"சார் நேத்திக்கு கிளாஸ்ல ஃப்ரீட்மனோட மானிடரி தியரி பத்தி சொன்னீங்க. அதில எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.
"இதில சில அம்சங்கள் பத்தி உங்ககிட்ட கொஞ்சம் விரிவா விளக்கம் பெறணும்னு நினைக்கறேன். வகுப்பில நான் என் சந்தேகங்களைக் கேட்டு அதை நீங்க விளக்கினா, மத்த மாணவர்கள் நான் அவங்க நேரத்தை வீணாக்கறதா நினைக்கலாம். அதனாலதான் உங்க கிட்ட தனியா இதைக் கேக்கலாம்னு நினைச்சேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா..." என்றான் பச்சையப்பன்.
பேராசிரியர் டேவிட் அவனைக் கொஞ்சம் வியப்புடன் பார்த்து, "சொல்லு!" என்றார்.
அவன் தன் சந்தேகங்களைக் கேட்டதும், அவர் அவற்றை விளக்கினார்.
"எனக்காக அரை மணி நேரம் செலவழிச்சிருக்கீங்க. ரொம்ப நன்றி சார்!" என்றான் பச்சையப்பன்.
"மாணவர்களோட சந்தேகங்களைத் தீர்த்து வைக்கறது ஆசிரியர்களுக்கு எப்பவுமே ஒரு மன நிறைவான விஷயம்தான். ஆனா இதற்கான வாய்ப்பு அவங்களுக்கு அதிகம் கிடைக்கறதில்ல!" என்று சொல்லிச் சிரித்த டேவிட், "நீ சொன்ன மாதிரி இதை நீ வகுப்பில கேட்டு நான் இதை விளக்கி இருந்தா பல மாணவர்களுக்கு நாம வகுப்பு நேரத்தை வீணாக்கினதாத் தோணி இருக்கும்!" என்றார் தொடர்ந்து.
"ஆமாம் சார்! அதனாலதான் வகுப்புக்கு வெளியில உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டி இருந்தது."
"நான் சொன்ன மாதிரி, இது எனக்கு மன நிறைவைக் கொடுக்கற விஷயம். எனக்கும் ஒரு சந்தேகம் கேக்கணும் உங்கிட்ட! நீ கேட்ட சந்தேகங்கள் இந்த தியரியோட நுணுக்கமான விவரங்கள் பத்தி. உன் சிலபஸுக்கோ, பரீட்சைக்கோ இதெல்லாம் தேவையில்லை. உன் பாடப் புத்தகத்திலேயும் இதெல்லாம் இருக்காது. அதனாலதான் வகுப்பில இதையெல்லாம் தொட்டுக் காட்டினதோட நிறுத்திக்கிட்டேன். நீ ஏன் இந்த விஷயங்களைத் தெரிஞ்சுக்க விரும்பின?" என்றார் டேவிட்.
"சார்! இந்த தியரியை நீங்க விளக்கினது ரொம்ப சுவாரசியமா இருந்தது. அதனால இதை இன்னும் நுணுக்கமாத் தெரிஞ்சுக்கணும்னு விரும்பினேன். சிலபஸ்படி இந்த தியரியோட அவுட்லைன் மட்டும் தெரிஞ்சா போதும். அதனால வகுப்பில இதைப் பத்தி விவரமாக் கேக்கறது சரியா இருக்காதுன்னு நினைச்சேன். உங்ககிட்ட இதைப் பத்தி தனியாக் கேட்டதுக்கு அதுவும் ஒரு காரணம்" என்றான் பச்சையப்பன்.
அவனை மதிப்புடன் பார்த்த டேவிட், "சரி. நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்!" என்றார்.
"சொல்லுங்க சார்!" என்றான் பச்சையப்பன்.
அடுத்த நாள் வகுப்புக்கு வந்த டேவிட்,"போன வகுப்பில ஃப்ரீட்மனோட மானிடரி தியரி பத்தி விளக்கினேன். ஒரு மாணவன் அது பத்தி இன்னும் சில விவரங்கள் தெரிஞ்சுக்க விரும்பி எங்கிட்ட தனியா வந்து சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் போனான். நான் அவனுக்கு விளக்கிச் சொன்ன விஷயங்களை அவன் இப்ப வகுப்பில விளக்கிச் சொல்லுவான்" என்று சொல்லி விட்டு, பச்சையப்பனைப் பார்த்தார்.
பச்சையப்பன் சற்றுத் தயக்கத்துடன் எழுந்து முன்னே வந்து வகுப்பைப் பாரத்தபடி நின்றான். டேவிட் மாணவர்களின் இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.
சில நிமிடங்கள் மேடைக் கூச்சத்தால் தடுமாறிய பிறகு தெளிவாகப் பேச ஆரம்பித்தான் பச்சையப்பன்.
பச்சையப்பன் விளக்கி முடித்ததும், அவனை இருக்கையில் அமரச் சொல்லி விட்டு டேவிட் எழுந்து வந்தார்.
"எந்த ஒரு விஷயத்தையும் நுணுக்கமாப் புரிஞ்சுக்கற மனப்பான்மையை நீங்க வளத்துக்கணும். மனப்பான்மையை முதல்ல வளத்துக்கிட்டா புரிஞ்சுக்கற திறமையும் தன்னால வளரும். அது போல நமக்குத் தெரிஞ்ச விஷயங்களை மத்தவங்களுக்குத் தெளிவா எடுத்துச் சொல்லணும். இந்தத் திறமைக்கும் முதல் தேவை மனப்பான்மைதான்.
"இது படிப்புக்கு மட்டும் இல்ல, எல்லா விஷயங்களுக்குமே வேணும். அதனால இது ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லாம, எல்லாருக்குமே இருக்க வேண்டிய திறமை. பச்சையப்பன்கிட்ட விஷயங்களை நுணுக்கமாப் புரிஞ்சுக்கணும்கற ஆர்வம் இருந்ததைப் பார்த்தேன்.
"அதே போல விஷயங்களைத் தெளிவா எடுத்துச் சொல்ற திறமையையும் வளத்துக்கணும்கறதை அவனுக்கும், அவன் முலமா உங்க எல்லாருக்கும் புரிய வைக்கத்தான் நேத்திக்கு எங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை வகுப்பில விளக்கச் சொல்லி அவன்கிட்ட சொன்னேன்.
"இது சுலபம் இல்லேன்னு எனக்குத் தெரியும். பச்சையப்பன்! உனக்கு இது நல்ல ஆரம்பம். இன்னும் நீ உன் திறமையை வளத்துக்க இன்றைய அனுபவம் உதவும். இனிமே மத்தவங்களுக்கும் இது மாதிரி வாய்ப்பகளைக் கொடுப்பேன்!" என்றார் டேவிட்.