சாமுவேல்.

அடுத்த நாள் சசிசேகரின் அறைக்கு வந்த சாமுவேல், "சார்! டீம்ல இதை டிஸ்கஸ் பண்ணினோம். அது சரியா வராதுன்னு நினைக்கிறோம். இப்ப இருக்கற லே-அவுட்தான் சார் பெஸ்ட்!" என்றார்.

"சரி!" என்றார் சசிசேகர்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு சசிசேகர் சாமுவேலை மீண்டும் தன் அறைக்கு அழைத்தார்.

"மிஸ்டர் சாமுவேல்! நான் உங்ககிட்ட சொன்ன சஜஷன் பத்தி நம்ப கன்சல்டன்ட் கிட்ட கேட்டேன். அவங்க இது ரொம்ப நல்ல யோசனைன்னு சொல்றாங்க. அந்த மாறுதல் ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும்னு சொன்னதோட எங்களுக்கு இது தோணாம போச்சேன்னு சொன்னாங்க! இந்த மாறுதலைப் பண்ணி புது லே-அவுட்டை அவங்க ரெண்டு மூணு நாள்ள அனுப்புவாங்க. அது வரையிலேயும் வெயிட் பண்ணுங்க!" என்றார்.

"சாரி சார்!" என்றார் சாமுவேல்..

"நீங்க சாரி சொல்ல வேண்டியது எங்கிட்ட இல்ல, நம்ப மெஷின் ஆபரேட்டர் குமாரசாமி கிட்டதான்!"

"என்ன சார் சொல்றீங்க?" என்றார் சாமுவேல்.

"ஆமாம், இந்த யோசனையைச் சொன்னது குமாரசாமிதான். உங்க டீம்ல இருக்கற ஒரு எஞ்சினியர் கிட்ட அவர் இதைச் சொல்ல முயற்சி செஞ்சருக்காரு. அவரு அதைக் காது கொடுத்துக் கேக்கவே இல்லை. அதனால அவரு எங்கிட்ட வந்து சொன்னாரு. ஒரு வேளை இது என்னோட யோசனைன்னு நான் உங்க கிட்ட சொல்லி இருந்தா நீங்க இதை ஏத்துக்கிட்டிருப்பீங்களோ என்னவோ!" என்று சொல்லிச் சிரித்தார் சசிசேகர். 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்:
எந்த விஷயத்தை யார் சொல்லக் கேட்டாலும் அந்த விஷயத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதே அறிவாகும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...