"அஞ்சு வருஷம் மோசமான அரசாங்கத்துக்கப்புறம் வேற ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கு. எப்படி இருக்கோ பாக்கலாம்" என்றார் சிற்றம்பலம்.
"எல்லா அரசாங்கமும் ஒரே மாதிரிதான். ஆளுங்கதான் மாறுவாங்களே தவிர, ஆட்சி மாறாது" என்றார் பொன்னம்பலம்.
"என்னங்க, ஆட்சி மாறி ஆறு மாசம் ஆச்சே, இப்ப என்ன சொல்றீங்க, புது அரசாங்கத்தைப் பத்தி?" என்றார் சிற்றம்பலம்.
"நிறைய வரிச் சலுகை கொடுத்திருக்காங்க. அதனால மக்கள் கையில புழங்கற பணம் அதிகரிக்கும். இது நல்ல விஷயம்தான். ஆனா, மத்த விஷயங்கள்ள எப்படி நடந்துக்கறாங்கன்னு பாக்கலாம்" என்றார் பொன்னாம்பலம்.
"ஒரு வருஷம் ஆச்சு. எனக்கென்னவோ இந்த அரசாங்கம் நல்லா செயல்படற மாதிரிதான் தோணுது. நீங்க என்ன நினைக்கறீங்க?" என்றார் சிற்றம்பலம்.
"ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இந்த அரசாங்கம் எல்லா விஷயத்தையும் ரொம்பப் பரிவோடு அணுகுது. முன்னால இருந்த அரசாங்கம் அடக்குமுறையைக் கையாண்டது. ஆனா இந்த அரசாங்கம் பேச்சு வார்த்தை மூலமா பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்யுது. அதுக்காக எல்லாத்துக்கும் சரின்னு சொல்லாம சில விஷயங்கள்ள உறுதியாவும் இருக்கு. புதுத் துடைப்பம் நல்லாப் பெருக்கும்னு சொல்லுவாங்க. பார்க்கலாம்!" என்றார் பொன்னம்பலம்.
"என்னங்க, ரெண்டரை வருஷம் ஆயிடுச்சு. பாதி டர்ம் முடிஞ்சு போச்சு. இப்பவாவது இந்த அரசாங்கத்துக்கு பாஸ் மார்க் கொடுப்பீங்களா?" என்றார் சிற்றம்பலம்.
"பாஸ் மார்க் கண்டிப்பாக் கொடுக்கலாம். ஆனா இந்த அரசாங்கம் எண்பதுக்கு மேல மார்க் வாங்கும்னு நினைக்கறேன். வாங்கணும்னு எதிர்பாக்கறேன். அந்த அளவுக்கு எல்லாமே நல்லாப் போயிட்டிருக்கு. இந்த அரசாங்கத்தோட இன்னொரு சிறப்பான விஷயம் என்னன்னா எல்லார் விஷயத்திலேயும் ஒரே மாதிரி நியாயமா நடந்துக்கறாங்க. ஆளுங்கட்சிக்காரங்க தப்பு செஞ்சா அவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கறாங்க. அதனால அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் பயந்து தப்புப் பண்ணாம இருக்காங்க. இது ரொம்ப அபூர்வம். நான் இதை மனசாரப் பாராட்டறேன்" என்றார் பொன்னம்பலம்.
"நாலு வருஷம் ஆயிடுச்சே, இப்ப எண்பது மார்க் கொடுப்பீங்களா?" என்றார் சிற்றம்பலம்.
"எண்பது என்ன, தொண்ணூறே கொடுக்கலாம். எல்லா அரசாங்கமும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஏன்னா, வளர்ச்சி இருந்தாத்தான் அரசாங்கத்துக்கு வருமானம் வரும். ஆனா, வளர்ச்சியோட பலன் எல்லாருக்கும் போய்ச் சேரணும்கறதுக்காக, இந்த அரசாங்கம் எல்லா மக்களுக்கும் உதவற விதத்தில கிராமப்புற, நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டங்கள் மாதிரி நிறைய திட்டங்களை உருவாக்கி இருக்கு. மக்களைக் காப்பாத்தறது தன்னோட கடமைன்னு நினைச்சு செயல்படுது இந்த அரசாங்கம். பாராட்டப்பட வேண்டிய விஷயம்" என்றார் பொன்னம்பலம்.
"வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி!" என்றார் சிற்றம்பலம்.
"ஒத்தர் பிரம்மரிஷியா இருந்தா, வசிஷ்டரா இருந்தா என்ன, வேற யாரா இருந்தா என்ன, அதை ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்!" என்றார் பொன்னம்பலம்.
(குறிப்பு: இது எந்த ஒரு அரசாங்கத்தையும் குறித்த கதை அல்ல. ஒரு கற்பனை அரசாங்கம் குறித்தது. என்றோ ஒருநாள் இப்படி ஒரு அரசு அமையும் என்று நாம் கனவு காணத்தான் முடியும்!)
(குறிப்பு: இது எந்த ஒரு அரசாங்கத்தையும் குறித்த கதை அல்ல. ஒரு கற்பனை அரசாங்கம் குறித்தது. என்றோ ஒருநாள் இப்படி ஒரு அரசு அமையும் என்று நாம் கனவு காணத்தான் முடியும்!)
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 390:கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
பொருள்:
கொடை, அருள், செங்கோல், நலிந்த மக்களைக் காத்தல் ஆகிய நான்கு பண்புகளும் உள்ள அரசன் அரசர்களுக்கெல்லாம் ஒளி போன்றவன்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment