Saturday, March 16, 2024

1054. வள்ளலுக்கு ஒரு தண்டனை!

"யார் இந்த வள்ளல் சபாபதி? ஏன் அவருக்கு மக்களிடையே இவ்வளவு புகழ்?" என்றான் அரசன் கஜவர்மன்.

"அரசே! தாங்களே குறிப்பிட்டது போல் அவர் ஒரு வள்ளல். பலனை எதிர்பாராமல், தன் செல்வம் குறைந்து விடுமே என்று கவலைப்படாமல் வாரிக் கொடுப்பவரை மக்கள் மதிப்பது இயல்புதானே?" என்றார் அமைச்சர்.

"ஏது? நீங்களே அவரைப் புகழ்ந்து தள்ளி விடுவீர்கள் போலிருக்கிறதே!"

"உண்மையைச் சொன்னேன் அரசே!"

"எது உண்மை? நம் நாட்டு மக்களுக்கு நான் எவ்வளவு நன்மை செய்திருக்கிறேன்! மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டாலும் சரி,  வெள்ளம் வந்து மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்தாலும் சரி, அவர்களுக்கு எவ்வளவு உதவி இருக்கிறேன்! என்னை விட அதிகம் உதவி விட்டாரா அந்த சபாபதி?"

"அரசே! மக்களின் துயரைப் போக்குவது மன்னரின் கடமை. அத்துடன்..."

"அத்துடன்?"

"இல்லை மன்னரே! வேறொன்றும் கூற விரும்பவில்லை."

"பரவாயில்லை, சொல்லுங்கள்."

"ஒரு மன்னர் அரசுக் கருவூலத்திலிருந்து கொருளை எடுத்து மக்களுக்கு அளிக்கும்போது அவர் தன் சொந்தப் பணத்தை் கொடுக்கவில்லை. நாட்டுக்குச் சொந்தமான, சொல்லப் போனால் மக்களுக்குச் சொந்தமான பணத்தைத்தான் கொடுக்கிறார். இதையும், ஒரு தனி மனிதர் தனக்குச் சொந்தமான பொருளைப் பிறருக்கு வாரி வழங்குவதையும் எப்படி ஒப்பிட முடியும்?"

தான் சொன்னதை அரசர் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று நினைத்தபடியே தயக்கத்துடன் அரசரை ஏறிட்டுப் பார்த்தார் அமைச்சர்.

"அமைச்சரே! மனதில் உள்ளதை மறைக்காமல் கூறும் உங்கள குணத்தை நான் போற்றுகிறேன். நீங்கள் கூறியது சரிதான். ஆயினும் சபாபதியைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன!" என்றான் கஜவர்மன்.

"இறைவன் பக்தர்களைச் சோதிப்பது போலவா?" என்றார் அமைச்சர் சிரித்துக் கொண்டே.

"அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்!" என்ற அரசன் சற்று யோசித்து விட்டு, "ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சபாபதியைக் கைது செய்து அழைத்து வாருங்கள்" என்றான்.

"அரசே! அவரை ஏன் கைது செய்ய வேண்டும்? ஒரு தவறும் செய்யாத ஒருவரை என்ன காரணத்துக்காகக் கைது செய்ய முடியும்?" என்றார் அமைச்சர் சற்று அதிர்ச்சியுடன்.

"உங்களால் முடியாதுதான். தளபதியிடம் சொல்லி அவரைக் கைது செய்து அழைத்து வரச் சொல்கிறேன். ஆனால் அவரை அரசவையில் நான் விசாரிக்கும்போது நீங்களும் அரவையில் இருக்க வேண்டும்" என்றான் அரசன்.

ரசவையில் கைதியாக நிறுத்தப்பட்டிருந்த சபாபதியைப் பார்த்து, "சபாபதி! உங்களை எல்லோரும் வள்ளல் என்று புகழ வேண்டும் என்பதற்காக நீங்கள் பலருக்கும் பொருள் கொடுது உதவி வருகிறீர்கள். அதனால் உங்களிடம் உதவி பெறுபவர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள். வேலையே செய்வதில்லை.  தங்கள் தேவைகளுக்கு உங்கள் முன் வந்து நிற்கிறீர்கள். நீங்களும் அவர்களுக்குப் பிச்சை போடுவது போல் எதையோ விட்டெறிந்து அவர்களைச் சிறுமைப் படுத்கிறீர்கள். அதனால் அவர்கள் தொடர்ந்து சோம்பேறிகளாகவே இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களிடையே சோம்பேறித்தனத்தை வளர்க்கிறீர்கள், மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி அவர்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் உங்கள் மீது வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு உங்கள் பதில் என்ன?" என்றான் அரசன்.

"அரசே! துன்பத்தில் வாடுபவர்களுக்கு என்னால் இயன்ற அளவில் நான் உதவுகிறேன். வேலை செய்ய முடியாதவர்கள், அல்லது வேலை கிடைக்காதவர்களுக்குத்தான் நான் உதவுகிறேன். யாரையும் சோம்பேறிக இருக்க நான் ஊக்குவிப்பதில்லை. மேலும் மற்றவர்களுக்கு உதவும்போது நான் பணிவாகத்தான் நடந்து கொள்கிறேன். யாரையும் சிறுமைப்படுத்தவில்லை" என்றார் சபாபதி.

"இல்லை சபாபதி. மற்றவர்கள் முன் கையேந்தி உதவி கேட்பது எவ்வளவு அவமானகரமானது என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்களே இதை உணர்ந்து பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும். அதனால் உங்களுக்கு நான் ஒரு தண்டனை கொடுக்கிறேன். நீங்கள் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களாக உணவில்லாமல் இருக்கிறீர்கள். இந்த அவையில் உள்ள யாராவது ஒருவரிடம் சென்று, 'ஐயா! நான் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. பசி என் உயிரை வாட்டுகிறது. ஏதாவது கொடுத்து உதவுங்கள்' என்று பிச்சை கேட்க வேண்டும். அப்படி நீங்கள் கேட்டால் அதற்குப் பிறகு உங்களை விடுதலை செய்து விடுவேன். உங்களிடம் உதவி பெறுபவர்கள் எப்படிக் கூனிக் குறுகி அவமானப்படுகிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்!" என்றான் அரசன்.

சற்று நேரம் மௌனமாக இருந்த சபாபதி, அவையிலிருந்த அனைவரையும் பார்த்து விட்டு அமைச்சரை நோக்கிச் சென்றார்.

"அமைச்சரே! நான் சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டன. பசியின் கொடுமை தாங்கவில்லை. எனக்கு ஏதாவது கொடுத்து உதவுங்கள்" என்றார் சபாபதி, அமைச்சரைப் பார்த்துக் கைகூப்பியபடியே. 

அமைச்சர் திகைத்துப் போய் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தபோதே, அரசர் சைகை காட்ட, ஒரு சேவகன் தன் கையிலிருந்த பழத்தட்டை அமைச்சரிடம் கொடுக்க, அமைச்சர் அந்தத் தட்டை சபாபதியிடம் கொடுத்தார்.

தட்டை வாங்கிக் கொண்ட சபாபதி அரசனைப் பார்க்க "அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து பழங்களை அருந்திப் பசியாறுங்கள் வள்ளலே!" என்றான் அரசன்.

சபாபதி இருக்கையில் அமர்ந்து ஓரிரு பழங்களை அருந்திப் பசி தீர்த்துக் கொண்டதும், "நன்றி அரசே!" என்றார்.

"இப்போது சொல்லுங்கள் வள்ளலே! நீங்கள் அமைச்சரிடம் யாசிக்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்? இரண்டாவதாக, யாசிப்பதற்கு அமைச்சரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்றான் அரசன்.

"அரசே! நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் ஒன்றுடன் ன்று தொடர்புடையவை. அமைச்சரிடம் இரந்தபோது நான் பிறருக்குக் கொடுக்கும்போது என் மனதில் தோன்றும் பெருமித உணர்வுதான் தோன்றியது. அதற்குக் காரணம் நான் யாசித்தது தன் மனதில் இருப்பதை மறைத்துப் பேசாத இயல்புடையவர் என்று அறியப்பட்டுள்ள அமைச்சர்பிரானிடம்!" என்றார் சபாபதி அமைச்சரைப் பார்த்து வணங்கியபடியே. 

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1054:
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

பொருள்: 
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...