Friday, December 28, 2018

9. விலை போன விட்டல்?


"இந்த அரசாங்கத்துக்கு இன்னும் 30 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் இந்த அரசு ஊழல் புகார்களை விசாரிக்க அதிகாரம் பெற்ற 'மக்கள் காவல்' அமைப்பை ஏற்படுத்தாவிட்டால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்"

சமூகப் போராளி விட்டல் இந்த அறிவிப்பை விடுத்து 20 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் அரசாங்கம் இதுவரை 'மக்கள் காவல்' அமைப்பை ஏற்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அது எப்படிப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பல்வேறு தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்டு வருவதாகவும், இந்தக் கருத்துக் கேட்பு முடிந்து, பெரும்பாலான மக்கள் விரும்பும் வகையில், 'மக்கள் காவல்' அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்த பிரதமர், விட்டல் தன்  உண்ணாவிரத   யோசனையைக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், விட்டல் இந்த பதிலை ஏற்கவில்லை. அரசாங்கம்  நேரம் கடத்துகிறது என்றும், இந்தக் கருத்துக் கேட்புகள் முடிந்து சட்டம் இயற்றப்பட்ட இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகி விடும் என்றும், அதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும் என்றும் குற்றம் சாட்டிய விட்டல், திட்டமிட்டபடி தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் சார்பாக சில அமைச்சர்கள் விட்டலைச் சந்தித்துப்பேசினார். ஆனால் விட்டல்  தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

சில பத்திரிகை ஆசிரியர்களும், தொலைக்காட்சி சானல் நிர்வாகிகளும் கூட விட்டலைச் சந்தித்துப் பேசினர். விட்டலிடம் தாங்கள் பேசியது என்ன என்பதை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். அரசாங்கம் தனக்கு வேண்டிய ஊடகவியலாளர்கள் மூலம் விட்டலுக்கு அழுத்தம் கொடுப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

உண்ணாவிரதம் துவங்க வேண்டிய தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பு தனக்கு உடல் நிலை சரியில்லாததால், தன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தள்ளி வைப்பதாக விட்டல் அறிவித்தார்.

'விட்டல் விலை போய் விட்டார் ' என்று சமூக ஊடகங்கள் ஒருமித்த குரலில் உரக்கக் கூவின.

"என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார் விட்டலின் நண்பரும் பத்திரிகை நிருபருமான சதீஷ்.

"நீங்கதான் காரணம்!" என்றார் விட்டல்.

"நானா, நான் என்ன செஞ்சேன்?"

"நீங்கன்னா, உங்க பத்திரிகைத்துறை நண்பர்களைச் சொன்னேன்"

"ஆமாம். பத்திரிகைதந்துறையிலேந்து சில பேர் உங்களை சந்திச்சாங்களே! அவங்க உங்களை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்னு சொன்னாங்களா?"

"அப்படிச் சொல்லல. ஆனா, அவங்க சொன்ன ஒரு விஷயம் என்னை யோசிக்க வச்சது."

"என்ன விஷயம் அது?" என்றார் சதீஷ்.

"சமீபகாலமா, இந்த அரசாங்கத்து மேல, குறிப்பா பிரதமர் மேல கடுமையான விமரிசனம் வருது.விமரிசனம் வரது தப்பு இல்ல. ஆனா, பிரதாமரைத் தரக்குறைவாத் தாக்கி சில விமரிசனம்லாம் வருது."

"ஆமாம். நான் கூடப் பாத்திருக்கேன்.எங்க பத்திரிகை கூட இந்த அரசாங்கத்தைக் கடுமையா விமரிசக்கற பத்திரிகைதான். ஆனா சில தரக்குறைவான விமரிசனங்கள் வரதை நாங்களே கண்டிச்சிருக்கோம்."

"பிரதமர் மென்மையானவர், விமரிசனங்களை சிரிச்சுக்கிட்டே ஏத்துக்கறவர்ங்கறதால சில பேரு அவரைக்  கொஞ்சம் அதிகமாவே விமர்சிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அரசாங்கத்தில் சில பேரு இப்படி விமரிசனம் செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க வச்சிருக்காங்க. சில பேர் மேல வழக்கு, சில பேர் கைதுன்னு கொஞ்சம் கடுமையான நடவடிக்கை எல்லாம் எடுக்கப்பட்டிருக்கு. ஆனா,பிரதமருக்கு இது தெரிஞ்சதும்,அந்த நடவடிக்கையை எல்லாம் ரத்து பண்ணச் சொல்லிட்டாராம். அரசாங்கத்தை யாரு எவ்வளவு கடுமையா விமரிசனம் செஞ்சாலும், அவங்களுக்கு பதில் சொல்லணுமே தவிர, அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு மற்ற அமைச்சர்கள் கிட்டயும், அதிகாரிகள்கிட்டயும் கடுமையா சொல்லி இருக்காரு."

"ஆச்சரியமா இருக்கே! இது உண்மையா? உங்களுக்கு இது எப்படித் தெரியும்?"

"என்னைச் சந்திச்ச பத்திரிகைக்காரங்க சொன்னதுதான்! சில ஊடகங்கள்ள  எழுதின மாதிரி, அவங்க அரசாங்கம் அனுப்பி எங்கிட்ட வரல. அவங்களாகவேதான் வந்து எங்கிட்ட இதைச் சொன்னாங்க. தன்னைப் பத்தின கடுமையான விமர்சனத்தைப் பொறுத்துக்கற பிரதமர் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கறவராத்தான் இருப்பார்னு எனக்குத் தோணிச்சு. அதனாலதான் இந்த அரசாங்கத்துக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம்னு என் உண்ணாவிரதத்தை ஒத்தி வச்சேன்" என்றார் விட்டல்.

"அது சரி. ஆனா இப்ப எல்லோரும் நீங்க விலை போயிட்டதா உங்களை இல்ல தப்பபாப் பேசறாங்க?" என்றார் சதீஷ்.

"பரவாயில்ல.தன்னைப் பத்தின கடுமையான விமரிசனங்களைத் தாங்கிக்கற ஒரு அரசாங்கத்துக்காக நான் இந்த அவதூறைக் கொஞ்ச நாளைக்குத் தாங்கிக்கறேன்" என்றார் விட்டால்.
'
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

பொருள்:
காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்குப்  பிறர் தன்னைக் கடிந்து பேசுவதையும் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய அரசனின் ஆட்சியில் நாடு நலம் பெறும்.

No comments:

Post a Comment

14. ஒரு புதிய அனுபவம்!

தணிகாசலத்துக்கு அந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்தபோது அவனுக்கு அது பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஒரு கிராமத்துப்பள்ளியில் சரித்திர ஆச...