Monday, August 17, 2020

419. பேராசிரியரின் பேச்சு!

பேராசிரியர் குருமூர்த்தியின் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு உற்சாகம்தான். 

ஏனெனில் அவர் வகுப்பில் பாடம் நடத்துவதோடு வேறு சில விஷயங்களையும் பேசுவார். 

குறிப்பாகக் கல்லூரி நிர்வாகத்தைக் கிண்டல் செய்வார். கல்லூரி முதல்வரின் திறமையின்மை பற்றிப் பேசுவார். 

சில சமயம் அரசியல் தலைவர்கள் பற்றியும் பேசுவார். ஆனால் எல்லமே மறைமுகமாகப் பெயர் குறிப்பிடப்படாமல்தான் இருக்கும். 

பல மாணவர்களுக்கு இது சுவாரசியமாக இருந்தாலும் மகேஷுக்கு இது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

"என்னடா இது காலேஜக்குப் படிக்க வரோமா, வம்புப் பேச்சு கேக்க வரோமா?" என்று தன் நண்பன் கேசவனிடம் அலுத்துக் கொண்டான்.

"போடா! வகுப்பு ஜாலியாப் போகுதுன்னு எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க! வகுப்புல லெக்சரர் சொல்லிக் கொடுத்தா நாம கத்துக்கப் போறோம்? இது பள்ளிக் கூடம் இல்லை, காலேஜ்!" என்றான் கேசவன்.

கல்லூரிக் கையேட்டை எடுத்து குருமூர்த்தியின் கல்வித் தகுதியைப் பார்த்தான் மகேஷ். அவர் முதுநிலைப் பட்டதாரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முனைவர் பட்டம் பெற்றவர் இல்லை. அவரே ஒருமுறை இதைப்பற்றி வகுப்பில் குறிப்பிட்டார்.

"நான் பி எச் டி எல்லாம் பண்ணல. எதுக்கு? பி ஜி படிச்சவனை விட பி எச் டி படிச்சவனுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் அதிகமாக் கிடைக்கும். இதுக்காக கைடுன்னு ஒத்தனைப் புடிச்சு மூணு வருஷம் அவனுக்குக் கால் புடிச்சு விட்டு பி எச் டி வாங்கணுமா? மேல போக முடியாதேன்னு கேக்கலாம். நம்ம ஊர்ல பி எச் டி பண்ணாம வைஸ் சான்ஸ்லராவே ஆகி இருக்காங்க. அதனால மேல வரதுக்குத் தேவை மேல் படிப்பு இல்லை, கால் பிடிப்புதான்!" என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

ஒருமுறை வேறொரு செக்‌ஷனில் படித்த ஒரு மாணவனைச் சந்தித்தபோது அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியரைப் பற்றிக் கேட்டான் மகேஷ்.

"எங்களுக்கு ப்ரொஃபசர் தனபால்தான் எடுக்கறார்" என்றான் அவன்

"அவர் கிளாஸ் எப்படி இருக்கும்?" என்றான் மகேஷ்

"ஓ! ரொம்ப நல்லா இருக்கும். வகுப்பில சப்ஜெக்டைத் தவிர வேற எதையும் பேச மாட்டாரு. ஆனாலும் அவர் கிளாஸ் ரொம்ப இன்ட்டரஸ்டிங்கா இருக்கும். ஏன்னா அவருக்கு ரொம்ப டீப் நாலட்ஜ் உண்டு. சிலபஸ்ல இருக்கறதுக்கு மேலயும் சில விஷயங்களைப் பத்திப் பேசுவாரு. அவர் கிளாஸை யாருமே மிஸ் பண்ண மாட்டாங்க. 

"சில சமயம் அவரைப் பாக்க ஸ்டாஃப் ரூமுக்குப் போயிருக்கேன். மத்தவங்கள்ளாம் அரட்டை அடிச்சுக்கிட்டிருப்பாங்க. இவர் மட்டும் ஏதாவது புத்தகத்தைப் படிச்சுக்கிட்டிருப்பாரு. 

"ஒரு தடவை அவர் ஏதோ பத்திரிகை படிச்சுக்கிட்டிருந்தார். அது என்ன பத்திரிகைன்னு கேட்டேன். 'நம்ப சப்ஜெக்ட்ல புதுசா என்னென்ன டெவலப்மென்ட் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க இது மாதிரி டெக்னிகல் ஜேர்னல்ஸைப் படிக்கறது என் வழக்கம்'னு சொன்னார். 

"இப்ப கூட மும்பையில ஒரு செமினார்னு போயிருக்காரு. காலேஜ்ல கூட அனுப்பல. காலேஜுக்கு லீவ் போட்டுட்டு அவர் சொந்த செலவில போயிருக்காரு!" என்றான் அவன்.

குருமூர்த்தி போன்றவர்கள் இருக்கும் இதே கல்லூரியில் தனபால் போன்றவர்களும் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டான் மகேஷ்.

அடுத்த நாள் வகுப்பில், "இந்த காலேஜ்லேருந்தே சில பேரு லீவ் போட்டுட்டு செமினார்ல கலந்துக்கறேன்னு சொந்தச் செலவில மும்பாய் கொல்கத்தான்னு போறாங்க. இதைத்தான் சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கறதுன்னு சொல்றது!" என்று சொல்லிச் சிரித்தார் குருமூர்த்தி.

வகுப்பில் சிரிப்பலை எழுந்தது. 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 419:
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

பொருள்:
நுட்பமான கேள்வி அறிவு இல்லாதவர்கள் பணிவான சொற்களைப் பேசுபவர்களாக இருக்க மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...