Friday, March 15, 2024

1053. உதவி கேட்க மாட்டேன்!

"நான் யார்கிட்டயும் எப்பவும் எந்த உதவியும் கேக்க மாட்டேன். இது என்னோட கொள்கை" என்றான் மனோகர்.

"அப்படி இருக்க முடிஞ்சா அது பெரிய விஷயம்தான்!" என்றான் அவன் நண்பன் அசோக்.

மனோகரின் கொள்கைக்குச் சோதனையாக அமையும் ஒரு காலம் வந்தது.

மனோகரின் அம்மா உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொன்னார்கள்.

மனோகரிடம்  அவ்வளவு பெரிய தொகை இல்லை. புரட்டுவதற்கான வழியும் இல்லை.

"இப்ப என்ன செய்யப் போற? இது மாதிரி சமயத்தில யார்கிட்டேயாவது உதவி கேட்டுத்தானே ஆகணும்? யார்கிட்ட கேட்கப் போற?" என்றான் அசோக்.

மனோகர் சற்று யோசித்து விட்டு "கனகராஜ் சார்கிட்ட!" என்றான்.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் அது.

அலுவலகத்தில் மனோகருக்குக் கீழே பணியாற்றிய ஒரு உதவியாளன் ஒரு மோசடி செய்து விட்டான். மோசடி கண்டறியப்பட்டு அவன் வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.

நிறுவனத்தின் பொதுமேலாளர் கனகராஜ் மனோகரைத் தன் அறைக்கு அழைத்தார்.

"மிஸ்டர் மனோகர்! உங்க அசிஸ்டன்ட் பண்ணின தப்புக்கு நீங்களும் பொறுப்பு ஏற்கணும். உங்க கண் முன்னால இந்த மோசடி நடந்திருக்கு. நீங்க அதை கவனிக்காம விட்டிருக்கீங்க. கொஞ்சம் கவனமா இருந்திருந்தா இந்த மோசடியை நீங்க ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம், அல்லது அவனை முன்னாலேயே பிடிச்சிருக்கலாம். ஆடிட்டர்கள் வந்து கண்டுபிடிச்சப்புறம்தான் இந்த மோசடி வெளியில வந்திருக்கு. அதனால உங்களுக்கு தண்டனையா ஒரு இன்க்ரிமென்ட் கட் பண்ணி இருக்கேன்!" என்றார் கனகராஜ்.

"சார்! எனக்கு இதில பொறுப்பு இருக்குன்னு ஒத்துக்கறேன். ஆனா இதுக்காக எனக்கு இன்க்ரிமென்ட் கட் பண்றது நியாயம் இல்லை நான் எந்தத் தப்பும் பண்ணலையே!" என்றான் மனோகர் பணிவுடன்.

"தப்பு பண்ணாட்டாலும் நடந்த தப்புக்குப் பொறுப்பு நீங்கதானே? அதை எப்படி தண்டிக்காம விட முடியும்?"

"சார்! அப்படிப் பார்த்தா..." என்று ஆரம்பித்த மனோகர், "சரி சார். உங்க இஷ்டம்" என்று கூறி அவர் அறையிலிருந்து வெளியேற எத்தனித்தான்.

"ஒரு நிமிஷம்!" என்று அவனை அழைத்த கனகராஜ், "'அப்படிப் பாத்தான்னு' நீங்க என்ன கேக்க வந்தீங்கன்னு எனக்குத் தெரியும்!" என்றார்.

"இல்லை சார்..."

"அப்படிப் பார்த்தா உங்களையெல்லாம் நிர்வகிக்கிற எனக்கும்தானே இதில பொறுப்பு இருக்கணும்? இதுதானே நீங்க கேட்க நினைச்சது?"

மனோகர் மௌனமாக இருந்தான்.

"நீங்க கேட்க நினைச்ச கேள்வி நியாயமானதுதான். அதனாலதான் எனக்கும் ஒரு இன்க்ரிமென்ட் கட் பண்ணனும்னு ஹெட் ஆஃபீசுக்கு ரெகமெண்ட் பண்ணி இருக்கேன்!" என்றார் கனகராஜ்.

மனோகர் அவரை வியப்புடன் பார்த்தான்.

"ஏண்டா, யார்கிட்டேயும் உதவி கேட்க மாட்டேன், அதுதான் என் கொள்கைன்னு சொன்ன. இப்ப உன்னோட பாஸ்கிட்ட உதவி கேக்கறேன்னு சொல்றியே, அதுல உனக்கு அவமானம், வருத்தம் எதுவுமே இல்லையா?" என்றான் அசோக்.

"இல்லை. கனகராஜ் மாதிரி ஒரு உயர்ந்த மனிதர்கிட்ட உதவி கேக்கறதுல எனக்கு சங்கடம் எதுவும் இல்ல. அவர் உதவி செய்யாட்டாலோ, இல்ல எங்கிட்ட எப்படி நீ உதவி கேக்கலாம்னு கோவிச்சுகிட்டாலோ கூட நான் வருத்தப்பட மாட்டேன்!" என்றான் மனோகர். 

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1053:
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

பொருள்: 
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...