மணிமாறன் பதில் சொல்லவில்லை.
மணிமாறனின் தங்கை கிருத்திகாவின் மாமனார் இறந்து விட்டார். அவருடைய இறப்புக்குப் பின்னான சடங்குகளுக்கு, இவன் சீர் செய்ய வேண்டுமாம்! என்ன ஒரு நடைமுறையோ தெரியவில்லை. ஒரு பெண்ணின் பிறந்த வீட்டை மொத்தமாகச் சுரண்டுகிற வழக்கங்கள்!
சாவுக்குப் போனபோதே, கிருத்திகா சொல்லி விட்டாள். "அண்ணே! உன் நிலைமை எனக்குத் தெரியும். ஆனாலும், முறைப்படி செய்ய வேண்டியதை செஞ்சுடு. இல்லேன்னா, என் மாமியாரும், மத்த சொந்தங்களும் ஆயுள் முழுக்க சொல்லிக் காட்டிக்கிட்டே இருப்பாங்க"
அவர்கள் எதிர்பார்க்கும் சீர்களைச் செய்ய குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் ஆகும். பணத்துக்கு எங்கே போவது?
"உங்க நண்பர் சுந்தர்கிட்ட கேட்டுப் பாருங்களேன். அவர் வசதியாத்தானே இருக்காரு!" என்றாள் பாக்யலட்சுமி.
"வசதியாத்தான் இருக்கான். ஆனா கேட்டா, இப்ப கையில பணம் இல்லைன்னு சொல்லிடுவான். எப்பப் பார்த்தாலும் பஞ்சப் பாட்டுப் பாடுவான். அவன் புலம்பறதைக் கேட்டா, நானே அவனுக்கு நூறு ரூபா கொடுத்துட்டு வரலாம் போல இருக்கும்!"
"நீங்க உரிமையாக் கேக்கக் கூடியவர் அவர் ஒத்தர்தான். வேற யார்கிட்ட போய் நீங்க கேக்க முடியும்?"
சற்று நேரம் ஏதோ யோசித்த மணிமாறன், ஒரு முடிவுடன் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.
"எங்கே கிளம்பிட்டீங்க?" என்றாள் பாக்யலட்சுமி.
"ராத்திரிக்குள்ள வந்துடுவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் மணிமாறன்.
இரவு 9 மணிக்கு வீட்டுக்குத் திரும்பினான் மணிமாறன்.
"எங்கே போயிட்டு வரீங்க? போறப்பவே கேட்டேன், சொல்லவே இல்லையே!" என்றாள் பாக்யலட்சுமி.
"எங்க மாமா வீட்டுக்குத்தான்!" என்றபடியே, தன் சட்டைப்பையிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காட்டினான் மணிமாறன்.
"உங்க தங்கை வீட்டுக்கு சீர் செய்ய, அவர்கிட்ட கடன் வாங்கிட்டு வந்திருக்கீங்களா? ஏற்கெனவே, போன வருஷம், நம்ம பொண்ணு படிப்புக்காக, அவர்கிட்டதான் கடன் வாங்கினீங்க."
"அதைத்தான் திருப்பிக் கொடுத்துட்டேனே!"
"அதுக்காகத் திரும்பத் திரும்ப அவர்கிட்ட போய்க் கடன் கேக்கறது உங்களுக்குக் கஷ்டமா இல்ல? உங்க நண்பர்கிட்டயே கேக்க மாட்டேன்னுட்டீங்க. அவர்கிட்ட போய் மறுபடியும் எப்படிக் கேட்டீங்க?"
"ஏன்னா, அவர் இருந்தா கொடுப்பாரு, இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவாரு. வச்சுக்கிட்டு இல்லேன்னு சொல்ல மாட்டாரு. இப்படிப்பட்ட மனுஷங்க சில பேராவது உலகத்தில இருக்கறதாலதான், நம்ம மாதிரி ஆட்களுக்கு உதவி தேவைப்படும்போது, அவங்ககிட்ட போய் உதவி கேட்க முடியுது!" என்றான் மணிமாறன், பெருமூச்சுடன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)
குறள் 1055:
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
No comments:
Post a Comment