Wednesday, February 20, 2019

392. முதியவரின் கணக்கு


"இந்த சனியன் பிடிச்ச கணக்கு மண்டையில ஏறலேன்னுதான் ப்ளஸ் டூவிலேயே கணக்குக்கு முழுக்குப் போட்டுட்டு காமர்ஸ் க்ரூப்புக்கு மாறினேன். இப்ப வேலைக்கு அப்ளை பண்ணினா, ஆப்டிட்யூட் டெஸ்ட்னு சொல்லி மறுபடி கணக்குப் பரீட்சை வைக்கறாங்க! இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல? என்று சலித்துக் கொண்டான் சதீஷ்.

"வேலைக்குப் போறதுக்கு மட்டும் இல்லடா, மேல் படிப்பு படிக்கக் கூட ஆப்டிட்யூட் டெஸ்ட்ல கணக்கு இருக்கு. வெளிநாட்டில படிக்கக் கூட சேட், ஜி ஆர் ஈ, ஜி மேட்ன்னு எல்லாத்திலேயும் கணக்குதான். ஏன் இதை யாரும் எதிர்க்கலேன்னு தெரியல" என்றான் சுந்தர்.

"உங்களுக்கு கணக்கு பிரச்னைன்னா, எனக்கு இங்கிலீஷ் பிரச்னை. எல்லா ஆப்டிட்யுட் டெஸ்ட்லேயும் இங்கிலீஷ் இருக்கே! ஆங்கிலேயர்கிட்டேந்து விடுதலை வாங்கினாலும், இன்னும் நாம இங்கிலீஷுக்கு அடிமையாத்தான் இருக்கோம்" என்றான் மூர்த்தி.

கல்லூரி முடிந்து மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர் சிரித்தபடியே, "ஏம்ப்பா, ஆப்டிட்யூட் டெஸ்ட்ல இங்கிலீஷுக்கு பதிலா தமிழ் இருந்தா உனக்கு சுலபமா இருக்குமா?" என்றார்.

பதில் சொல்ல மூர்த்தி சற்று தயங்கியபோது, சுந்தர் முதியவரைப் பார்த்து, "ஏன் சார்! எல்கேஜிலேந்து இன்ஜினியரிங் வரை எத்தனையோ சப்ஜெக்ட் படிச்சு, எத்தனையோ பரீட்சை எழுதியாச்சு. மறுபடியும் இங்கிலீஷ்லேயும், கணக்கிலேயும் எதுக்கு சார் பரீட்சை?" என்றான்.

"எல்லாருக்கும் அடிப்படையாத் தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒண்ணு மொழி. பேசிப் பழக, புரிஞ்சுக்க, விஷயங்களை சொல்ல, மொழி அறிவு வேணும். கொடுக்கல் வாங்கலுக்கு கணக்கு வேணும். படிப்பறிவு இல்லாம தெருவில காய்கறி விக்கறவங்க கூட, ஒரு கிலோவுக்கு இவ்வளவு விலைன்னு வச்சு அதிலேந்து கால் கிலோ, அரை கிலோக்கு எவ்வளவுன்னு கணக்குப் பண்ணி, நாம கொடுக்கற நூறு ரூபாய் அம்பது ரூபாய்க்கு விலை போக மீதி எவ்வளவுன்னு மனசிலே கணக்குப் போட்டு மீதி சில்லறை கொடுக்கறாங்க. பேரம் பேசறப்ப, இந்த விலைக்கு எத்தனை லாபம் வரும் அல்லது நஷ்டம் வரும்னு கூட மனசில கணக்குப் போட்டுப்பாங்க."

"அது சரி சார். எப்பவோ படிச்சதையெல்லாம் மறுபடி படிச்சு பரீட்சை எழுதச் சொல்றது கொடுமை இல்லையா?"

"எனக்குத் தெரிஞ்ச வரை, ஆப்டிட்யூட் டெஸ்ட்ல கேக்கற விஷயங்கள் அடிப்படையா நாம எப்பவும் தெரிஞ்சு வச்சுக்க வேண்டிய விஷயங்கள்தான்- சராசரி, சதவீதம், காலம், தூரம், வடிவங்கள், கோணங்கள், பரப்பளவு, கொள்ளளவு மாதிரி. சில பரீட்சைகள்ள சில கடினமான தலைப்புக்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனா, அடிப்படையில் ஆப்டிட்யூட் டெஸ்ட்ல கணித அறிவும், ஆங்கில அறிவும் சோதிக்கப்படறதுக்குக் காரணம், அவை உலக வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற விஷயங்கள் என்பதாலதான். இந்த ஆட்டிட்யூடை நீங்க உருவாக்கிக்கிட்டா, ஆப்டிட்யூட் டெஸ்ட்டை சுலபமா அணுக முடியும்!" என்றார் முதியவர்.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருவர் சிரித்தபடியே, "ஸோ, ஆப்டிட்யூட்  இஸ் ஆல் அபௌட் ஆட்டிட்யூட்!" என்று முதியவர் சொன்னதை ஆங்கிலத்தில் சொல்லித் தன் ஆங்கிலப் புலமையை வெளிக்காட்டினார்.

சதீஷ் அவரை வியப்புடன் பார்த்து, "சார்! நீங்க ஆப்டிட்யூட் டெஸ்ட் எழுதி இருக்கீங்களா?" என்றான்.

"எழுதல. ஆனா என் பேரன் ஜி ஆர் இ பரீட்சைக்குத் தயார் பண்ணிக்கறப்ப அவனுக்குக் கொஞ்சம் உதவி செஞ்சேன்" என்றார் பெரியவர் சிரித்தபடி.

"உதவி செஞ்சீங்களா? எப்படி?"

"எண்களைப் புரிஞ்சுக்கிட்டா கணக்கு சுலபமா இருக்கும், ஒரு வாக்கியத்திலேயோ, பாராவிலேயோ முக்கியமான வார்த்தைகள் எதுன்னு கண்டுபிடிக்க முடிஞ்சா, ஆங்கிலம் சுலபமா  இருக்கும்னு அவனுக்குப் புரிய வச்சேன்."

"எப்படி சார்?"

"உதாரணமா, ஒரு கணக்கு. 'ஒரு பண்ணையில பல மிருகங்கள் இருக்கு. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு மாடுகள், நாலில் ஒரு பங்கு' ஆடுகள் ன்னும் கொடுத்திருந்தது. சில விவரங்கள் கொடுத்து மொத்த மிருகங்களின் எண்ணிக்கை எவ்வளவுன்னு கேட்டிருந்தாங்க. என் பேரன் x/3,  x/4ன்னு மண்டையை உடைச்சுக்கிட்டிருந்தான். மொத்த மிருகங்களோட எண்ணிக்கை 3 4 ரெண்டாலயும் வகுபடணும், அதனால 12ஆல வகுபடணும்னு சொன்னேன். இதுதானே எல் சி எம் என்பதோட அடிப்படை? ஆன்ஸர் சாய்ஸ்ல, 12ஆல  வகுபடற எண்கள் ரெண்டுதான் இருந்தது. அந்த ரெண்டுல ஒண்ணுதான் விடைன்னு தெரிஞ்சப்புறம், எது சரியான விடைன்னு சில விநாடிகள்ள கண்டு பிடிச்சுட்டான். அவனுக்கு ஒரே உற்சாகம்."

"சார்! நீங்க என்ன படிச்சிருக்கீங்க?"

"நான் அதிகம் படிக்கல தம்பி. ஆனா திருக்குறள் மட்டும் ஓரளவு படிச்சிருக்கேன்" என்றார் பெரியவர்.

"ஏன் சார், திருக்குறள்ள எல்லாம் இருக்குங்கறாங்களே, ஆப்டிட்யூட் டெஸ்ட் பத்தி இருக்கா?" என்றான் மூர்த்தி, சற்றுக் கேலியாக.

"என் ஸ்டேஷன் வரப்போகுது. நான் இறங்கணும்" என்று எழுந்தார் முதியவர்.

"பேசிக்கிட்டே வந்ததிலேயே எந்த ஸ்டேஷன் போச்சுன்னே கவனிக்கலியே!" என்றான் சுந்தர்.

"நானும் கவனிக்கலை. நான் இந்த ஊருக்குப் புதுசு. நான் இறங்க வேண்டியது நான் ஏறின ஸ்டேஷனிலேந்து ஏழாவது ஸ்டேஷன்னு தெரியும். எண்ணிக்கிட்டே வந்தேன். வரப்போறது ஏழாவது. அடுத்தது சேட்பட்தானே சார்?" என்று பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டார் முதியவர். அவர் ஆமாம் என்று தலையாட்டினார்.

"பெரியவரை எப்படி மடக்கிட்டேன் பாத்தியா, நான் கேட்ட கேள்விக்கு அவர் கிட்ட பதில் இல்லை" என்று மூர்த்தி சதீஷிடம் மெதுவாகச் சொல்லிக் கொண்டிருந்தபோதே, கதவுக்கருகிலிருந்து முதியவர் சற்று உரத்த குரலில் சொன்னார். "தம்பி! ஆப்டிட்யூட் டெஸ்ட் பத்தி திருவள்ளுவர் சொல்லி இருக்கார். கல்வி அதிகாரத்தைப் பாரு" என்றார். அவர் சொல்லி முடிப்பதற்கும் ரயில் நிற்பதற்கும் சரியாக இருந்தது.

'பெரியவர் பதில் சொல்றதைக் கூட ரயில் நிக்கற நேரத்தைக் கணக்குப் போட்டுத்தான் செஞ்சிருக்காரு' என்று மனதுக்குள் வியந்து கொண்டான் மூர்த்தி.

அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 392:
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

பொருள்:
எண், எழுத்து என்று அழைக்கப்படும் இரு கலைகளும், இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் இரு கண்களைப் போல் இன்றியமையாதவை.

No comments:

Post a Comment

459. தந்தையின் அறிவுரை.

முகுந்தன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் வழக்கம் போல் தன் தந்தையின் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்திருந்த அவரைப் பார்த்து, "ராத்தி...