Wednesday, August 19, 2020

420. நினைவில்லை!

"நாளைக்கு ஜெயலக்ஷ்மி சபாவில ஒரு கச்சேரி இருக்கு. எனக்கு ரெண்டு டிக்கட் கிடைச்சது. நீயும் வரியா?" என்றான் சேதுபதி தொலைபேசியில்.

"சாரிடா! நாளைக்கு ஒரு ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போகணும்" என்றான் பத்மநாபன்.

"பரவாயில்லையே! ஆன்மீகத்தில உனக்கு இவ்வளவு ஈடுபாடு இருக்குன்னு எனக்குத் தெரியாது."

"நல்ல விஷயங்கள் கொஞ்சமாவது காதில விழணும் இல்ல?".

"சரி. போயிட்டு வா. அப்புறம் பாக்கலாம்."

சில நாட்கள் கழித்து சேதுபதி பத்மநாபனின் வீட்டுக்கு வந்தான்.

சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, திடீரென்று நினைவு வந்தவனாக, "ஆமாம், போனவாரம் ஏதோ ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போயிருந்தியே, எப்படி இருந்தது? என்றான் சேதுபதி

"நல்லா இருந்தது!" என்றான் பத்மநாபன்.

"யாரோட சொற்பொழிவு?"

"ஏதோ பேரு சொன்னங்க. ஞாபகம் இல்ல" என்றான் பத்மநாபன்.

"என்னடா, நான் கச்சேரிக்குக் கூப்பிட்டப்ப வர மாட்டேன்னுட்டு அந்த சொற்பொழிவுக்குப் போன! இப்ப அவர் பேர் கூட ஞாபகம் இல்லைங்கற?" என்றான் சேதுபதி

"சாந்தகுமார்" என்றாள் பத்மநாபனின் மனைவி, சமையற்கட்டில் இருந்தபடியே.

"அவர் ரொம்ப பிரபலமானவராச்சே! அவரு பேரு ஞாபகம் இல்லைங்கற!" என்றான் சேதுபதி வியப்புடன்.

'இதுக்கு முன்னால இது மாதிரி சொற்பொழிவுக்கெல்லாம் போனதில்லையே! அதனாலதான் பேரை மறந்துட்டேன்."

"எதைப் பத்திப் பேசினாரு?"

"ஏதோ ராமாயணக் கதைன்னு நினைக்கறேன்." 

"அவரு எப்பவுமே கீதையைப் பத்தித்தானே பேசுவாரு?"

"கீதையைப் பத்திப் பேசினா என்ன, சீதையைப் பத்திப் பேசினா என்ன, எல்லாமே ஆன்மீகம்தானே? அதை விடு!" என்று பேச்சை மாற்றினான் பத்மநாதன்.

பத்மநாபன் கிளம்பிச் சென்றதும், "ஏங்க ரெண்டு மணி நேரம் பேச்சைக் கேட்டிருக்கீங்க. பேசினவர் பேரு ஞாபகம் இல்லை, என்ன பேசினார்னும் ஞாபகம் இல்ல! ஏன் இப்படி?" என்றாள் அவர் மனைவி.

"அங்கே பேச்சு முடிஞ்சதும் அருமையான சக்கரைப் பொங்கல் கொடுக்கறாங்க, நிறையவே கொடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டுதான் நீ கூப்பிட்டதும் உன்னோட அங்கே வந்தேன். அவர் பேசினதை யார் கேட்டா? கொஞ்ச நேரம் மொபைல்ல மெஸ்ஸேஜ் எல்லாம் பாத்துக்கிட்டிருந்தேன். அப்புறம் தூக்கம் கண்ணைச் சுத்திச்சு. உக்காந்துகிட்டே நல்லா தூங்கினேன். பேச்சு முடியறப்பதான் தூக்கம் கலைஞ்சுது. ஃபிரஷ்ஷா இருந்தது. பிரசாதமும் அருமையா இருந்தது!" என்றான் பத்மநாபன்.

"நல்ல ஆளு நீங்க! அதுக்கு நீங்க உங்க நண்பரோட, கச்சேரிக்கே போயிருக்கலாமே! உங்களுக்குத்தான் சங்கீதம் கேக்கறது பிடிக்குமே! அங்கே கான்ட்டீன் கூட இருந்திருக்குமே!"

"போயிருக்கலாம்தான். ஆனா நான் மட்டும் போயிருந்தா முதல்ல கான்ட்டீன்ல போய் எனக்குப் பிடிச்ச அயிட்டங்களை  சூடா சாப்பிட்டுட்டு அப்புறம்தான் கச்சேரி கேட்டிருப்பேன்! ஆனா சேதுபதி கச்சேரி முடியறவரையில கான்ட்டீனுக்குப் போகவே விட மாட்டான். அதனாலதான் அவன் கூப்பிட்டப்ப போகல!" என்றான் பத்மநாபன்.

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 420:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

பொருள்:
செவியால் நல்ல விஷயங்களைக் கேட்கும் சுவையை உணராமல் உண்ணும் சுவையில் மட்டும் ஈடுபாடுள்ள மனிதர்கள்  உயிரோடு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...