"வாங்க" என்ற மீனா, "உள்ள வந்து உக்காருங்க. அவர் குளிச்சுக்கிட்டிருக்காரு. வந்துடுவாரு" என்று கூறி விட்டு, உள்ளே சென்றாள். சில நிமிடங்கள் கழித்துக் கையில் காப்பி தம்ளருடன் வந்தாள்.
"எதுக்குங்க இதெல்லாம்?" என்று சங்கடத்துடன் காப்பி தம்ளரைப் பெற்றுக் கொண்டான் தனஞ்சயன்.
அதற்குள் தலையைத் துண்டால் துவட்டியபடியே வந்த கதிரேசன், "வாடா! எங்கே, ரொம்ப நாளா ஆளையே காணோம்!" என்று சொல்லி விட்டு, "ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்!" என்றபடியே, உடைமாற்றிக் கொள்ள உள்ளே சென்றான்.
தனஞ்சயன் காப்பி குடித்து முடித்தும், "நீங்க பேசிக்கிட்டிருங்க. எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு" என்று அவனிடம் கூறி விட்டு, காப்பி தம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் மீனா.
உடை மாற்றிக் கொண்டு வந்த கதிரேசன், தனஞ்சயனுக்கு எதிரே உட்கார்ந்தான். "அப்புறம் எப்படி இருக்கே?"
கதிரேசன் தனஞ்சயனின் ஒன்று விட்ட சகோதரன் - இரண்டு விட்ட சகோதரன் என்றும் கூறலாம், ஏனெனில் தனஞ்சயனின் தந்தையும், கதிரேசனின் தந்தையுமே ஒன்று விட்ட சகோதரர்கள்தான்! கதிரேசனே பலமுறை தனஞ்சயனை 'செண்ட் கசின்' என்றுதான் குறிப்பிடுவான்.
ஆயினும், இருவருக்குமிடையே உறவைத் தாண்டிய ஒரு நட்பு இருந்தது. அதனால், கதிரேசனுக்குத் தன் மற்ற உறவினர்களுடன் இல்லாத நெருக்கம் தனஞ்சயனிடம் இருந்தது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும், அவ்வப்போது தொலைபேசியில் உரையாடிக் கொள்வார்கள்.
"உன் பிசினஸ் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றான் கதிரேசன்.
"உனக்குத்தான் தெரியுமே, கொஞ்ச நாளா எதுவும் சரியா இல்ல. வேலையை விட்டுட்டு ஏன் பிசினஸ் ஆரம்பிச்சேன்னு அம்மா தினமும் புலம்பிக்கிட்டிருக்காங்க."
"கவலைப்படாதே! எல்லாம் சரியாயிடும். எங்கேயோ போயிடுவ, பார்!" என்றான் கதிரேசன், ஆறுதலாக.
சற்று நேரம் மௌனமாக இருந்த தனஞ்சயன், "கதிரேசா! என்னைத் தப்பா நினைச்சுக்காதே! உங்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்" என்றான்.
"என்ன உதவி?"
"பிசினஸ் சரியா இல்லாததால, நிறைய கேஷ்ஃப்ளோ ப்ராப்ளம்... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள என் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். எவ்வளவோ முயற்சி பண்ணியும், என்னால பணம் புரட்ட முடியல!"
தனஞ்சயன் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவன் கையைப் பிடித்த கதிரேசன், "எவ்வளவு வேணும்னு மட்டும் சொல்லு!" என்றான்.
"முப்பதாயிரம்" என்றான் தனஞ்சயன், பலவீனமான குரலில்.
அதற்குள்ளேயே கைபேசியை எடுத்து இயக்க ஆரம்பித்து விட்ட கதிரேசன், சில விநாடிகளில், "ஜீபே பண்ணிட்டேன். இதுக்காகவா இவ்வளவு தயங்கின? எங்கிட்ட கேக்கறதில உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?" என்றான்.
"இல்லை. நாம நெருக்கமாப் பழகினாலும், உங்கிட்ட இதுவரையிலும் நான் எந்த உதவியும் கேட்டதில்லை!"
"அதனால என்ன? எல்லாத்துக்கும் முதல் தடவைன்னு ஒண்ணு இருக்கு இல்ல? உனக்கு வேற எந்த உதவி வேணும்னாலும், தயங்காம எங்கிட்ட கேளு!"
கதிரேசனின் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சில நிமிடங்களுக்கு முன் தயக்கத்துடனும், அவமான உணர்வுடனும் உள்ளே சென்ற தான், இப்போது மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும், ஒருவகைப் பெருமையுடனும் கூட வெளியேறுவதை நினைத்தபோது, தனஞ்சயனுக்கு வியப்பாக இருந்தது.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)
குறள் 1052:
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
No comments:
Post a Comment