Saturday, August 22, 2020

421. நேரடி ஒளிபரப்பு

 ஐம்பது வருடம் முன்பு சிறிய அளவில் ஒரு தொழிலைத் துவக்கினார் ஞானசேகரன். தன் 75ஆவது வயதில் தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.

ஒரு முன்னணிப் பொருளாதாரச் செய்தித் தொலைக் காட்சி நிலையம் அவரைப் பேட்டி காண விரும்பியது. 

"என் பேட்டியை லைவ் ஆக ஒளி பரப்ப வேண்டும்" என்றார் ஞானசேகரன்.

"பேட்டிகளை நாங்கள் லைவ் ஆக ஒளிபரப்புவதில்லையே!" என்றார் அந்த நிலையத்தின் அதிகாரி.

"அப்படியானால் பேட்டி இல்லை!" என்றார் ஞானசேகரன்.

தன் மேலதிகாரிகளிடம் கலந்து பேசி விட்டுச் சொல்வதாகக் கூறினார் அவர். ஆனால் அந்த நிறுவனத்தின் தலைமை இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

லைவ் நியூஸ் என்ற தொலைக்காட்சி நிலையம் சமீபத்தில்தான் துவக்கப்பட்டு நடந்து கொண்டிருந்தது. ஞானசேகரன் ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்துக்கு லைவ் ஆகத்தான் பேட்டி கொடுப்பேன் என்று நிபந்தனை விதித்து அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்ற விஷயம் வெளியே கசிய ஆரம்பித்திருந்தது.

லைவ் நியூஸின் தலைமை அதிகாரி குமார் தன் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை அழைத்தார்.

"நாம் ஞானசேகரனைப் பேட்டி கண்டால் என்ன?" என்றார்.

"சார்! நம் பார்வையாளர்கள் அரசியல் செய்திகளை மட்டும்தான் பாப்பாங்க. இது மாதிரி பேட்டிகளை அவங்க பாக்க மாட்டாங்க" என்றார் ஒரு மூத்த அதிகாரி.

"அப்படின்னா நமக்கு புதுப் பார்வையாளர்கள் கிடைப்பாங்களே! அது நமக்கு நல்லதுதானே?" என்றார் இன்னொருவர். 

குமார் அவரை சுவாரசியத்துடன் பார்த்தார்.

"அவர் ஏன் லைவா ஒளிபரப்பணும்னு நிபந்தனை போடறாருன்னு தெரியல. யாரையாவது பத்தி அவதூறா ஏதாவது சொல்லிட்டா நமக்குப் பிரச்னை ஆயிடுமே!"

"அதுதான் எனக்குக் கவலையா இருக்கு!" என்றார் குமார்.

"சார். எனக்கு ஒரு யோசனை தோணுது!" என்றார் தலைமை ஆசிரியர் ரவி. 

ஞானசேகரனின் பேட்டி லைவ் நியூஸ் தொலைக்காட்சியில் லைவ் ஆக ஒளிபரப்பப்படும் என்ற செய்தி ஒரு நாள் முன்பு வெளியிடப்பட்டதும் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டது. பெரும்பாலும் அரசியல் செய்திகளையே வெளியிடும் லைவ் நியூஸில் ஒரு தொழில் அதிபரின் பேட்டி ஒளிபரப்பாகிறது, அதுவும் லைவ் ஆக என்ற விஷயம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி ஏராளமானோரை நிகழ்ச்சியைப் பார்க்க வைத்தது.

பேட்டி துவங்கி சிறிது நேரம் கழித்து ஞானசேகரன் ஓரு விஷயத்தைக் கூறினார்.

"நான் இந்த பேட்டி லைவ் ஆக ஒளி பரப்பப்பட வேண்டும் என்று விரும்பியதற்கு ஒரு காரணம் உண்டு. நான் தொழில் தொடங்கியதிலிருந்து இப்போது வரை நிறையப் போட்டிகளைச் சந்தித்திருக்கிறேன். நேர்மையான போட்டியாளர்கள் உண்டு, எல்லாவிதமான தந்திரங்களையும் கடைப்பிடிக்கும் போட்டியாளர்களும் உண்டு. 

"எத்தனையோ முறை என் நிறுவனம் போட்டியாளர்களால் அழியப் போவதாகப் பத்திரிகைகள் ஆரூடம் கூறி இருக்கின்றன. சில சமயம் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுப் பங்குச் சந்தையில் என் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் எதிர் கொண்டு என் நிறுவனம் மீண்டு வந்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம்..."

ஞானசேகரன் சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்த, பேட்டியை நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ரவி, பார்வையாளர்கள் அனைவரும் அவர் என்ன சொல்லப் போவதைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர்.

"என் அறிவுத் திறமைதான்..." என்றார் ஞானமூர்த்தி சிரித்தபடி.

"சார்!" என்றார் ரவி, சற்று அதிர்ச்சியுடன்.

"இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பேட்டி லைவ் ஆக இருக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதானே இதை நிறைய பேர் பார்த்து இந்தச் செய்தி அனைவருக்கும் போகும்?"

பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த குமார் சட்டென்று ஏமாற்றம் அடைந்தார். 'மனுஷன் தன்னைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்ளத்தான் நேரடி ஒளிபரப்பு வேண்டுமென்று கேட்டாரா? ஏதோ பெரிதாகச் சொல்லப் போகிறார் என்று நினைத்து ஏமாந்து விட்டேனே!'

"சார்! உங்கள் அறிவுத் திறமை என்று நீங்கள் குறிப்பிட்டதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?" என்றார் ரவி, வேறு என்ன சொல்வதென்று தெரியாமல்.

"நிச்சயமாக. அதற்குத்தானே வந்திருக்கிறேன்? என் நண்பர்கள் சிலர் ஸ்டூடியோவுக்கு வெளியே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் உள்ளே அனுமதிக்க முடியுமா?" என்றார் ஞானசேகரன்.

"எதற்கு?" என்றார் ரவி குழப்பத்துடன்.

"அவர்கள் என்னுடன் பணி புரிபவர்கள். ஒரு சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள், இன்னும் சிலர் இப்போது உயிருடன் இல்லை. நான் என் அறிவுத்திறமை என்று குறிப்பிட்டது அவர்களைத்தான்! நான் தொழில் துவங்கிய முதல் நாளிலிருந்தே அறிவாற்றல்தான் என் தொழிலுக்குச் சிறந்த பாதுகாப்பு என்பதை உணர்ந்து அறிவாற்றல் மிகுந்தவர்களை என்னுடன் வைத்துக் கொண்டேன். 

"என் தொழிலின் வளர்ச்சிக்கு உதவியதோடு மட்டுமின்றி, என் தொழிலை அழிக்க என் எதிரிகள் முயன்றபோது அவர்கள் முயற்சிகளை முறியடித்து ஒரு அரணாக நின்று என் தொழிலைக் காத்தவர்களும் அவர்கள்தான். நீங்கள் அனுமதித்தால் அவர்களை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்தி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வேன். நான் இந்தப் பேட்டி லைவ் ஆக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததற்குக் காரணம் என் அறிவாக இருந்து என் நிறுவனத்தைக் காத்த அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரத்தான்."

"வித் ப்ளெஷர்!" என்றார் ரவி உற்சாகம் திரும்பியவராக.

"சார் ஞானசேகரனோட பேட்டியை நாம லைவா ஒளிபரப்பினது நமக்குப் பெரிய பூஸ்ட்.  நம்ப சானல் வியூவர்ஷிப் ரெண்டு மடங்கு ஆகி இருக்கு. நீங்க எடுத்த துணிச்சலான முடிவுதான் காரணம்!" என்றார் ரவி.

"இல்லை மிஸ்டர் ரவி. ஞானசேகரனுக்கு இருந்த மாதிரி எனக்கும் நீங்கள்ளாம்  ஒரு அறிவா இருக்கறதுதான் காரணம். நான் ஒப்புக்காக இதைச் சொல்லல. லைவா ஒளிபரப்பினா அவரு யாரையாவது பத்தி அவதூறா ஏதாவது சொன்னா நமக்குப் பிரச்னை ஆயிடுமேன்னு நான் பயந்தப்ப, இப்ப இருக்கற தொழில் நுட்பத்தை வச்சு, பேட்டி ஒரு நிமிஷம் தாமதமா ஒளிபரப்பற மாதிரி செஞ்சுட்டா, அவர் ஏதாவது தப்பா சொன்னா உடனே பேட்டியை நிறுத்தி அது ஒளிபரப்பாகாம தடுத்துடலாம்னு நீங்க யோசனை சொன்னதாலதானே தைரியமா இதுக்கு சம்மதிச்சேன்?" என்றார் குமார்.  

பொருட்பால்
 அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

பொருள்:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவர்களால் உள்ளே புகுந்து அழிக்க முடியாத அரண் ஆகும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...